பண்பாட்டுப் பாலமாக விளங்கும் மொழிபெயர்ப்பு

2 mins read
f92759f7-e188-4f63-9d26-da0b073123a7
மொழிபெயர்ப்பு பற்றி பகிரும் மொழிபெயர்ப்பாளர் லதா அருணாச்சலம். -  படம்: காமினி ஹஷ்வின்
கவிதைகளைப் பகிரும் எழுத்தாளர் தமயந்தி.
கவிதைகளைப் பகிரும் எழுத்தாளர் தமயந்தி. -  படம்: காமினி ஹஷ்வின்

இவ்வாண்டின் சிங்கப்பூர் எழுத்தாளர் திருவிழா ‘வருங்காலத்தின் வடிவம்’ என்ற கருப்பொருளில் நடந்தேறியது. 

இலக்கியம், அடையாளம், தொழில்நுட்பம், கதை சொல்லலின் எதிர்காலம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இத்திருவிழா, நவம்பர் 7 முதல் 16 வரை நடைபெற்றது. அதில் 200க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன; 300க்கும் அதிகமான உள்ளூர், அனைத்துலகப் படைப்பாளர்கள் பங்கேற்றனர்.

நவம்பர் 8ஆம் தேதி தி ஆர்ட்ஸ் ஹவுசில் கவிமாலை சிங்கப்பூர் அமைப்புடன் இணைந்து ‘கவிதை சொல்லும் கதைகள்’ நிகழ்வு நடைபெற்றது. கவிமாலை தலைவர் அ. இன்பா, சிறுகதை எழுத்தாளரான தமயந்தி கலந்துகொள்வதால், கவிதைகளோடு கதைகளைப் பற்றியும் பகிர முடியும் என்றும் மாணவர்களிடையே தமிழ்க் கவிதைகளையும் கவிஞர்களையும் உருவாக்குவதே தங்கள் அமைப்பின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

சிறுகதை எழுத்தாளர் தமயந்தி, 50, கட்டுப்பாடு நிறைந்த சமூகத்தில் தான் வளர்ந்ததாகவும், நிராகரிப்புகளால் ஏற்பட்ட வேதனையே தன்னை எழுத வைத்ததாகவும் கூறினார்.

மேலும், “அந்த வலிகளின் மொழிபெயர்ப்புதான் என் கதைகள்,” என்று அவர் சொன்னார். பணரீதியாகவும் மனரீதியாகவும் எழுத்தாளராக வாழ்வது சிரமம் என்றும் அவர் பகிர்ந்து கொண்டார்.

அதே நாளில், ‘யாதும் ஊரே: மொழிபெயர்ப்பின் வழியே உலக இலக்கியம்’ என்ற கலந்துரையாடல் நடந்தது. வாசகர் வட்ட அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சித்ரா ரமேஷ், 63, இடப்பெயர்ச்சி நிகழும் இக்காலத்தில் மற்ற ஊரின் மொழி, கலாசாரத்தைப் புரிந்துகொள்ள மொழிபெயர்ப்பு ஒரு பாலமாகச் செயல்படுகிறது என்றார். மேலும், தாய்மொழியைத் தவிர வேறுசில மொழிகளைக் கற்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

மொழிபெயர்ப்பாளர் லதா அருணாச்சலம் தமது ஏழாண்டுகால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஆப்பிரிக்க இலக்கியத்தின் மீதான தமது ஈடுபாட்டைப் பற்றிப் பகிர்ந்துகொண்ட அவர், “அதிகம் அறியப்படாத ஆப்பிரிக்க நிலத்தின் நாவல்களையும் படைப்புகளையும் எழுத்தாளர்களையும் என்னால் முடிந்த அளவுக்குத் தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

மொழிபெயர்ப்பானது இலக்கியத்தில் மனிதநேயத்தை வளர்ப்பதுடன், புதிய போக்குகளையும் நடையையும் உருவாக்குகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்