‘யூடியூப்’, ‘இன்ஸ்டகிராம்’ போன்ற சமூக ஊடகத் தளங்களைத் தினமும் சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பயன்படுத்துகிறார் மாணவி ஸ்ரீதயா, 13. பள்ளியில் மட்டுமின்றி, வீட்டில் சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறித்து சில விதிமுறைகளை விதித்துள்ளனர் ஸ்ரீதயாவின் பெற்றோர்.
“பொதுவாக ஸ்ரீதயா உறங்கும்முன் மின்னிலக்கச் சாதனங்களை அறைக்கு வெளியே வைத்துவிட்டு உறங்குவதுண்டு,” என்றார் ஸ்ரீதயாவின் தாயார் திருமதி ஐஸ்வர்யா.
உயர்நிலை ஒன்றாம் வகுப்பு தொடங்கிய பிறகு தம் மகளுக்கு ஒரு திறன்பேசியை அளித்த திருமதி ஐஸ்வர்யா, அதில் பொருத்தப்பட்ட சமூக ஊடகத் தளங்கள் இளையர்களை வெவ்வேறு வழிகளில் பாதிக்கின்றன என்று கூறினார்.
“நண்பர்களுடன் எளிதில் உரையாடச் சமூக ஊடகங்கள் சிறந்த வழிகள். இருப்பினும், அவற்றின் நன்மை, தீமைகளைப் பிள்ளைகளுக்குச் சுட்டிக்காட்டி அவர்களுக்குச் சரியாக வழிகாட்டுவது பெற்றோர்களின் கடமையாகும்,” என்று வலியுறுத்தினார்.
இளையர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறித்த கவலை திருமதி ஐஸ்வர்யாவைப் போல பல பெற்றோர்களுக்கும் இருக்கும் என்பதை நோக்கமாகக் கொண்டு பிப்ரவரி 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ‘நமது மின்னிலக்க பயணம்’ (Our Digital Journey) எனும் புதிய முயற்சி அறிமுகம் கண்டது.
‘டிக்டாக்’ தளமும் ‘டச்’ சமூகச் சேவை அறநிறுவனமும் இணைந்து தொடங்கிய இந்த முயற்சி, குடும்பங்களுக்கான இணையப் பாதுகாப்பை மேம்படுத்தவும் சமூக ஊடகத் தயார்நிலையை உறுதிப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் வடிவமைக்கப்பட்ட பயிலரங்குகள் சமூகத்திலும் பள்ளிகளிலும் இடம்பெறும். செம்பவாங் குழுத்தொகுதியில் மார்ச் மாதம் தொடங்கவிருக்கும் இந்தப் பயிலரங்குகள் 2025ஆம் ஆண்டில் சுமார் 250 பெற்றோர்-பிள்ளைகளுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் சுகாதார அமைச்சர் ஓங் யி காங். அண்மையில் சுகாதார அமைச்சு வெளியிட்ட மின்னிலக்கச் சாதனப் பயன்பாட்டின் கடும் வழிகாட்டுதல்களை உதாரணமாகக் கொண்டு இளையர்களின் மனநல ஆரோக்கியத்தைப் பேணச் சரியான சமூக ஊடகப் பயன்பாட்டை வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
“சமூக முயற்சிகளைத் தவிர பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் ஒன்றிணைந்து சமூக ஊடக ஈடுபாட்டைக் கவனிப்பதால் இளையர்களின் மனநலத்தைப் பேணிக்காக்க இயலும்,” என்று தெரிவித்தார் திரு ஓங்.
அதுமட்டுமின்றி மின்னிலக்கச் சாதனப் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பது எளிதல்ல என்று கூறினார் திரு ஒங்.
“இருப்பினும், சரியான சமூக ஊடகப் பயன்பாட்டுப் பழக்கங்களை நம் பிள்ளைகளுக்குச் சிறு வயதிலிருந்து ஊக்குவிப்பது அவசியம்,” என்று சொன்னார்.