தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைதியான மனத்திற்கு தேநீர் தியானம்

2 mins read
0cdedaae-f6b8-419e-8f55-304c76c5bb09
பாரம்பரியமாகச் சில நாடுகளில் பின்பற்றப்படும் தேநீர் தியானம் மனநல மேம்பாட்டை ஊக்குவிக்கிறது. - படம்: இணையம்

பல நூற்றாண்டுகளாக ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வரும் ‘தேநீர் தியானம்’ (Tea Meditation) என்ற பழக்கம் தேநீர் தயார் செய்யும் கலையைத் தியானத்தோடு இணைக்கிறது.

ஐம்புலன்களின் செயல்பாடுகளையும் தூண்டி, வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பழக்க வழக்கமாக இது விளங்குகிறது.

தேயிலை, தேநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், சுற்றுப்புறம், எனத் தேநீர் தயாரிப்பின் வெவ்வேறு கூறுகளின் தரமும் இதில் கவனிக்கப்படும்.

பௌத்த சமயத்திலிருந்து முளைத்த இந்தப் பழக்கம், இன்றுவரை துறவற வாழ்வில் ஒரு முக்கியப் பங்கினை ஆற்றி வருகிறது.

தேநீர் தியானத்தின் செயல்முறை

மனநலத்திற்கு ஏற்றவாறு ஒரு தேநீர் வகையைத் தேர்ந்தெடுத்து, தேநீர் கொதிக்கும் நேரத்தில் எழும் ஓசைகளைக் கவனிக்கும் விதத்தில் தேநீர் தியானம் தொடங்குகிறது.

ஊலாங், மாட்சா போன்ற தேநீர் வகைகள் தேநீர் தியானத்தில் பிரபலமாகப் பயன்படுத்தப்படுகிறது.

உதாரணத்திற்கு, பல துறவிகள் தியானத்தில் உதவ ‘கிரீன் டீ’யைத் தேர்ந்தெடுப்பர்.

பாத்திரத்திலிருந்து கோப்பையில் கொதிக்கும் தேநீரை ஊற்றும்போது, தேநீர் நிறம் மாறுவதை கவனிக்கும் நேரத்தில் மனம் ஒருநிலைப்படுத்தப்படுகிறது.

மெதுவாகக் கோப்பையை ஏந்தி தேநீரை சுவைக்கும் நேரத்தில், உள்ளுணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எண்ணங்களைக் கவனிக்க வேண்டும்.

நிதானமாக அந்தப் பயணத்தை ரசித்து, முழுமையாக உணர்ந்து, மூச்சையும் கவனிக்க வேண்டும்.

தேநீரை அருந்தியபிறகு, மெதுவாக எழுந்து கைகால்களை அசைத்து, பின்னர் நீண்ட மூச்சு விட்டு தியானம் நிறைவு செய்யப்படுகிறது.

தேநீர் தியானத்தின் பயன்கள்

தேநீர் தயாரிப்பது முதல், அதைச் சுவைத்து முடிக்கும் வரை தியானம் செய்யும்போது, மனத்திற்கும் உடலுக்கும் இடையே ஒரு தொடர்பு உருவாகிறது.

வாழ்வின் பல கூறுகளை ரசித்து, களைப்பையும் சோம்பலையும் விட்டெறிந்து துடிப்புமிக்க வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க மக்களை ஊக்குவிக்கிறது இந்தப் பழக்கம்.

தொடர்ந்து தேநீர் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு மனநலம் மேம்படுவதோடு, மக்கள் நன்றி உணர்வோடு செயல்படவும் இப்பழக்கம் வழிவகுக்கிறது.

இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதாகவும் நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்