சுல்தான் பள்ளிவாசல் - தமிழ் முஸ்லிம் ஜமாஅத்: சிங்கப்பூரின் 60வது தேசிய தின விழா கொண்டாட்டம்

மின்சிகரெட்டுகளின் தீமை குறித்து மாணவர்களுக்குச் சிறப்புரை

சுல்தான் பள்ளிவாசல் - தமிழ் முஸ்லிம் ஜமாஅத்: சிங்கப்பூரின் 60வது தேசிய தின விழா கொண்டாட்டம்

2 mins read
95bd2967-c6d6-4417-bfc4-305bfa9b1cf0
தமிழ் முஸ்லிம் ஜமாஅத், சுல்தான் பள்ளிவாசல் ஆகியவை இணைந்து, தங்களின் நான்காவது வருடாந்திர விழாவாக, சிங்கப்பூரின் 60வது தேசிய தினத்தை சுமார் 400 பேர் முன்னிலையில் கொண்டாடின. - படம்: தமிழ் முஸ்லிம் ஜமாஅத்

தமிழ் முஸ்லிம் ஜமாஅத் மற்றும் மஸ்ஜித் சுல்தான் இணைந்து சிங்கப்பூரின் 60வது தேசிய தின விழாவை மஸ்ஜித் சுல்தான் அரங்கில், ஆகஸ்ட் 31, 2025 அன்று சிறப்பாகக் கொண்டாடின.

சுமார் 400 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்வு, மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை மற்றும் தேவைப்படுபவர்களுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

நான்காவது ஆண்டாக நடத்தப்படும் இந்த விழாவில், மஸ்ஜித் சுல்தானின் இருநூறாவது ஆண்டு நிறைவு மற்றும் தமிழ் முஸ்லிம் ஜமாஅத்தின் 75வது ஆண்டு ஆகிய முக்கிய நிகழ்வுகள் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் $54,000 கல்வி உதவித்தொகையாக விநியோகிக்கப்பட்டது.
மொத்தம் $54,000 கல்வி உதவித்தொகையாக விநியோகிக்கப்பட்டது. - படம்: தமிழ் முஸ்லிம் ஜமாஅத்

கடந்த நான்கு ஆண்டுகளில் 25 குடும்பங்களுக்கு உதவிய இந்த அமைப்பு, இந்த ஆண்டு விண்ணப்பித்த 216 மாணவர்களுக்கும் உதவிகளை வழங்கியுள்ளது. மொத்தம் $54,000 கல்வி உதவித்தொகையாக விநியோகிக்கப்பட்டது. இதில் தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் $100 முதல் அதிகபட்சம் $550 வரை வழங்கப்பட்டது.

நிகழ்வின் சிறப்பு விருந்தினராக நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சையத் ஹாரூன் அல்ஹப்சி பங்கேற்று, மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை மற்றும் குடும்பங்களுக்கு நிதியுதவிகளை வழங்கினார்.

மேலும், மாணவர்களுக்குப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு சார்பாகத் துணை சூப்பரிண்டென்டன் சுரேந்திரன், போதைப்பொருள் தோய்ந்த சிகரெட்டுகள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு உரையை வழங்கினார்.

சமூகத்துக்குச் சேவை ஆற்றியவர்களுக்கு விருதுகள்

சமூகத்திற்கும் மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் சேவை செய்த சிறந்த ஆளுமைகளுக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஆறு பேருக்கு ‘சிறந்த குடிமக்கள் விருது’ வழங்கப்பட்டதுடன், ஒருவருக்குச் சிறப்பு அங்கீகாரமும் அளிக்கப்பட்டது.

சிறந்த குடிமக்கள் விருது பெற்றவர்கள்: ஹாஜி எஸ். முஹம்மது அப்துல் ஜலீல் , ஹாஜி அமீரலி அப்தெஅலி, ஹாஜி டாக்டர். எச். முஹம்மது சலீம், ஹாஜி ஷைக் அலாவுதீன் பின் உஸ்மான், ஹாஜி என்.எஸ்.எஸ். முஹம்மது மீரான், மற்றும் ஹாஜி முஹம்மது ஜாஃபர் பின் பீர் முஹம்மது. மேலும், ஹாஜி பைமான் பின் சுபாங்கட் அவர்களுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது

ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த தமிழ் முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவர் முகம்மது கௌஸ், “இத்தகைய நிகழ்ச்சிகளில் எல்லோரும் கலந்துகொள்வது நல்லது” என்றும் கூறினார்.

மேலும் அவர், “வரும் அக்டோபர் 11ஆம் தேதி நடத்தவுள்ள மீலாது விழாவின்போது வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவ ஏற்பாடு செய்துள்ளோம். இதில் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

குறிப்புச் சொற்கள்
முஸ்லிம்பள்ளிவாசல்உதவிபோதைப்பொருள்