தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகம் இந்த ஆண்டுக்கான தமிழ்மொழி விழா நிகழ்ச்சியை, மாணவர்களுக்குப் பயனுள்ள வகையில் மூன்று பிரிவுகளாக நடத்தியது.
மார்ச் 8ஆம் தேதி, பேச்சுப் பயிலரங்கும் அதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு மார்ச் 15ல் ஒரு போட்டியும் தேசிய நூலகக் கட்டடத்தில் நடத்தப்பட்டன.
போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசு வழங்குதல், வென்றவர்கள் பங்கேற்ற பட்டிமன்றம் போன்ற அங்கங்களுடன் இறுதி நிகழ்ச்சி, மே 17ஆம் தேதி மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது.
முன்னதாக போட்டிகள் உயர்நிலை 3,4 மாணவர்களுக்கும் தொடக்கக்கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.
முதல் பிரிவில் மணிகவிராஜ் செல்வமணி, சீதாலட்சுமி புத்தன் காவ்யா, ராஜ்பாபு ரசான் தரனேஷ் ஆகியோர் முதல் மூன்று பரிசுகளை (முறையே 150,100,80 வெள்ளி) வென்றனர்.
ஜெகந்நாதன் மோனிகா, முகமதுஹம்தான் பின் காதர் மொஹிதீன் ஊக்கப்பரிசாக (50,50 வெள்ளி) பெற்றனர்.
இரண்டாம் பிரிவில் ரவீந்திரன் மகாலட்சுமி, ரகுநந்தன், சுந்தரவடிவேல் பிரபவ் முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.
இறுதி நிகழ்ச்சியில் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
தமது சிறப்புரையில் தமிழின் ஆளுமை ஒவ்வொரு தமிழர் வீடுகளிலும் இருக்கவேண்டும் என்று அரங்கத்தினரின் பலத்த கைதட்டலுக்கிடையே அவர் குறிப்பிட்டார்.
வீட்டில் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்க பெற்றோர் அன்றாடம் நேரம் ஒதுக்கவேண்டுமென்று வலியுறுத்திய அவர், தம் மூன்று பிள்ளைகளுக்கும் தாம் அவ்வாறு நேரம் ஒதுக்குவதாகக் குறிப்பிட்டார்.
கவிஞர் மகுடேசுவரனின் மாணவர் பாசறை அமைப்பு நடத்திய ‘சொல் தமிழ்ச்சொல்’ போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பரிசு பெற்றனர்.
இறுதியாக நடந்த பட்டிமன்றத்தின் தலைப்பு இன்றைய இளையர்கள் பாரம்பரிய உணவை உண்கிறார்களா ஒதுக்குகிறார்களா என்பதாகும்.
உண்கிறார்கள் என்ற அணியில் திருமதி சக்திதேவி, செல்வன் ரகுநந்தன், செல்வி சு.பு.காவ்யா ஆகியோரும் ஒதுக்குகிறார்கள் என்ற அணியில் திருமதி நபிலா, செல்வன் ராஜ், செல்வி மகாலட்சுமி ஆகியோரும் வாதிட்டனர். நடுவராக இருந்து பட்டிமன்றத்தைச் சிறப்பாக வழிநடத்தினார் முனைவர் ராஜி ஸ்ரீநிவாசன்.