காலங்கடந்து செல்வது எப்போதும் மனிதகுலத்தின் நிறைவேறாத வேட்கையாக இருந்துள்ளது. புனைவுக் கதைகள், திரைப்படங்கள், நெடுந்தொடர்கள், இயங்குபடங்கள் எனப் பல்வேறு பொழுதுபோக்குத் தளங்களில் இவை குறித்து பேசப்படுவதும் வழக்கம்.
அந்த ஆர்வத்துக்கு சற்று தீனி போடும் தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது கூகல் நிறுவனம்.
கணினி, திறன்பேசிமுன் அமர்ந்துகொண்டே உலகிலுள்ள பல்வேறு இடங்களை 360 டிகிரி கோணத்தில் கண்டு ரசிக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த அந்நிறுவனம் தற்போது ஓர் இடம் 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வாறு இருந்தது எனப் பார்த்து அறியும் தொழில்நுட்பத்தைத் தந்து ‘கூகல் மேப்ஸ்’, ‘கூகல் எர்த்’ செயலி, இணையத்தளத்தில் உட்புகுத்தியுள்ளது.
இத்தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு கட்டடம், அல்லது தெரு அது அமைக்கப்பட்டபோது, நவீன மேம்பாடுகள் இல்லாத காலகட்டத்தில் இருந்த நிலைகளைக் கண்டறிய முடியும்.
முதற்கட்டமாக பெர்லின், லண்டன், பாரிஸ் ஆகிய நகரங்களை 1930கள் வரை சென்று பார்க்க முடியும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்தப் புதிய அம்சம் பயனர்களுக்கு ஒரு மாறுபட்ட அனுபவத்தைத் தரும். காலத்தின் பின்னோக்கிப் பயணம் செய்து அந்த இடத்தின் வரலாறு, சூழல் ஆகியவற்றை ஆராய வழிவகுக்கிறது. வருங்காலத்தில் உலகின் பிற இடங்களையும் இந்த முறையில் பயணம் செய்து பார்க்க இயலும் என எதிர்பார்க்கலாம்.

