நந்தினி சுவாமிநாத ராஜா
இரண்டே இரண்டு வாரங்கள் போதும். சமூக ஊடகங்களை இந்த இரு வாரங்களுக்குத் தவிர்த்தாலே உடல்நலம், மனநலம், பிறருடன் பழகும் ஆற்றல் ஆகியவை மேம்பட்டுவிடும்.
திறன்பேசிகளின் மீதும் சமூக ஊடகங்களின் மீதும் உள்ள மோகம் இதனால் குறையும் என்று ‘பிஹேவியரல் சயின்சஸ்’ (Behavioural Sciences) அறிவியல் சஞ்சிகையில் ஆக அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு குறிப்பிடுகிறது.
மின்வெளியில் தொடர்புகளை அதிவேகத்தில் உண்டாக்கும் சமூக ஊடகங்கள், பலரது அன்றாட வாழ்க்கையில் அங்கமாகிவிட்டன. உலகநடப்புகள் முதல் நண்பர்களும் குடும்பத்தினரும் சாப்பிடும் உணவு உள்ளிட்ட உடனடித் தகவல் உள்ளங்கையில் அடக்கம்.
இருப்பினும் வரம்பின்றிச் சமூகத்தளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளும் ஏராளம். தூக்கம் கெடுதல், கவலை, நேரத்தை விரயமாக்குதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.
இயல்பு வாழ்க்கையிலிருந்து நாம் இப்படி மெல்ல விலகும்போது துணிச்சலுடன் திறன்பேசியைப் புறம்தள்ளுவது சரியான தீர்வாகக்கூடும்.
ஒப்பிடுவதால் குழப்பம்
சமூக ஊடகங்களில் பலர் தங்கள் சொந்த வாழ்க்கையை மிகைப்படுத்திக் காட்ட முயல்வதை அவ்வப்போது காணலாம்.
நிற, ஒளி மாற்றங்களைச் செய்யும் ‘ஃபில்டர்’ (filter) முறையால் திருத்தப்பட்ட படங்கள், நேரில் தோன்றுவதைப் பார்ப்பதைவிட மெலிந்த உருவமாகத் தெரிவதற்கு கேமராவை குறிப்பிட்ட கோணங்களிலிருந்து மட்டும் எடுப்பது போன்ற உத்திகளின்வழி சமூக ஊடகப் பயனாளர்கள், மின்னிலக்க உலகில் தங்கள் குறைகளை மறைக்க முயல்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இது வேறு சிலருக்குப் பொறாமையை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து வரும் அறிவிப்புகளாலும் புதுப்பிப்புகளாலும் அவர்களது மனத்தவிப்பு அதிகரிக்கிறது.
கட்டுப்பாடு தந்த மேம்பாடு
கனடாவின் ஒன்டாரியோ நகரிலுள்ள வின்சல் பல்கலைக்கழகத்தில் 18 வயது முதல் 30 வயது வரையிலான சுமார் 31 பெரியவர்கள் பங்கேற்ற ஓர் ஆய்வின் முடிவுகளின்படி, 30 நிமிடங்களுக்கு மட்டும் சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டோருக்குப் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.
பங்கேற்பாளர்களின் தூக்கத்தின் தரம் மேம்பட்டது. அத்துடன், வாழ்க்கை மீதான அவர்களது மனநிறைவு அதிகரித்தது. மன உளைச்சலும் குறைந்தது.
பங்கேற்பாளர்களில் பலர், சமூக ஊடகங்களிலிருந்து வரும் அழுத்தத்திலிருந்து விடுபட்ட நிலையில் நிம்மதி உணர்வதாக தங்களைப் பேட்டி கண்ட ஆய்வாளர்களிடம் கூறினர்.
உண்மைத் தொடர்பு, சுய உணர்வு
சமூக ஊடகங்களில் மணிக்கணக்காகக் காணொளிகளைப் பார்ப்பதைத் தவிர்த்து அளவோடு (அரை மணி நேரம்) பார்ப்பது நல்லது என்பது மேற்கண்ட ஆய்விலிருந்து தெரிகிறது.
ஒருவர் தமது உணர்ச்சிகளுக்கும் பழக்கங்களுக்கும் முன்னுரிமை தருவது உண்மையான மகிழ்ச்சிக்கு வித்திட்டு சிறந்த தீர்மானங்களை எடுக்க வழிவகுக்கும்.
இதுவே நமக்கு நாமே செய்துகொள்ளும் ‘டிடாக்ஸ்’ எனப்படும் நச்சுத்தன்மை அகற்றும் செயல்முறையாகும்.

