தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சுவடுகள்: செய்தியின் 60 ஆண்டுப் பயணம்’ ஆவணப்படம்

3 mins read
1481bd00-9d85-4066-98c8-43262aaadb51
உலக நடப்புகளுக்காக வானொலியைச் சுற்றி கூட்டம் குழுமிய காலத்திலிருந்து செய்திகளைக் காணொளியாகக் கண்முன் நிறுத்தும் தொலைக்காட்சிக் காலத்திற்கு முன்னேறி இன்று சமூக ஊடகத்தளங்களிலும் செய்திகள் வலம்வரும் காலம்வரை, செய்தியின் பல பரிமாணங்களும் ஆவணப்படத்தில் இடம்பெறும். - படம்: மீடியாகார்ப்
multi-img1 of 2

பல்லினச் சமூகமான சிங்கப்பூரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான தமிழ்ச் செய்தியின் 60 ஆண்டுப் பயணத்தைச் சித்திரிக்கும் 45 நிமிட ஆவணப்படத்தை மீடியாகார்ப் தயாரித்துள்ளது.

‘சுவடுகள்: செய்தியின் 60 ஆண்டுப் பயணம்’ எனும் இந்த ஆவணப்படம், ‘எஸ்ஜி60’ஐ முன்னிட்டு, வரும் ஜூலை மாதம் வசந்தம் ஒளிவழியில் ஒளிபரப்பாகும்.

மாணவர்களுக்குத் தமிழ் ஊடகத் துறையின் மரபை உணர்த்தும் நோக்கத்தில் பள்ளிகளுக்கும் இந்த ஆவணப்படம் கொண்டுசெல்லப்படும்.

சிங்கப்பூரில் 1924ல் வானொலி ஒலிபரப்புத் தொடக்கம், 1963ல் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளிலும் தொலைக்காட்சியின் தொடக்கம், 1970கள் முதல் படிப்படியாகத் தமிழ்ச் செய்திக்காக ஒதுக்கப்பட்ட நேரம் அதிகரிப்பு, 1995ல் பிரைம் 12 ஒளிவழித் தொடக்கம், 2008ல் புதிய ஒளிவழியாக வசந்தம் அறிமுகம், அண்மையில் அறிமுகமான தமிழ்ச் செய்தி செயலி போன்ற முக்கிய மைல்கற்களை ஆவணப்படம் காட்டும்.

“சிங்கப்பூரில் தமிழ்ச் செய்தித் துறை, அதனுடைய தொடக்கக் காலம், வளர்ச்சி, பற்றி முழுமையான ஆவணத்தைத் தயாரிக்க, தொடக்க காலத்திலிருந்து அனைத்தையும் சேகரித்தோம். சமூகத் தலைவர்கள், செய்தித் துறையினர், பொதுமக்களுடன் பேசினோம்,” என்றார் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவுத் தலைவர் ந. குணாளன்.

தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 29ஆம் தேதி இடம்பெற்ற ஆவணப்பட அறிமுக நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வருகையளித்தார் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணை அமைச்சர் தினே‌ஷ் வாசு தாஸ்.

தமிழ் வானொலிச் செய்தித் துறைக்கு அளப்பரிய பங்காற்றிய மூத்த வானொலிப் படைப்பாளர் அமரர் எஸ் பீட்டருக்கு நிகழ்ச்சியின் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மூத்த வானொலிப் படைப்பாளர் எஸ் பீட்டர் அண்மையில் மறைந்தாலும், அவருடைய குரல் இந்த ஆவணப்படம் மூலம் தொடர்ந்து ஒலிக்கும்.
மூத்த வானொலிப் படைப்பாளர் எஸ் பீட்டர் அண்மையில் மறைந்தாலும், அவருடைய குரல் இந்த ஆவணப்படம் மூலம் தொடர்ந்து ஒலிக்கும். - படம்: ரவி சிங்காரம்

திரு பீட்டரின் பண்புகளை நினைவுகூர்ந்த அமைச்சர் தினே‌ஷ், “திரு எஸ் பீட்டர் சிங்கப்பூர்த் தமிழ் ஊடகத் துறையில் ஒரு சாதனையாளர். அவருடைய அயராத உழைப்பால் அவர் இத்துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டார்,” என்றார்.

“‘தமிழில் பேசுவோம்!’ என அவர் தொடங்கிய வானொலி நிகழ்ச்சி, படைத்த விளையாட்டு, தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சிகளைப் பலரும் அன்புடன் நினைவுகூர்ந்தார்கள். செய்தித்துறையினருக்கு அவர் ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். அவர் ஓய்வுபெற்றபிறகும் தொடர்ந்து பணியாற்றினார்,” என அஞ்சலி செலுத்தினார் திரு தினே‌ஷ்.

மூத்த வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ். பீட்டரின் மறைவை அடுத்து, அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.
மூத்த வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ். பீட்டரின் மறைவை அடுத்து, அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். - படம்: ரவி சிங்காரம்

தரமான செய்தியின் அவசியத்தையும் திரு தினே‌ஷ் வலியுறுத்தியதோடு, சிங்கப்பூரின் தமிழ் ஊடகங்கள் சமூகத்தை ஒன்றிணைக்கும் பாலமாகவும் நம்பகமான செய்தித் தளங்களாகவும் இருப்பதைப் பாராட்டினார்.

தற்போது தமிழ்ச் செய்தியில் துணைக்குறிப்பு எழுதுபவரான (subtitler) நந்தினி அழகப்பன், 19, ஆவணப்படத்தில் நேர்காணல் காணப்பட்டவர்களில் ஒருவர். “நான் 2019ல் ‘ஒலி’யில் திருக்குறள் அங்கத்துக்கு நெறியாளராகத் தொடங்கி, பின்பு ‘தமிழ்ச் செய்தி’யில் இளைய பத்திரிகையாளராகச் சேர்ந்தேன். இதனால், எதிர்காலத்திலும் ஊடகத் துறையில் பணியாற்ற விரும்புகிறேன்,” என்றார்.

“பல முடிவுகளை எடுக்க மக்கள் செய்தியை நம்பியுள்ளனர்,” என்றார் ஆவணப்படத்தில் இடம்பெறும் மற்றொரு இளைய செய்தியாளர் பாவை. 

மின்னிலக்கப் பிரிவை வழிநடத்தும் மூத்த செய்தியாசிரியர் மீனா ஆறுமுகம், “காலத்துக்கு ஏற்றாற்போல் தமிழ்ச் செய்தி மாறுகிறது. பலரும் நீளமான பத்திகளை விரும்புவதில்லை. அதனால் செய்திகளைச் சுருக்கமாக வழங்குகிறோம். அடுத்தடுத்து செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களையும் கையாள்வோம்,” என்றார்.

நிகழ்ச்சிக்குப் பார்வையாளராக வந்த ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழாசிரியர் ஷாநவாஸ், தம்மைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மைய ஊடகங்களுடன் கூட்டுமுயற்சிகள் அதிகரித்தால் பல நன்மைகள் விளையும் என்றார்.

வார இறுதிகளில் 45 நிமிடங்களாகத் தமிழ்ச் செய்தியை நீட்டிக்கமுடியுமா எனக் கேள்வி எழுப்பினார் பார்வையாளர் சுந்தர் பிலவேந்தர்ராஜ்.

அதற்கு, தொலைக்காட்சியைப் பார்ப்போர் எண்ணிக்கை வெகுவாகக் குறையும்போது அதிலேயே கவனம் செலுத்துவது சாத்தியமன்று என்று திரு குணாளன் பதிலளித்தார்.

“மக்கள் எங்கிருக்கிறார்களோ நாம் அங்குதான் செல்ல வேண்டும்,” என்றார் அவர்.

அவ்வகையில், ஏறக்குறைய ஏழெட்டுப் பள்ளிகளின் மாணவர்களுக்கு, இந்த ஆவணப்படத்தை 20-30 நிமிடங்களுக்குச் சுருக்கித் திரையிடத் திட்டங்கள் உள்ளதாக திரு குணாளன் கூறினார்.

“செய்தி ஊடகம் பலவழிகளில் மாணவர்களுக்கு உதவுகிறது. மாணவர்களின் கற்றல் கற்பித்தலுக்கு ஊடகச் செய்தி, பத்திரிகைகளை ஆசிரியர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த ஆவணப்படம் மூலம் மாணவர்கள் தொடர்ந்து பயனடைவர்,” என்றார் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார்.

குறிப்புச் சொற்கள்