உலக அளவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் அதிலிருந்து உடலையும் சருமத்தையும் காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சூரியனின் ‘யுவிஏ’, ‘யுவிபி’ கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதற்கு ‘சன்ஸ்கிரீன்’ உபயோகிப்பது சிறந்த வழியாகும்.
சூரிய ஒளி குறித்த பயம் இருந்தாலும், அதிலுள்ள வைட்டமின் டி உடலுக்கு இன்றியமையாதது என்று மருத்துவ உலகு குறிப்பிடுகிறது. இந்நிலையில், ‘சன்ஸ்கிரீன்’ பயன்பாடு, வைட்டமின் டி உடலில் சேர்வதைத் தடுக்கும் எனும் கவலையும் பலருக்கு உள்ளது.
அதுகுறித்த தெளிவு பிறக்க ‘சன்ஸ்கிரீன்’ குறித்த புரிதல் ஏற்படுவது அவசியம்.
‘சன்ஸ்கிரீனில்’ இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, அனைவரும் பரவலாக உபயோகிப்பது. சருமத்தில் தடவியவுடன் ‘மாய்ஸ்ச்சரைசர்’ போல உள்ளிழுத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை.
இது, சூரியக் கதிர்களை உள்வாங்கி அவற்றின் பாதிப்பு சருமத்தை தாக்காமல் பாதுகாக்கும். பொதுவாக, சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து செயல்படத் தொடங்கும் என்பதால், வெளியே செல்வதற்கு முன்பே தடவிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
இரண்டாவது வகை, அடர்த்தியான ‘சன்ஸ்கிரீன்’. சருமத்தில் தடவினால், உள்ளிழுத்துக் கொள்ளாமல் மேலே ஒரு படலம்போல படியும். நீண்டநேரம் வெயிலில் விளையாடும் வீரர்கள் முகத்தில் இதனைக் காணலாம்.
இது, சூரியக் கதிர்களை உள்ளே ஊடுருவ விடாமல் தடுப்பாகச் செயல்படும்.
எனவே, அன்றாடம் பயன்படுத்தப்படும் ‘சன்ஸ்கிரீன்’, வைட்டமின் டி கிடைப்பதற்குத் தடையாக இருக்காது. அத்துடன், முகத்திலும் கைகளிலும் மட்டுமே தடவிக்கொள்வதால் உடலின் பிற பகுதிகள் மூலம் வைட்டமின் டி சேர்வதில் தடையும் இல்லை.
‘சன்ஸ்கிரீன்’ தேர்வு செய்யும் முறை
வியர்வையால் கரையாத தன்மை கொண்ட ‘வாட்டர்/ஸ்வெட் ரெஸிஸ்டண்ட்’ ‘சன்ஸ்கிரீன்’ சிறந்தது. சருமத் துவாரங்களை அடைக்காத ‘சன்ஸ்கிரீன்’ வகை, துவாரங்களை அடைக்காதபடி இருக்க வேண்டும். இது, முகப்பருக்கள் வராமல் காக்கும்.
‘எஸ்பிஎஃப்’ எனும் சன் புரொடெக்ஷன் ஃபேக்டர் அதிகமுள்ள ‘சன்ஸ்கிரீன்’ தேர்வு செய்வது, அதிக நேரம் சருமத்தைப் பாதுகாக்கும். ‘எஸ்பிஎஃப் 30’ கொண்ட ‘சன்ஸ்கிரீன்’ அடிப்படையானது. ‘எஸ்பிஎஃப் 50’ வகை 97 விழுக்காட்டு பாதுகாப்பும் ‘எஸ்பிஎஃப் 100’ வகை 98 விழுக்காட்டுப் பாதுகாப்பும் அளிக்கும்.
ஒரு நாளைக்கு இருமுறை பயன்படுத்துவது நல்லது. முழு நாளும் வெயிலில் இருக்க நேரிட்டால் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை பயன்படுத்துவது நல்லது. அவ்வாறான நேரங்களில் ‘ஸ்பிரே’ வகை ‘சன்ஸ்கிரீன்’ உபயோகிக்கலாம்.
ஒவ்வொரு சருமத்திற்கும் வெவ்வேறு வகை ‘சன்ஸ்கிரீன்’ சிறந்தது என்பதால், சிலவற்றைப் பயன்படுத்திப் பார்த்து, சருமத்திற்குப் பாதிப்பில்லை எனபது தெரிந்தால் தொடர்ந்து உபயோகிக்கலாம்.
வைட்டமின் டி குறைபாடு இருந்தால், உரிய மருத்துவ ஆலோசனையுடன் இணை உணவுகள், மருந்துகளை உட்கொள்ளலாம்.