மொரிஷியசில் தைப்பூசம்

2 mins read
10257bd2-748f-4063-8275-2c599a10b12e
விழாக்கோலம் பூண்டுள்ள மொரிஷியஸ். - படம்: கெவினா

தைப்பூசத் திருநாளை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் திருவிழா கோலத்துடன் பக்தி, இசை, காவடி என அர்ப்பணிப்புடன் கொண்டாடி வருகின்றன.

ஆனால், வேறு சில நாடுகளிலும் தைப்பூசம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது என்பது பலருக்குப் புதிய தகவலாக இருக்கலம்.

அண்மையில் நான் மொரிஷியசுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.

அந்தப் பயணம் ஒரு வகையில் என் அறிவுக் கண்ணைத் திறந்து வைத்தது. மொரிஷியசிலும் தைப்பூசம் மாபெரும் பக்தி விழாவாகக் கொண்டாடப்படுகிறது என்ற தகவலை நான் அங்கு எதேச்சையாகச் சந்தித்த ஒரு தமிழ்ப் பெண்ணிடமிருந்து அறிந்துகொண்டேன்.

மொரிஷியசிலும் தைப்பூசம் மாபெரும் பக்தி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
மொரிஷியசிலும் தைப்பூசம் மாபெரும் பக்தி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. - படம்: கெவினா

இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் இந்தத் தீவில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை 5.83 விழுக்காடு. தங்களது மரபு, கலாசாரம், ஆன்மிகத்தை மறவாது தைப்பூசத் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள் அங்குள்ள தமிழர்கள்.

காவடி ஊர்வலம் தெருவெங்கும் களைகட்ட, பக்தர்கள் அங்கும் சிங்கப்பூரைப் போல குடங்களில் பால் சுமந்து முருகப் பெருமானுக்குத் தங்களின் வேண்டுதல்களை செலுத்துகின்றனர்.

பக்தர்கள் மொரிஷியசிலும் பால்குடம் ஏந்தி முருகருக்கு அவர்களின் வேண்டுதல்களை செலுத்துகின்றனர்.
பக்தர்கள் மொரிஷியசிலும் பால்குடம் ஏந்தி முருகருக்கு அவர்களின் வேண்டுதல்களை செலுத்துகின்றனர். - படம்: கெவினா

தைப்பூசத்தன்று கோவில்களில் சிறப்பு அன்னதானம் வழங்கப்படும். அதில் வாழைப்பழம் குழம்பு, பலாப்பழம் துவையல், பச்சை அவரைப் பிரட்டல், சாதம், ரசம், பாயசம், சர்க்கரை மாங்காய் ஆகியவை பரிமாறப்படும். அன்னதானத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் மொரிஷியஸ் தமிழ் சமூகத்தினருக்குப் பிரத்தியேகமானவை.

மொரிஷியசின் தலைநகர் போர்ட் லூயிசில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் சொக்கலிங்கம் திருக்கோவில், ஸ்ரீ சிவசுப்பிரமணியன் திருக்கோவில் ஆகியவற்றில் தைப்பூசத் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கு அப்பாற்பட்டு அங்கு இந்துக்கள் அனைவரும் விரதம் இருப்பர். கோவில்களில் கொடியேற்று விழா நடைபெற்றவுடன் விரத காலம் தொடங்கும்.

பக்தர்கள் 10 நாள்களுக்கு இடைவிடாமல் விரதம் எடுப்பர். அப்போது அவர்கள் நாள்தோறும் பக்கத்தில் இருக்கும் கோவில் வழிபாட்டில் கலந்துகொள்வர்.

பால்குடம் அல்லது காவடி ஏந்தும் பக்தர்கள் தினமும் காலையில் தவறாமல் கோவில்களுக்குச் செல்வர். சிங்கப்பூரில் காவடி சுமக்கும் அதே பாணியில்தான் மொரிஷியசிலும் காவடி எடுக்கப்படுகிறது.

மொரிஷியசில் தமிழர்கள் அவர்களின் வேர்களை மறக்காமல் அனைத்து சடங்குகளில் ஈடுபட்டு வந்தாலும் அவர்களால் தமிழ் பேச இயலாது. அங்கு அனைவரும் மொரிஷியஸ் கிரியோல் மொழிதான் பேசுகின்றனர்.

மொழி விட்டுப்போனாலும் பாரம்பரியத்துடன் பின்னிப் பிணைந்திருக்கும் மக்கள், கோவிலில் அர்ச்சகர்கள் கிரியோல் மொழியில் சடங்குகளை வழிநடத்துவதை எளிதில் புரிந்துகொள்கிறார்கள்.

தைப்பூசம் மொரிஷியசில் ஒரு பொது விடுமுறை. அங்கிருக்கும் உள்ளூர் அதிகாரிகள் திருநாள் சீரும் சிறப்புமாக நடைபெறச் சாலைப் போக்குவரத்து, தண்ணீர் விநியோகம், பக்தர்களின் பாதுகாப்பு ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்துவர்.

மகா தீபாராதனை அபிஷேகத்தில் முடிவு பெற்று, அதற்கு மறுநாள் கொடி இறக்கும் சடங்கு நடைபெற்றவுடன் பக்தர்களது விரத காலம் முடிவுபெறும்.

குறிப்புச் சொற்கள்