தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது பவானி பகுதியில் உற்பத்தியாகும் ஜமக்காளம்.
இது தற்போது உலக அளவில் பேசப்படும் தலைப்பாக மாறியுள்ளது. சமூக ஊடகத்தில் செய்தியாகவும் காணொளிகளாகவும் பார்க்க முடிகிறது.
அதற்கு முக்கியக் காரணம், ஆடை அலங்கார வடிவமைப்பாளரான வினோ சுப்ரஜா, 45.
நல்ல கலையை அழியவிடக் கூடாது, மக்கள் அதைத் தொடர்ந்து பாராட்ட வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்ட வினோ, பவானி ஜமக்காளத்தை உலக மக்கள் கண்களுக்கு வித்தியாசமான முறையில் கொண்டுசேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
செப்டம்பர் 21ஆம் தேதி லண்டனில் உள்ள டிவான்சயர் ஸ்குவேரில் நடந்த ஆடை அலங்கார அணிவகுப்பில் ஜமக்காளத்தைக் கருப்பொருளாகக் கொண்டு தமது படைப்புகளை உலக மக்கள் கண்முன் கொண்டு வந்தார்.
ஜமக்காளத்தால் செய்யப்பட்ட உடைகளை மாடல் அழகிகள் அணிந்து வந்து அசத்தினர். மேலும், ஜமக்காளத்தாலான கைப்பைகள் உள்ளிட்ட பொருள்களும் பார்வைக்கு வைக்கப்பட்டன.
கவர்ச்சிகரமான ஆடை வடிவமைப்புத் துறையில் ஏன் ஜமக்காளத்தைக் கருப்பொருளாகப் பயன்படுத்தினீர்கள் என்று வினோவிடம் தமிழ் முரசு கேட்டது.
அதற்குப் பதிலளித்த வினோ, “இந்தியாவில் பல பிரபலமான கலைகளும் கலைஞர்களும் உள்ளனர். ஆனால். அவர்களுக்கு அதற்கேற்ற பாராட்டும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை. நல்ல கலைகளை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இதைச் செய்தேன்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
கலையுலகில் இந்தியர்களும் திறமையானவர்கள், அவர்களின் படைப்புகள் அனைவராலும் போற்றப்பட வேண்டும் என்றும் இவர் குறிப்பிட்டார்.
வீரநடை போட்ட சக்திவேல்
பல இனத்தவர்கள் அமர்ந்திருந்த லண்டன் ஆடை அலங்கார அணிவகுப்பு மேடையில் பவானி ஜமக்காளத்தின் பெருமையை அழகாக எடுத்துரைத்தார் வினோ.
மக்களுக்கு ஜமக்காளம் குறித்துத் தெரியவேண்டும் என்பதற்காக முதலில் ஒரு சிறிய மேடை நாடகத்தைக் காட்சிப்படுத்தினார். பின்னர் ஜமக்காளத்தினாலான ஆடைகளை மாடல் அழகிகளை அணியவைத்து கவனத்தை ஈர்த்தார்.
இறுதியாக, பவானி நெசவாளர் திரு சக்திவேல் பெரியசாமியுடன் மேடையில் வினோ வலம்வந்தார். 69 வயது திரு சக்திவேலின் கையில் கைராட்டையும் இருந்தது கூடுதல் சிறப்பு. இருவரின் படைப்பையும் கண்டு அரங்கத்தில் இருந்தவர்கள் பாராட்டு மழை பொழிந்தனர்.
“எனக்குக் கிடைத்த இந்த அங்கீகாரமும் பாராட்டும் அனைத்து நெசவாளர்களுக்கும் உண்டானது. இந்த முயற்சியால் நெசவாளர்கள் வாழ்க்கை சிறிய மேம்பாடு கண்டாலும் அது பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று திரு சக்திவேல் கூறினார்,” என்று வினோ குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திமுடிக்க கணவர் தீபக், வான்மதி ஜகன் உறுதுணையாக இருந்ததையும் வினோ சுட்டினார்.
தீரா ஆர்வம்
தற்போது ஐக்கிய அரபு சிற்றரசுகளில் வசிக்கும் வினோ, ஆடை அலங்கார வடிவமைப்பாளராவதற்கு முன்னர் கட்டட வடிவமைப்புத் துறையில் பட்டம் பெற்றவர்.
2011ஆம் ஆண்டு திருமணமான பிறகு சீனாவுக்குச் சென்ற இவர், பொழுதுபோக்கிற்காக ஷாங்காயில் உள்ள கல்லூரியில் ஆடை அலங்காரப் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.
முற்றிலும் புதிதான ஊர், மொழி, துறையெனப் பல சவால்கள் இருந்தாலும் புதிய வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்ட வினோ, படிப்படியாக முன்னேறினார்.
ஷாங்காயில் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திய இவர், முக்கியமான சில ஆடை அலங்கார அணிவகுப்புகளில் தமது படைப்பை மேடை ஏற்றினார்.
அதன் பின்னர் அமெரிக்காவின் டெட்ராய்ட்க்குச் சென்ற வினோ, சமூக ஊடகம்மூலம் தமது படைப்புகளை மக்களுக்குக் கொண்டு சேர்த்தார்.
துபாய் அனுபவம்
சமூக ஊடகத்தில் கிடைத்த வரவேற்பை உணர்ந்த வினோ, 2016ஆம் ஆண்டு துபாய் சென்றார். அங்கு ஆடை அலங்காரம் தொடர்பாக மேலும் பல தகவல்களைக் கற்றுக்கொண்டார்.
துபாய், வாய்ப்புகளை வழங்கினாலும் கடுமையான போட்டி இருப்பதை இவர் உணர்ந்தார். இதனால், ஆடை வடிவமைப்பின் விளம்பரப் பாடத்தையும் வினோ படித்தார்.
பல பெரும் நிறுவனங்களுக்கு மத்தியில் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த இவர், 2018ஆம் ஆண்டு நீடித்த நிலைத்தன்மை கொண்ட பொருள்களை நல்ல தரத்தில் வடிவமைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அதற்காக இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று நெசவாளர்கள் உள்ளிட்ட பல கலைஞர்களை இவர் சந்தித்தார். ஓராண்டு ஜமக்காளம் தொடர்பாக ஆய்வு நடத்திய வினோ, பின்னர் அதைப் பயன்படுத்தி ஆடைகளைத் தயாரித்தார்.
சிங்கப்பூரிலும் விற்பனை
நீடித்த நிலைத்தன்மை கொண்ட பொருள்களுக்குச் சிங்கப்பூரிலும் வரவேற்பு உள்ளது என்பதை அறிந்த வினோ, தஞ்சோங் பகார் வட்டாரத்தில் உள்ள சில கடைகளில் ஜமக்காளத்தில் ஆன கைப்பைகளை விநியோகம் செய்துவருகிறார்.
கலையும் கற்பனையும் சேர்ந்து ஒரு பொருளாக மாற்றி மக்களிடம் கொடுப்பது தமக்கு மட்டற்ற மகிழ்ச்சி தருவதாக இவர் கூறினார்.
தடுமாறும் ஜமக்காளம்
இருபது ஆண்டுகளுக்கு முன்னர், வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய பொருள்களின் பட்டியலில் ஜமக்காளத்திற்கும் தனி இடம் உண்டு.
திருவிழா, திருமணம், சடங்கு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் தற்போது ஜமக்காளத்தைக் காணமுடியும். ஜமக்காளம் என்றாலே பச்சை, சிவப்பு நிறங்கள்தான் கண் முன்வரும்.
இந்நிலையில், ஜமக்காளத்தின் உற்பத்தித் துறையில் இளையர்களின் நாட்டம் குறைந்து வருகிறது. மேலும், அதை வாங்குவோர் எண்ணிக்கையும் குறைவதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.


