புத்தாண்டுக் கனவுகளுடன் இறை வழிபாடு

புத்தாண்டுக் கனவுகளுடன் இறை வழிபாடு

2 mins read
15f5f003-19dd-4bd7-9bf3-95f408f21562
வேலை நாளான திங்கட்கிழமையன்று கூட்டம் குறைவாக இருந்தபோதும் பலர் சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வழிபாடு செய்தனர். - படம்: கி.ஜனார்த்தனன்

சித்திரைப் புத்தாண்டு நாளன்று காலையில் பொதுமக்கள் பலரும் சிங்கப்பூரிலுள்ள பல்வேறு கோவில்களுக்குச் சென்று தங்கள் பிரார்த்தனைகளைச் செலுத்தினர்.

தமிழ் நாட்காட்டியின்படி இன்று சித்திரை மாதத்தின் முதல் நாள். இந்த ஆண்டு விசுவாவசு ஆண்டு என்று அழைக்கப்படுகிறது.

சிராங்கூன் வட்டாரத்தில் வசிக்கும் சந்தைப்படுத்துதல், விற்பனைத் துறை முகவர் குகன் கோபாலன், 28, வேலைக்குச் செல்லும் முன்னர் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.

இயன்றவரை திங்கட்கிழமைதோறும் கோவிலுக்குச் செல்வதாகக் கூறும் திரு கோபாலன், குணத்தளவில் மேன்மேலும் உயர்ந்து பிறர்க்கு இன்பம் சேர்ப்பவராகத் தொடர்ந்து இருக்க ஆசைப்படுவதாகக் கூறினார்.

இரண்டு மாதங்களில் வேலையிலிருந்து ஓய்வுபெறும் அலுவலக நிர்வாகி ரெங்காதேவி, 72, இவ்வாண்டுக்குள் தமது வீட்டைப் புதுப்பிக்க எண்ணுகிறார். “நான் ஆவலுடன் இருக்கிறேன், எல்லாமே நன்றாக அமைய வேண்டுமென இறைவனை வேண்டிக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

திரு குகனைப் போல இறைவனைத் தொழுது வேலைக்கு அவசரமாகச் செல்ல வேண்டியிருந்த கப்பல்துறை ஒருங்கிணைப்பாளர் சாந்தி சொர்ணவல்லி, 50, ஆலய தரிசனத்துடன் புத்தாண்டைத் தொடங்குவது மிக நல்லது எனக் கருதுகிறார். உடல்நலத்துடன் முழுமையான வாழ்க்கையை வாழவேண்டும் என்பது அவரது வேண்டுகோள்.

இவ்வாண்டில் வரப்போகும் எதுவாக இருந்தாலும் அதனைப் பக்குவத்துடன் ஏற்கும் எண்ணத்தை இறைப் பிரார்த்தனை மூலம் தம் மனத்தில் விதைக்க விரும்புவதாக வள்ளியம்மை சங்கர் கூறினார்.

“எல்லார்க்கும் பலம் தேவை. எங்களுக்கு இறைவன்தான் பலம்,” என்றார் கணவர் சங்கருடன் வந்திருந்த வள்ளியம்மை.

இலங்கையிலிருந்து முதன்முறையாக சிங்கப்பூருக்கு வந்து தம் உறவினர்களைக் காணும் ராதாகிருஷ்ணன் சுப்ரமணியம், 67, இங்கு முதன்முதலாகப் புத்தாண்டு கொண்டாடுகிறார்.

சிங்கப்பூரில் தமிழுக்கும் கோவில்களில் நல்ல முறையில் இடம் அளிக்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி அடைவதாக அவர் சொன்னார்.

இதற்கிடையே, இந்த விசுவாவசு ஆண்டில் பலரும் பதற்றங்களிலிருந்து மீண்டுவருவர் என்று சோதிடர் சிவகுமார் சேதுராஜா முன்னுரைத்திருக்கிறார். 

“உலகம் கோள்களின் அசைவுகளால் இயங்குவதாகப் பஞ்சாங்கம் கூறுகிறது. வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என ஐந்து அங்கம் கொண்டுள்ளது பஞ்சாங்கம்,” என்றார் திரு சிவகுமார்.

செப்டம்பர்வரை மழை குறைவாக இருக்கும் என்றும் அதன்பிறகு மழை அதிகமாக இருக்கும் எனப் பஞ்சாங்கப்படி அவர் கணித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்