தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசியக் கலைக்கூடத்தின் 10ஆம் ஆண்டு நிறைவில் பத்து கண்காட்சிகள்

3 mins read
f559073a-5095-436f-ba64-cd8d5a737e90
10ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடம். - படம்: இணையம்/கென்னி ஓங்

சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடம் நவம்பர் 24, 2015ல் திறக்கப்பட்டதை அடுத்து, இவ்வாண்டு அதன் பத்தாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. அதை முன்னிட்டு, இவ்வாண்டு அது பத்து கண்காட்சிகளை வழங்கவுள்ளது.

‘இரவுக்கு வெளிச்சம் சிங்கப்பூர் 2025’

தேதிகள்: ஜனவரி 17, 2025 முதல் பிப்ரவரி 6, 2025 வரை

சென்ற ஆண்டின் ‘இரவுக்கு வெளிச்சம்’ விழாவில் ஒளிமயம் கண்ட சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடத்தின் வெளிப்புறம்.
சென்ற ஆண்டின் ‘இரவுக்கு வெளிச்சம்’ விழாவில் ஒளிமயம் கண்ட சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடத்தின் வெளிப்புறம். - படம்: சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடம்

முதல் நிகழ்ச்சியாக, ‘இரவுக்கு வெளிச்சம் சிங்கப்பூர் 2025’ (Light to Night Singapore 2025) எனும் மாபெரும் விழா, சிங்கப்பூர்க் கலை வாரத்தின் முக்கிய அங்கமாக நடைபெறவுள்ளது. அவ்விழாவில், சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடம், பாடாங், ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’, விக்டோரியா அரங்கு, விக்டோரியா இசை மண்டபம் போன்ற முக்கிய மரபு இடங்களில் பிரம்மாண்ட ஒளிக் காட்சிகள் இடம்பெறும்.

வியட்னாமைக் கற்பனைப்படுத்தும் ‘ஆஞ்சின் கிளவுட்’

தேதிகள்: ஜனவரி 17, 2025 முதல் நவம்பர் 30, 2025 வரை

ஜனவரி 17ஆம் தேதி திறக்கப்படவுள்ள ‘ஆஞ்சின் கிளவுட்’ கண்காட்சி.
ஜனவரி 17ஆம் தேதி திறக்கப்படவுள்ள ‘ஆஞ்சின் கிளவுட்’ கண்காட்சி. - படம்: ரவி சிங்காரம்

வியட்னாமின் மத்திய மலைப்பகுதிகளின் தொழில்மயமாதலைக் கற்பனைப்படுத்தும் ‘ஆஞ்சின் கிளவுட்’ (Angin Cloud) கண்காட்சி, தேசியக் கலைக்கூடத்தின் பாடாங் ஏட்ரியத்தில் காட்சிக்கு இருக்கும்.

‘பிறரின் நகர்: பாரிசில் 1920களில் இருந்து 1940கள் வரை ஆசிய ஓவியர்கள்’

தேதிகள்: ஏப்ரல் 2, 2025 முதல் ஆகஸ்ட் 17, 2025 வரை

இக்கண்காட்சி, அக்காலத்தில் பாரிசிலிருந்த பிரபல ஆசிய ஓவியர்களின் 200க்கும் மேற்பட்ட கலைப்படைப்புகளை உள்ளடக்கும். இந்த ஓவியர்கள் மற்ற பண்பாட்டினரை ‘பிறர்’ என்று கருதியதும், தாமே ‘பிறர்’ எனக் கருதப்பட்டதும் இக்கண்காட்சியில் வெளிப்படும்.

‘எய்டொலோன்’: சங்கிலிக் காட்சி

தேதிகள்: ஏப்ரல் 28, 2025 முதல் பிப்ரவரி 2026 வரை

‘எய்டொலோன்’ (Eidolon) எனும் கிரேக்கச் சொல், ஒரு கற்பனைத் தோற்றத்தைக் குறிக்கும். அதற்கேற்ப, நீளச் சங்கிலிகளாலான இக்கண்காட்சி, பார்க்கும் கோணத்திற்கேற்ப வெவ்வேறு விதங்களாகக் காட்சியளிக்கும்.

‘நாடுகளுக்கிடையிலான உறவுகளும் ஆசையும்’ : சிங்கப்பூரில் பாசுக்கி அப்துல்லா

தேதிகள்: மே 9, 2025 முதல் பிப்ரவரி 1, 2026 வரை

‘நாடுகளுக்கிடையிலான உறவுகளும் ஆசையும்’ (Diplomacy and Desire) எனும் கண்காட்சி, பாசுக்கி அப்துல்லாவையும் (1915 - 1993), அவர் தம் கலைப்படைப்புகள்மூலம் சித்திரிக்க விரும்பிய முக்கிய நபர்களையும் அழகிய பெண்களையும் பற்றியது. நாடுகளுக்கிடையே அன்பளிப்புகளாகப் பரிமாற்றப்பட்ட அப்துல்லாவின் ஓவியங்கள், பன்னாட்டு உறவுகளில் வகித்த முக்கியப் பங்கையும் இக்கண்காட்சி ஆராயும்.

ஃபெர்னாண்டோ சோபெல்: ‘ஒழுங்கு அவசியம்’

தேதிகள்: மே 9, 2025 முதல் நவம்பர் 30, 2025 வரை

பிலிப்பீன்சில் ஸ்பானிய பெற்றோருக்குப் பிறந்த சோபெல், புத்தாக்கத்திலும் ஒழுங்கு இருக்கும்போது எழும் அழகைத் தம் கலைப்படைப்புகள் மூலம் சித்திரித்தார். இதுவே தேசியக் கலைக்கூடத்தில் அவரைப் பற்றிய முதல் தனிக் கண்காட்சி.

சிறுவர் கண்காட்சி 2025: நாளை நாம்…

தேதிகள்: மே 31, 2025 முதல் மார்ச் 29, 2026 வரை

2017 முதல் தேசியக் கலைக்கூடத்தின் முக்கிய நிகழ்ச்சியாக இருந்துள்ளது, பொதுவாக ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடந்துவரும் ‘சிறுவர்களின் பையென்னெல் (Biennale)’. இதன் ஐந்தாம் அத்தியாயம் இவ்வாண்டு நடைபெறும். இது சிறுவர்களையும் பெரியவர்களையும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கத் தூண்டும்.

மைக் கண்காட்சி

தேதிகள்: ஜூன் 6, 2025 முதல் நவம்பர் 16, 2025 வரை

தேசியக் கலைக்கூடத்தின் மைக் கலைப்படைப்புகளின் (Ink Collection) பின்னணி பற்றிய இக்கண்காட்சி, 2018ல் இடம்பெற்ற ‘(ரீ)கலெக்ட்’ ((Re)collect) கண்காட்சியின் தொடர்ச்சியாகும். பெரும்பாலும் புதிதாகப் பெறப்பட்ட 40க்கும் மேற்பட்ட கலைப்படைப்புகளோடு இடம்பெறுகிறது இக்கண்காட்சி.

சிங்கப்பூர்க் கதைகள்: கலைப் பாதைகள்

தேதிகள்: ஜூலை 17, 2025 முதல்

மாறிக்கொண்டே இருக்கும் சிங்கப்பூரின் கலை வரலாற்றைப் படைக்கிறது இக்கண்காட்சி. யாருடைய கதை இது? இல்லம் என்பது எங்கே? என்ன புதிது? கலை என்பது எதற்காக? என்ற கேள்விகளோடு, வெவ்வேறு கோணங்களிலிருந்து கூறப்பட்ட இக்கதைகள், சிங்கப்பூரின் கலை வரலாறு எழுதப்பட்ட விதத்தை மறுபார்வையிட வழிவகுக்கும்.

பாவியல் கலைத்திறக் (Impressionism) கண்காட்சி

தேதிகள்: நவம்பர் 14, 2025 முதல் மார்ச் 1, 2026 வரை

19ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் பிறந்த பாவியல் கலைத்திறம் எனும் கலைவடிவத்தை ரெனுவார், மோனே, மானே, செசான் போன்ற ஓவியர்களின் படைப்புகள்வழி ஆராயலாம். பாஸ்டன் நுண்கலைகள் அரும்பொருளகத்துடன் இணைந்து, தேசியக் கலைக்கூடம் இதுவரை சிங்கப்பூரில் காட்சிப்படுத்தப்படாத படைப்புகளைக் காண்பிக்கவுள்ளது.

குறிப்புச் சொற்கள்