வர்த்தக உலகில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு, தற்போதைய அளவைக் காட்டிலும் அடுத்த ஈராண்டுகளில் இன்னும் அதிகமாக அங்கம் வகிக்கும் என்று முன்னுரைக்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவைக் கூடுதலாகப் பயன்படுத்த பல்வேறு உலக வர்த்தகங்களின் அதிகாரிகள் கடப்பாடு கொண்டிருப்பதாக அண்மையில் வெளிவந்த ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.
ஐபிஎம் நிறுவனத்தின் வர்த்தக மதிப்பு நிலையம் நடத்திய அந்த ஆய்வில் 2,000க்கும் மேற்பட்ட தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்.
அடுத்த ஈராண்டுகளில் செயற்கை நுண்ணறிவுக்கான முதலீடுகளும் இருமடங்கிற்கும் அதிகமாகும் என்றும் அந்த ஆய்வு முன்னுரைக்கிறது. நிறுவனத் தலைவர்கள், தங்கள் நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவைக் கூடுதலாக ஒருங்கிணைக்க முகவர்களைப் பணியில் அமர்த்தியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான மாற்றங்களால் தங்கள் ஊழியரணியில் 31 விழுக்காட்டினருக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மறுபயிற்சி அல்லது திறன் மறுமேம்பாடு தேவைப்படும் என்று தலைமை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
திறன் பற்றாக்குறையைச் சரிசெய்ய தானியக்கத் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தப்போவதாக நிறுவனத் தலைவர்களில் 65 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஓராண்டுக்கு முன்பில்லாத செயற்கை நுண்ணறிவு வேலைகளுக்காக இந்த ஆண்டு ஆள்சேர்ப்பதாகவும் வர்த்தகத் தலைவர்களில் 54 விழுக்காட்டினர் கூறுகின்றனர்.
குறுகிய காலத்தில் செலவுகள் ஏற்பட்டாலும் செயற்கை நுண்ணறிவை விரைவாகத் தழுவுவதில் வர்த்தகத் தலைவர்கள் முனைப்பு காட்டுவதாக ஐபிஎம் கன்சல்டிங் தலைவர் முகமது அலி தெரிவித்தார். நிலையற்ற சூழலிலும் புத்தாக்கத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளும் அமைப்புகள் வலுவடையும் என்று அவர் கூறினார்.