தேவதுந்துமி முழங்க மெல்லசைவுகளுடன் கூடிய தேவராட்டத்தைச் சிங்கப்பூர் நடன மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார் தேவராட்டக் கலைஞர் ‘நெல்லை’ மணிகண்டன்.
தமிழரின் தொன்மையான நாட்டுப்புறக் கலைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் ஆனந்தா மரபுக்கலைகள் கூடம் (ஆட்டம்) தொடர்ந்து நடத்தி வரும் ‘நம் மரபு’ தொடரின் ஆறாவது பயிலரங்காக இது அமைந்தது.
கடந்த 35 ஆண்டுகளாகத் தேவராட்டக் கலை நிகழ்ச்சிகளை நடத்தியும் பயிற்றுவித்தும் வரும் இந்தியாவைச் சேர்ந்த மணிகண்டன் வழிநடத்திய இப்பயிலரங்கு உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெற்றது.
கடந்த மார்ச் 28ஆம் நாள் நடைபெற்ற இப்பயிலரங்கில் அடிப்படை நடனம் அறிந்தவர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து மூன்று நாள்கள், மாணவர்களுக்கும் மூத்தோருக்கும் உகந்தவாறு அடிப்படைகளை உள்ளடக்கிய தனித்தனி நிகழ்ச்சிகளாகவும், நடன அடிப்படைகுறித்த புரிதல் கொண்டோர்க்கு சற்றே மேம்பட்ட பயிலரங்காகவும் இது நடத்தப்பட்டது.
“தேவதுந்துமி எனப்படும் உறுமி மேள இசைக்கு ஏற்பச் சலங்கை கட்டிய கலைஞர்கள் பலரும் இணைந்து ஆடும் நடனம் இது,” என்று சொன்ன மணிகண்டன், “இது மன்னர்களை வரவேற்க ஆடப்படும் நடனம். இப்போதும் சமூக, குடும்ப விழாக்களில் தேவராட்டம் ஆடும் பழக்கம் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நிலவுகிறது,” என்றும் விளக்கினார்.
சக்கைக்குச்சி, கோலாட்டம், ஒயிலாட்டம் ஆகிய பிற நடன முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இந்நடனம், கைகளில் எவ்விதப் பொருளுமின்றி, சற்றே வேகமான துள்ளல் இசையுடன் ஆடப்படுகிறது.
“சில நூறு கலைஞர்கள்கூட ஒரே நேரத்தில் ஆடக்கூடிய மகிழ்ச்சியான நடனம் இது,” என்றார் நடனக்கலைஞர் மணிகண்டன்.
தமிழ்ப் பாரம்பரியத்தின் நாட்டுப்புறக் கலைகளின் மீதான ஆர்வம் தொய்வடைந்துவரும் நிலையில், சிங்கப்பூர்த் தமிழர்கள் இதன்மீது பேரார்வம் கொண்டு வரவேற்பளிப்பது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“வயது வேறுபாடின்றி சிறு வயது மாணவர்கள், மூத்தோர் என அனைவரும் காட்டிய ஆர்வம் நான் எதிர்பாரத ஒன்று,” என்றார் அவர்.
பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி, மோகினியாட்டம் ஆகிய நடனங்களைப் பயின்றுவரும் மாணவி ஆக்ஞா,11, இப்பயிலரங்கிலும் பங்கேற்றார்.
“இந்த நடனமுறை மாறுபட்டதாகவும் சற்றே துள்ளலாகவும் இருக்கிறது. மாறுபட்ட அனுபவம் தருகிறது,” என்று அவர் சொன்னார்.
“இணைப்பாட நடவடிக்கையாக நடனம் பயிலும் நான் புதிய கலையைக் கற்கும் ஆர்வத்தில் இப்பயிலரங்கிற்கு வந்தேன். தேவராட்டம் குறித்து முதன்முறையாகக் கேள்விப்படுகிறேன்,” என்றார் சொக்கநாதன் சுவேதா, 20.
“எனக்குப் பெரிதாக நடனமாடத் தெரியாது. வேலைப்பளுவுக்கு மத்தியில் இதில் பங்கேற்பது மனதிற்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. என் ஏழு வயது மகள் தனுஸ்ரீயையும் அழைத்து வந்துள்ளேன். அவள் பாரம்பரியக் கலைகள் குறித்து அறிவது அவசியம் என நினைக்கிறேன்,” என்றார் இன்னொரு பங்கேற்பாளரான பக்திதேவி, 40.