செய்தித் துறையில் மொழிபெயர்ப்புப் பயிலரங்கு, அதனைத் தொடர்ந்த தமிழ் மொழிப் போட்டிகளுடன் களைகட்டியது இவ்வாண்டின் தமிழில் யோசி, தமிழில் வாசி போட்டி.
கடந்த ஜூலை 19ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் முதல் அங்கமாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற மொழிப்பெயர்ப்புப் பயிலரங்கு நடைபெற்றது.
அதில் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பது, செய்தியாளராக முக்கியப் பிரபலங்களிடம் கேட்கக்கூடிய கேள்விகளைத் தயார் செய்வது ஆகிய அங்கங்கள் இடம்பெற்றன.
அவற்றில் சிறப்பாகச் செய்த 20 மாணவர்களுக்குத் தமிழ் மொழிப் போட்டி நடைபெற்றது.
அதில், ஒரு சுற்றுலா வழிகாட்டியாக ஒரு தலத்தைப் பற்றிப் பார்வையாளர்கள் முன்னிலையில் இரண்டு நிமிடங்கள் விளக்க வேண்டும். மொழி ஆளுமை, சரளமான பேச்சு, தெளிவு ஆகியவற்றின் அடிப்படையில் சிறப்பாகச் செய்த ஆறு மாணவர்கள் வெற்றி வாகை சூடினர்.
மீடியாகார்ப் செய்தி நடப்பு விவகாரப் பிரிவு ஆண்டுதோறும் நடத்திவரும் இந்நிகழ்ச்சியின் நான்காம் பதிப்பில் வாகை சூடிய ஆறு மாணவர்களுக்குப் பற்றுச்சீட்டுகள் பரிசாக வழங்கப்பட்டன.
“மொழிபெயர்ப்பைத் தாண்டி, தாக்கம் ஏற்படுத்தக்கூடிய கதைகளைத் தங்கள் தாய்மொழியில் கூறவல்ல தன்னம்பிக்கை மிக்கவர்களை உருவாக்கும் நோக்கில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது,” என்றார் மீடியாகார்ப் செய்தி, நடப்பு, விவகாரப் பிரிவின் ஆசிரியர் ந குணாளன்.
தமிழ் இதழியலின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆற்றல் கொண்ட இளம் மாணவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதில் பெருமைகொள்வதாகவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், வெற்றியாளர்களுக்கு மீடியாகார்ப் செய்தி நடத்தவுள்ள ‘திறன்பேசிவழி இதழியல்’ தொடர்பான பயிலரங்கில் பங்கேற்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய 14 மாணவர்களுக்குப் பற்றுச்சீட்டும், போட்டியில் பங்கேற்றோருக்குப் பரிசுக் கோப்பைகளும் வழங்கப்பட்டன.