தொழில்நுட்ப அம்சங்கள் ஈர்க்கின்றன

தொழில்நுட்ப அம்சங்கள் ஈர்க்கின்றன

7 mins read
மின்சார வாகனங்களின் பெரும் ரசிகர்களாக ஜென் ஸீ கார் உரிமையாளர்கள் உள்ளனர் என்று கருத்தாய்வு கூறுகிறது.
d196cd98-05e7-4745-8097-4ffeb3714948
BYD Sealion 7 ரக மின்சாரக் காரின் தொலைதூரத்திலிருந்து இயக்கும் முன்கூட்டிய குளிரூட்டும் வசதியே தம்மை மிகவும் கவர்ந்த அம்சமாகக் கூறுகிறார் மனைவி ஏஞ்சலா டானுடன், 27, புகைப்படத்தில் காணப்படும் சொத்துச் சந்தை முகவர் கென்னடி யோங், 28. - படம்: கரோலின் சியா

வெயிலில் பல மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்தாலும் கூட, வெப்பம் தகிக்கும் காருக்குள் மீண்டும் நுழைய வேண்டிய அவசியமில்லை என்பதை கென்னடி யோங் மிகவும் வரவேற்கிறார்.

காரை எடுக்கத் தயாராகும் போதெல்லாம், இந்த 28 வயது சொத்துச் சந்தை முகவர் தனது தொலைபேசி மூலம் ‘ப்ரீ-கூலிங்’ எனப்படும் முன்கூட்டியே குளிரூட்டும் வசதியைச் செயல்படுத்துகிறார். அவர் கார் நிறுத்துமிடத்தை அடைவதற்குள், அவரது மின்சார வாகனம் (EV) ஏற்கனவே குளிர்ந்துவிடுகிறது.

ஆறு மாதங்களுக்கு முன்பு, பெட்ரோல் காரிலிருந்து மின்சார வாகனத்திற்கு மாற யோங்கைத் தூண்டிய அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். இதற்கு முன்பு அவர் மூன்று ஆண்டுகள் பழைய பெட்ரோல் காரை ஓட்டி வந்தார்.

தான் பரிசீலித்து வந்த பெட்ரோல் கார்களில் இல்லாத, மின்சார வாகனத்தின் தொழில்நுட்ப அம்சங்களால் யோங் ஈர்க்கப்பட்டதாகக் கூறுகிறார்.

அவரது இந்த அனுபவம், வசதி, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் கலவையால் ஈர்க்கப்பட்டு, மின்சார வாகனங்களின் தீவிர ஆதரவாளர்களாக உருவெடுத்துள்ள இளம் ஓட்டுநர்களிடையே ஏற்பட்டுள்ள பரந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

1,055 பெட்ரோல், ஹைப்ரிட் மற்றும் மின்சார கார் உரிமையாளர்களிடம் பிப்ரவரி 2026ல் நடத்தப்பட்ட ஆய்வில், ஜென் ஸீ ஓட்டுநர்களில் (18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள்) 77 விழுக்காட்டினர் மின்சார வாகன தொழில்நுட்பம் நம்பகமானது என்று கருதுகின்றனர்; மேலும் அவர்களில் 76 விழுக்காட்டினர் மின்சார வாகனங்கள் அன்றாடப் பயன்பாட்டிற்கு நடைமுறையானவை என்று கூறியுள்ளனர் — இது அனைத்து வயதினரையும் விட அதிகமாகும்.

அவர்களில் 85 விழுக்காட்டினர் மின்சார வாகனங்கள் கரியமில வெளிப்பாட்டைக் குறைக்க உதவும் என்று நம்புகின்றனர்.

எஸ்பிஎச் மீடியா, BYD இரு நிறுவனங்கள் இணைந்து இந்தக் கருத்தாய்வை நியமித்தன. இதற்கு பதிலளித்தவர்கள் கான்டார் புரொஃபைல்ஸ் ஆடியன்ஸ் நெட்வொர்க்கில் (Kantar Profiles Audience Network) இருந்து பெறப்பட்டனர். கான்டார் என்பது ஒரு தன்னிச்சையான சந்தை ஆராய்ச்சி நிறுவனமாகும்.

கூடுதல் வசதி

இந்தத் தொழில்நுட்ப மாற்றம் யோங்கின் அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு பொருந்துகிறது என்பதில் பெரிதும் உணரப்படுகிறது. காரை முன்கூட்டியே குளிரூட்டுவது மட்டுமல்லாமல், BYD செயலி மூலம் காரின் பெரும்பாலான உட்புற வசதிகளை ரிமோட் மூலம் கட்டுப்படுத்தவும், மின்கலன் அளவு மற்றும் மின்னூட்டம் ஆகும் நிலையை உடனுக்குடன் கண்காணிக்கவும் முடிகிறது.

அவர் தனது மனைவி மற்றும் பெற்றோரைத் தனது மின்சார வாகனத்தில் தொடர்ந்து அழைத்துச் செல்கிறார். மாதத்திற்கு கிட்டத்தட்ட 2,000 கிமீ பயணிக்கும் அவர், பொது மின்னூட்டிகளைப் பயன்படுத்தி மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு ஒருமுறை தனது காரை மின்னூட்டம் செய்கிறார்.

கார் மின்னூட்டம் ஆக எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் டயர் அழுத்தம் அல்லது ஸ்டீயரிங் சிஸ்டம் போன்ற வாகனத்தின் ஆரோக்கிய நிலைகளையும் இந்தச் செயலி மூலம் அவர் கண்காணிக்க முடியும். கதவுகள் பாதுகாப்பாகப் பூட்டப்பட்டுள்ளதா என்பதையும் அவர் சரிபார்த்துக் கொள்ள முடிகிறது.

இந்தத் தொழில்நுட்பம் சார்ந்த அனுபவத்திற்கு மாறுவதற்குச் சில காலம் பிடித்தது. “மின்சார வாகனம் வாங்கிய முதல் வாரத்தில், நான் சாவியை வெளியே எடுத்துச் சென்றேன்,” என்று யோங் கூறுகிறார். “பின்னர் தான் உணர்ந்தேன், அது பாக்கெட்டில் தேவையில்லாமல் சுமக்கும் ஒரு பொருள் என்று. தொலைபேசியைப் பயன்படுத்தப் பழகிய பிறகு, அது மிகவும் வசதியாகிவிட்டது.”

சிங்கப்பூரில் கார்களுக்கான ஆரம்பக்கட்ட வரிகள் அதிகமாக இருப்பதால், ஜென் ஸீ கார் உரிமையாளர்களுக்கு மலிவு விலை என்பது ஒரு முக்கியக் காரணியாக உள்ளது என்று வாகன தளமான Sgcarmart-இன் பொது மேலாளர் ஜூலியன் கோ கூறுகிறார். ஆனால், 2022ஆம் ஆண்டிலிருந்து இளம் வாங்குபவர்களிடையே மின்சார வாகனங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரிப்பதை அவர் கண்டுள்ளார். குறிப்பாக மின்சார வாகனங்கள் “அரிதான ஒன்றிலிருந்து இயல்பான ஒன்றாக” மாறியுள்ளன.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டின் முற்பாதியில், 27,144 புதிய கார் பதிவுகளில் 62.4 விழுக்காடு மின்சார வாகனங்கள். 2026ஆம் ஆண்டு முதன்முறையாக பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களை மின்சார வாகங்கள் முந்தின.

2040ஆம் ஆண்டிற்குள் தூய்மையான வாகனங்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்ற சிங்கப்பூரின் இலக்குக்கு ஏற்ப, 2030ஆம் ஆண்டுடன் புதிய பெட்ரோல் வாகனங்களின் பதிவு நிறுத்தப்படும்.

ஜூலியன் கோ கூறுகிறார்: “இளம் ஓட்டுநர்கள் பெரும்பாலும் வாகனங்களை பயனீட்டாளர் மின்னணு சாதனங்களைப் போலவே மதிப்பிடுகிறார்கள்: பயனர் தொடர்பு, இணைப்புத் திறன், செயலி செயல்பாடுகள், ஓட்டுநர் உதவிகள், ஓவர்-தி-ஏர் மேம்பாடுகள், மின்னிலக்க சாவிகள், ரிமோட் ப்ரீ-கூலிங் — இந்த அம்சங்கள் பாரம்பரிய பிராண்ட் மதிப்பை விட முக்கியத்துவம் பெறுகின்றன.”

இளம் ஓட்டுநர்கள் பெரும்பாலும் வாகனங்களை பயனீட்டாளர் மின்னணு சாதனங்களைப் போலவே மதிப்பிடுகிறார்கள்: பயனர் தொடர்பு, இணைப்புத் திறன், செயலி செயல்பாடுகள், ஓட்டுநர் உதவிகள், ஓவர்-தி-ஏர் மேம்பாடுகள், மின்னிலக்க சாவிகள், ரிமோட் ப்ரீ-கூலிங் — இந்த அம்சங்கள் பாரம்பரிய பிராண்ட் மதிப்பை விட முக்கியத்துவம் பெறுகின்றன.
வாகன தளமான Sgcarmart-இன் பொது மேலாளர் ஜூலியன் கோ

இதே போன்ற ஒரு போக்கை சீன மின்சார வாகன தயாரிப்பாளரான BYD நிறுவனமும் சிங்கப்பூர் சந்தையில் கவனித்துள்ளது.

“இளம் பயனீட்டாளர், குறிப்பாக மில்லெனியல்கள் (millennials) மற்றும் இளம் தொழில் வல்லுநர்களிடம் ஆர்வம் அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம். ஏனெனில் அவர்கள் புதிய தொழில்நுட்பங்களை எளிதில் ஏற்றுக்கொள்பவர்களாகவும் மின்மயமாக்கல் குறித்து நன்கு அறிந்தவர்களாகவும் இருக்கிறார்கள்,” என்று BYD சிங்கப்பூரின் நிர்வாக இயக்குநர் ஜேம்ஸ் இங் கூறுகிறார்.

2026ஆம் ஆண்டின் முற்பாதியில் பதிவு செய்யப்பட்ட 27,144 புதிய கார்களில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு BYD நிறுவனத்தைச் சேர்ந்தவை. இது சிங்கப்பூரில் அதிகம் விற்பனையாகும் கார் பிராண்டாக உள்ளது.

35 வயதுக்குட்பட்ட ஓட்டுநர்கள் BYD சிங்கப்பூரின் வாடிக்கையாளர்களில் கிட்டத்தட்ட 10 விழுக்காடாக உள்ளனர். இருப்பினும், பல இளம் சிங்கப்பூரர்களுக்கு கார் வாங்குவதற்கு உரிமைச் சான்றிதழ் (COE) விலையே முக்கியத் தடையாக இருப்பதாக இங் குறிப்பிடுகிறார்.

2023ல் மின்சார வாகன ஓட்டுநராக மாறிய உள்ளடக்க உருவாக்குநர் சில்வி வாங், இதன் தொழில்நுட்ப அம்சங்களால் ஈர்க்கப்பட்டார். 27 வயதான வாங் மற்றும் அவரது கணவருக்கு, காரை நிர்வகிக்க செயலிகளைப் பயன்படுத்துவது மிகவும் இயல்பான ஒன்றாகத் தோன்றுகிறது.

“செயலி மூலம் மின்கலன் அளவு மற்றும் மின்னூட்டு நிலையை கண்காணிக்க முடிவதை நான் விரும்புகிறேன்,” என்று அவர் கூறுகிறார். “இது அனைத்தையும் மிகவும் தடையற்றதாகவும் வசதியாகவும் மாற்றுகிறது.”

“மின்னூட்டிகளைக் கண்டறிவது, மின்னூட்டம் செய்வதைக் கண்காணிப்பது மற்றும் ஒரே இடத்தில் பணம் செலுத்துவது ஆகியவை மிகவும் எளிமையாக உள்ளன,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

கூடுதல் பலனாகக் குறைந்த உமிழ்வு

தொழில்நுட்பத்தைத் தாண்டி, நீடித்த நிலைத்தன்மையும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன – இருப்பினும் அதுவே ஆரம்பப் புள்ளியாக இல்லாமலும் இருக்கலாம்.

கடந்த மார்ச் மாதம் பெண் குழந்தையைப் பெற்றெடுத்த வாங், தன்னால் இயன்றவரை தூய்மையான மற்றும் அதிக ஆற்றல் திறன் கொண்ட விருப்பங்களைத் தேர்ந்தெடுப்பதாகக் கூறுகிறார்.

“ஒரு தாயான பிறகு, என் குழந்தை வளரப் போகும் சூழலைப் பற்றிய விழிப்புணர்வு எனக்கு நிச்சயமாக அதிகரித்துள்ளது. எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு இப்போது எனக்கு முன்பு இருந்ததை விட முக்கியமாகத் தெரிகிறது,” என்கிறார் அவர்.

இருப்பினும் நடைமுறைப் பயன்பாடே முதன்மையானது. வாங் தரை வீட்டில் வசிப்பதாலும், சொந்தமாக மின்னூட்டி வைத்திருப்பதாலும், பெட்ரோல் காரை விட மின்சார வாகனம் அவருக்கு மிகவும் வசதியானது.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக (NUS) இளங்கலை மாணவர்களிடம் 2024ல் பயண முறைகள் குறித்து ஆய்வு நடத்திய சுற்றுச்சூழல் பொருளாதார நிபுணர் ஆல்பர்டோ சால்வோ, Gen Z பிரிவினர் போக்குவரத்து விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கும்போது விலை, வசதி மற்றும் நேரம் ஆகியவற்றுக்கே தொடர்ந்து முதலிடம் கொடுக்கிறார்கள் என்று கூறுகிறார்.

“மக்கள் மாசு அல்லது உமிழ்வை உருவாக்குவதை விரும்புவதாக நான் நினைக்கவில்லை,” என்று என்யுஎஸ்ஸின் பொருளாதாரத் துறையின் இணைப் பேராசிரியர் மற்றும் டீன்ஸ் சேராக இருக்கும் சால்வோ கூறுகிறார். “அவர்கள் தூய்மையான சூழலையே விரும்புகிறார்கள்,” என்று அவர் மேலும் கூறுகிறார். ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரிதாகவே முதன்மைக் காரணியாக இருக்கிறது.

ஜூலியன் கோ இதனை ஒப்புக்கொள்கிறார்: “இளம் வாங்குபவர்கள் சுற்றுச்சூழல் மீது அக்கறை காட்டுகிறார்கள். ஆனால் சிங்கப்பூர் சந்தையில், நீடித்த நிலைத்தன்மை என்பது வாங்குவதற்கான ஒரே காரணியாக இல்லாமல், முடிவை உறுதிப்படுத்தும் ஒரு துணைக் காரணியாகவே இருக்கிறது.”

“செலவு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் ஏற்கனவே வலுவாக இருக்கும்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது ஒரு மனநிறைவைத் தரும் காரணியாக அமைந்து, வாங்கும் முடிவை உறுதி செய்கிறது,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

நடைமுறைப் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது ஜென் ஸீ பிரிவினர் மட்டுமல்லாது, அனைத்து வயதினரிடமும் BYD காணும் ஒரு பொதுவான போக்காகும் என்று இங் கூறுகிறார். இதனால்தான், வழக்கமான பெட்ரோல் கார்களை விடக் குறைந்த எரிபொருள் பயன்பாட்டு மற்றும் உமிழ்வை விரும்பும் ஓட்டுநர்களுக்கான மாற்றாக, கடந்த ஆண்டு சிங்கப்பூரில் தனது பிளக்-இன் ஹைப்ரிட் ரகங்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

வழக்கமான ஹைப்ரிட் கார்களைப் போலல்லாமல், இதன் பிளக்-இன் ஹைப்ரிட் மாடல்கள் “டூயல் மோட் இன்டெலிஜென்ட்” (DM-i) அமைப்பைப் பயன்படுத்துகின்றன. இது பெட்ரோல் இயந்திரத்திற்குப் பதிலாக மின்சார இயக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது என்று இங் பகிர்ந்து கொள்கிறார்.

BYD-இன் பிளக்-இன் ஹைப்ரிட் கார்கள் 80 கி.மீ. வரை மின்சார வாகன வரம்பை வழங்குகின்றன. இது சிங்கப்பூரில் அன்றாடப் பயன்பாட்டிற்கு போதுமானது என்று இங் கூறுகிறார். மின்கலன் அளவு குறையும்போது, உள் எரிப்பு இயந்திரக் கார் நீண்ட தூரம் செல்வதற்கு ஏதுவாக ரீசார்ஜ் செய்ய உதவுகிறது.

வோங்கை பொறுத்தவரை, சுற்றுச்சூழல் பாதுகாப்பும் நடைமுறைப் பயன்பாடும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. ஆனால் அவற்றுக்குத் தெளிவான முன்னுரிமை வரிசை உள்ளது. மேலும், அவரைப் போன்ற வளர்ந்து வரும் இளம் ஓட்டுநர்களுக்கு மின்சார வாகனங்கள் இந்த இரண்டிற்கும் சரியாகப் பொருந்துகின்றன.

“இது ஒரு ‘முழுமையான சுற்றுச்சூழல் நட்பு’ தேர்வை மேற்கொள்வது பற்றியது அல்ல. மாறாக என் வாழ்க்கை முறைக்கு ஏற்றதாகவும், அதே நேரத்தில் என்னால் இயன்றவரை சிறந்ததாகவும் இருக்கும் விருப்பங்களைத் தேர்ந்தெடுப்பது பற்றியதே ஆகும்,” என்று அவர் கூறுகிறார்.

குறிப்புச் சொற்கள்
மின்சார கார்நீடித்த நிலைத்தன்மைவாகனம்