தாத்தாவைச் சிங்கப்பூருக்கு ரயிலில் அழைத்து வந்த தாய்லாந்துச் சிறுவன்

தாத்தாவைச் சிங்கப்பூருக்கு ரயிலில் அழைத்து வந்த தாய்லாந்துச் சிறுவன்

1 of 2
படம்: இன்ஸ்டகிராம்/kollawat_2626
படம்: இன்ஸ்டகிராம்/kollawat_2626

11 Oct 2026 - 7:01 pm

2 mins read

செலவு குறைந்த வழியில் பயணம் மேற்கொண்டு, தாய்லாந்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுவன் தன் தாத்தாவை முதன்முறையாகச் சிங்கப்பூருக்கு அழைத்து வந்த நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

பொதுவாக, வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அதிகச் செலவு ஏற்படும். இருப்பினும், கியூ என்ற அந்தச் சிறுவனுக்குத் தனது தாத்தாவுக்குச் சிங்கப்பூரைச் சுற்றிக் காட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது.

“நான் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இருப்பினும், 16 வயதில் என் தாத்தாவை முதன்முறையாகச் சிங்கப்பூருக்கு 2,000 கிலோமீட்டர் தூர ரயில் பயணத்தின் மூலம் அழைத்து வந்தேன்,” என்று அக்டோபர் 6ஆம் தேதி பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவொன்றில் கியூ குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்தின் நகோன் பத்தோம் மாநிலத்திலிருந்து தங்களின் பயணத்தைத் தொடங்கிய அவர்கள், நராதிவாட் மாநிலத்தில் உள்ள சு-ஙாய் கொலோக் மாவட்டத்தைச் சென்றடைந்தனர். அங்கிருந்து மலேசிய எல்லைக்குள் நுழைந்தனர். ரயிலில் மிகக் குறைந்த கட்டணம் கொண்ட மூன்றாம் வகுப்பில் அவர்கள் பயணம் செய்தனர்.

அதன் பிறகு, பேருந்து மூலம் கிளந்தானில் உள்ள பாசிர் மாஸ் ரயில் நிலையத்தைச் சென்றடைந்தனர். அங்கிருந்து ஜோகூர் பாரு நோக்கிச் செல்லும் ரயிலுக்குத் தலா 390 பாட் ($14.80) செலவிட்டனர்.

பின்னர் தலா 50 பாட் கட்டணத்தில் பேருந்து மூலம் ஜோகூர் பாலம் வழியே சிங்கப்பூருக்குள் நுழைந்தனர்.

“விமானத்தில் செல்லாமல் காஞ்சனபுரியில் இருந்து சிங்கப்பூருக்கு ரயிலில் பயணம் செய்தேன். 16 வயதில் என்னால் இதைச் செய்ய முடிந்தது. அந்த மகிழ்ச்சியில் அனைத்துக் களைப்பும் பறந்துவிட்டது,” என்று கியூ தெரிவித்துள்ளார்.

அவரது தாத்தாவுக்கு இதுவே முதல் சிங்கப்பூர்ப் பயணம் என்றாலும், சிறுவன் கியூ 2022ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வந்து மெர்லயன் பூங்காவைப் பார்வையிட்டுள்ளார். இம்முறையும் அவர் தனது தாத்தாவுடன் மெர்லயன் பூங்காவுக்குச் சென்று படங்கள் எடுத்துக்கொண்டார்.

சிங்கப்பூரைச் சுற்றிப்பார்ப்பதே அவர்களின் முதன்மை நோக்கமாக இருந்தபோதிலும், தங்கும் செலவைக் குறைப்பதற்காக அவர்கள் ஜோகூர் பாருவிலேயே தங்குவதைத் தேர்ந்தெடுத்தனர். அங்கு ஓர் இரவுக்கு 2,000 பாட் செலவிட்டதாகக் கியூ பகிர்ந்துள்ளார். மேலும், தாம் அண்ணனாகக் கருதும் ஒருவர் தங்களது தங்குமிடச் செலவுகளை ஏற்றுக்கொள்ள உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சிறுவனின் தன்னம்பிக்கை நிறைந்த இந்தப் பயணக் கதையைக் கேட்டு இணையவாசிகள் தங்களின் வாழ்த்துகளையும் ஆதரவையும் வழங்கி வருகின்றனர். இவரது பிரதான இன்ஸ்டாகிராம் பதிவு 7,92,000க்கும் மேற்பட்ட விருப்பக்குறிகளையும் 4,000க்கும் அதிகமான கருத்துகளையும் பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்