‘தி டிரீம்கேட்சர் சைட் லைன்ஸ்’ தயாரிப்பு வழங்கும் ‘கிரேக் தி கேஸ்’, தொடரின் நான்காவது அங்கமாகும். இது, பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் அம்சங்களை ஒன்றிணைக்கிறது.
எழுத்தாளரும் இயக்குநருமான கிருஷ் நடராஜனால் இந்த நாடகம் இயக்கப்பட்டது. ஃபஹீம் முர்ஷெட், இந்த நாடகத்தில் காமில் நூர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மரண தண்டனைக்காகக் காத்திருக்கும் உயிரியல் பொறியாளரும் குற்றம் சாட்டப்பட்ட தீவிரவாதியுமான காமில் நூரின் வினோதமான எண்ணங்களுடன் இந்தக் கதை தொடங்குகிறது.
பார்வையாளர்களும் இந்த நாடகத்தில் முகவர்களாக நடிக்கிறார்கள். காமில் நூர் மறைத்து வைத்திருக்கும் சாதனத்தைப் பற்றிய துப்புகளை அவர்கள் ஒன்றிணைக்க வேண்டும். அதே சமயம், அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்ற ஆழமான கேள்விக்கு விடை தேடி, நீதி பற்றிய சிக்கலான சிந்தனைகளுக்கு வழிவகுக்க வேண்டும்.
அரங்கத்தில் மறைக்கப்பட்ட கதைக் குறிப்புகள், கதையின் பெரும்பகுதியைச் சுமக்கின்றன. ரஸ்ஸல் கோஹ்வின் இட வடிவமைப்பு, நூரின் குடும்ப வாழ்க்கை அறை முதல் பயங்கரமான ஆய்வகங்கள் வரை மறைமுகச் சின்னங்கள் மற்றும் நினைவுகளின் துண்டுகளால் நிரப்பப்பட்ட இடங்களை உருவாக்குகிறது.
நடிகர்களின் படைப்புகளும் சமமாகவே ஈர்க்கின்றன. மஸ்தூரா ஒலியின் நிலையற்ற முகபாவனைகளும் டான் ரூய் ஷானின் மனத்தை அலைக்கழிக்கும் நடன அமைப்பும் அமானுஷ்ய உணர்வை அதிகப்படுத்துகின்றன.
அதே சமயம், டெரிக் சியூவின் ஒளியமைப்பும் ஜிங் என்ஜியின் ஒலி அமைப்பும் திகிலை மேலும் பெருக்குகின்றன. இது ஒரு மர்ம நாடகம் மட்டுமல்லாது பயம் மற்றும் தார்மீகத்தின் எல்லைகளை மங்கலாக்குவதன் மூலம், ஒரு நாடகம் எவ்வாறு மனத்தைத் தொந்தரவு செய்யலாம் என்பதை ‘தி டிரீம்கேட்சர்’ வெளிப்படுத்துகிறது.