வளமான வரலாறு, துடிப்புமிக்க பண்பாடு, ஆன்மீகம் போதிக்கும் புனிதத் தலங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக உலக அதிசயங்களில் ஒன்றின் இருப்பிடம் என நெஞ்சை அள்ளும் கலாசாரப் பெட்டகமாகத் திகழ்கிறது வடஇந்திய மாநிலமான உத்தரப் பிரதேசம்.
இத்தகைய சிறப்புவாய்ந்த உ.பி. மாநிலத்தைச் சுற்றிப் பார்க்க சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது அம்மாநில சுற்றுலாக் கழகம்.
சிங்கப்பூரில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை நடைபெற்ற உத்தரப் பிரதேசத்தின் சுற்றுலா நகரங்கள் குறித்த சாலைக் காட்சி நிகழ்வில், ‘புனித பூமி தொடங்கி காதல் சின்னம் வரை’ ஒட்டுமொத்தமாக தன்னகத்தே கொண்டுள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் குறித்து இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தின் (Indian Railway Catering and Tourism Corporation - IRCTC) அதிகாரிகள் உரையாற்றினர்.
“புத்தர் முதன்முதலில் சொற்பொழிவாற்றிய சாரநாத், இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் அயோத்தி, உலக அதிசயமான தாஜ் மகால், கிருஷ்ண பூமி என்று குறிக்கப்படும் பிருந்தாவனம், பேரரசர்களால் நிறுவப்பட்ட அரண்மனைகள், கோட்டைகள் என பழைமை பேசும் புகழ்பெற்ற நினைவுச் சின்னங்கள் நிறைந்தது உ.பி.
“இதைத் தவிர நகரும் அரண்மனை என்று வருணிக்கப்படும் ‘மகராஜ் எக்ஸ்பிரஸ்’ சொகுசு ரயிலின் வசதியான அறைகளில் அமர்ந்தவாறே உத்தரப் பிரதேச மாநிலத்தின் சுற்றுலா அனுபவங்களில் துய்க்கலாம். எனவே, கட்டாயம் உத்தரப் பிரதேசத்திற்கு வருகை தாருங்கள்,” என்று அழைப்பு விடுத்தார் ‘ஐஆர்சிடிசி’ குழுமப் பொது மேலாளர் ஸாஃபர் ஆலம்.
இந்துக்களால் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் மகா கும்பமேளா நிகழ்ச்சி 2025ஆம் ஆண்டு உ.பி. மாநிலத்தில் நடைபெறவுள்ளதாகக் குறிப்பிட்ட சுற்றுலாக் கழகம், அதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்துவருவதாகவும் தெரிவித்தது.
பாதுகாப்பு, போக்குவரத்துச் சிரமங்கள் குறித்த தமிழ் முரசின் கேள்விகளுக்குப் பதிலளித்த ‘ஐஆர்சிடிசி’ சுற்றுலா மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு கூடுதல் பொது மேலாளர் கமல் கத்தியட், “சுற்றுலா வரும் வெளிநாட்டினர் அச்சமின்றி பயணம் செய்ய மேம்பட்ட பாதுகாப்பு கொண்ட பயண வசதிகளைச் செய்து தரும் நம்பகமான, அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா முகவைகள் உள்ளன. அனைத்துலகப் பயணிகளுக்கு உதவிட, மொழிபெயர்க்க, பயிற்சிபெற்ற வழிகாட்டிகள் உள்ளனர். அரசாங்கம் அதற்கான பல்வேறு ஆதரவுகளை அயராது வழங்குவதால் மக்கள் அஞ்ச வேண்டாம்,” என்று சொன்னார்.
இயற்கை ஆர்வலர்களுக்குக் களிப்பூட்டும் விலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயங்கள், அடர்ந்த வனப்பகுதிகள், பூங்காக்கள், வழிந்தோடும் இயற்கையின் வசிப்பிடமாகத் திகழும் ஆறுகள் எனக் கண்கவர் சுற்றுலாத் தலங்களை வெளிநாட்டினர் சிரமமின்றிக் கண்டுகளிக்க மேம்பட்ட போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் சுற்றுப்பயணிகள் பயமின்றி பயணம் செய்யலாம் என்று சுற்றுலாக் கழகம் விளக்கியது.
தொடர்புடைய செய்திகள்
மேல்விவரங்களுக்கு https://upstdc.co.in இணையத் தளத்தை நாடலாம்.