செயற்கை நுண்ணறிவும் இசையும் கலந்த ‘அன்றும் இன்றும்’ நிகழ்ச்சி

செயற்கை நுண்ணறிவும் இசையும் கலந்த ‘அன்றும் இன்றும்’ நிகழ்ச்சி

3 mins read
8997227f-e9f5-43fe-80fb-16c97a16b09f
பார்வையாளர்களுடனும் கலைஞர்களுடனும் திரு சி. குணசேகரன், 62. - படம்: திரு சி.குணசேகரன்.

ஒரு மாணவன் தான் படித்த இலக்கணத்தை மறந்து விடலாம், ஆனால் குழந்தைப் பருவத்தில் தாய் பாடிய பாடலை மறப்பதில்லை. அதுதான் இசையின் ஆற்றல். அந்த ஆற்றலைத்தான் இன்று நாம் கொண்டாடுகின்றோம் என்று வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக் கூறினார்

ஆக் ஷன் அரங்கில் பிப்ரவரி 21ஆம் தேதி 6.30 மணிக்கு நடந்தேறிய ‘அன்றும் இன்றும்’ எனும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அவர் பேசினார். 

“தமிழ்மொழியை மேம்படுத்துவது பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியரின் பணி மட்டுமன்று. அது ஒரு சமுதாயக் கூட்டு முயற்சியாக இருக்கவேண்டும்,” என்று திரு ஹமீது ரசாக் கூறினார். 

சிங்கப்பூரின் கலாசாரப் பங்களிப்பு, ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் கலாசார சிறப்புத்தொகைத் திட்டத்தின்கீழ் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 80 பேர் கலந்துகொண்டனர்.

அன்றும் இன்றும் என்பது, பாரம்பரியம், சினிமா இசை, மேம்பட்ட ஊடகத் தொழில்நுட்பங்களை ஒன்றிணைக்கும் ஒரு சமகாலத் தமிழ்க் கலைக் கண்காட்சியாகும். 

கீழடி முதல் சிங்கப்பூர்வரையிலான கலாசாரப் பிணைப்பைத் தொட்டுச் செல்லும் இந்த நிகழ்ச்சி, அடையாளத்திலும் பாரம்பரியத்திலும் வேரூன்றித் தமிழ்க் கலைகள் எவ்வாறு தொடர்ந்து உருவாகி வருகின்றன என்பதை அது விளக்குகிறது.

வரலாற்றுத் தாக்கங்களைச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மறுவடிவம் செய்யும் சுருக்கமான கதை சொல்லும் பகுதியும் இதில் அடங்கும்.

கண்ணதாசன், வாலி, வைரமுத்து ஆகியோரின் வரிகளில் உருவான தமிழ்த் திரைப்படப் பாடல்களின் தொகுப்பும் இதில் இடம்பெற்றது.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு பாடல், தொழில்நுட்பம் எவ்வாறு பாரம்பரிய இசை அழகியலை மேம்படுத்தும் என்பதை விளக்குகிறது.

நேரடி நிகழ்ச்சிகளுடன் மிகைமெய் (augmented reality) உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரு புதிய மின்னிலக்க  அனுபவத்தை வழங்குவதும் நிகழ்ச்சியின் நோக்கம். 

இளம் கலைஞர்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதோடு, அடுத்த தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கவும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்  திரு .சி.குணசேகரன், 62, முயன்றார்.

தமிழ்க் கலைகள் அவற்றின் கலாசார வேர்களுடன் ஆழமாகத் தொடர்பில் இருக்கும் அதேவேளையில், எவ்வாறு தொடர்ந்து புதுமைகளைப் புகுத்துகின்றன என்பதை அன்றும் இன்றும் நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது. 

“கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு, பல அரசாங்க அமைப்புகளோடு இணைந்து சிங்கப்பூர்க் கலைஞர்களின் திறனை வெளிப்படுத்தும் வண்ணம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இதை வடிவமைத்தோம்,” என்றார் அவர்.  

செயற்கை நுண்ணறிவால் இசையமைப்பிலும் பல மாற்றங்கள் வந்துவிட்டன. செயற்கை நுண்ணறிவை பாதகம் இல்லாத முறையில் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

தமிழர்கள் மூவர் சிங்கப்பூரில் வாழ்ந்து தமிழ்நாட்டிலும் தங்கள் வேர்களை விட்டுச் சென்ற விதம் பார்வையாளர்களுக்குக் காணொளிவழி காட்டப்பட்டது.

ஒளி, ஒலியமைப்பில் அனைவரும் சிறப்பாகப் பாட வேண்டும் என்ற நோக்கத்தில் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் கேட்ட பாடல்கள் அனைத்தும் ‘இம்மர்சிவ்’ எனப்படும் கேட்பவரை ஒலியில் முற்றிலும் மூழ்கவைக்கும் தொழில்நுட்பத்தைப் (Sound immersive technology) பயன்படுத்தி வழிநடத்தப்பட்டது. 

“முதல் முறையாக செயற்கை நுண்ணறிவையும் இசையையும் இணைக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். இதுபோன்ற அற்புதப் படைப்புகளுக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்,” என்றார் திருவாட்டி தேன்மொழி.

“இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று இன்னும் பலர் தமிழ் மொழிவளத்தை வளர்க்க ஆதரவு கொடுக்க வேண்டும். பாடகர்கள் சிறப்பாகப் பாடினார்கள்,” என்று திருவாட்டி இந்துமதி கூறினார்.

“எனக்கு 70 வயதாகிவிட்டாலும் இந்த அருமையான நிகழ்ச்சியின்மூலம் மேலும் அதிகமாகத் தமிழ் கற்றுக்கொண்டேன். எனது பேரப்பிள்ளைகளுக்கும் தமிழ் கற்பிக்க ஆர்வத்துடன் இருக்கிறேன்,” என்றார் திரு ராஜமோகன், 70.

“அந்தக் காலத்துப் பாடல்களை இந்த நிகழ்ச்சியில் கேட்டபோது பழைய நினைவுகள் வந்து மனத்தை நெகிழ வைத்தன,” என்றார் திரு காளிமுத்து, 80. 

குறிப்புச் சொற்கள்