முடிவெடுப்பதால் ஏற்படும் சோர்வைக் கையாள குறிப்புகள்

2 mins read
b9e29860-1a7d-4a10-926e-a8a3572ed671
குறுகிய காலத்தில் பல முடிவுகளை எடுப்பதால் தனிநபர் ஒருவருக்கு உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் ‘முடிவெடுத்தல் சார்ந்த மனச்சோர்வு’ (decision fatigue) ஏற்படலாம்.  - படம்: பிக்சாபே

அன்றாடம் வேலையிடத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நாம் பல்வேறு முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகின்றன. சில நேரங்களில் நாம் எளிதான முடிவுகளை எடுக்கிறோம். இருப்பினும், பல சூழல்கள் சவால் மிக்கவையாக அமைகின்றன. குறுகிய காலத்தில் பல்வேறு முடிவுகளை எடுப்பதால் தனிநபர் ஒருவருக்கு உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் ‘முடிவெடுத்தல் சார்ந்த மனச்சோர்வு’ (decision fatigue) ஏற்படலாம். 

தொடர்ந்து முடிவுகள் எடுப்பதால் ஏற்படும் சோர்வின் அறிகுறிகள் என்ன? 

- ஒரு குறிப்பிட்ட வேலையைத் தள்ளிப் போடுவது அல்லது முடிவெடுக்காமல் இருப்பது 

- உணர்ச்சி வேகத்திற்கு ஆட்பட்டு எல்லாச் செயல்களையும் தானே செய்வது

- உடல், மனம், உணர்வு ரீதியான களைப்பு

- சிந்தனையின் தொடர்ச்சி தடைபட்டு மறதி ஏற்படுதல் 

- சோர்வினால் ஏற்படும் எரிச்சல்

- செய்துமுடித்த காரியத்தைப் பற்றி நினைத்து வருந்துவது

- தலைவலி, குமட்டல் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்சினைகள் போன்ற உடல்நலக் குறைபாடுகள் 

முடிவுகள் எடுப்பதால் ஏற்படும் சோர்வை எப்படித் தடுப்பது? 

குறிப்பிட்ட சில சூழ்நிலைகளுக்கு முடிவெடுக்கத் தேவையில்லை. எடுத்துக்காட்டாக, அணியும் ஆடைகள், உண்ணும் உணவு, கேட்க விரும்பும் பாடல் போன்றவற்றுக்கு மனத்தையும் உடலையும் வருத்திக்கொள்ளத் தேவையில்லை. 

சிக்கலான பணிகளைச் சரிவர மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதால் ஒருவ‌ரே எல்லா முடிவுகளையும் எடுக்கும் பொறுப்பை ஏற்கத் தேவையில்லை. குறிப்பாக, பணியிடத்தில்  மற்றவர்கள் சில செயல்களைக் கையாள அனுமதிப்பது சிறந்தது. இதனால் மற்ற முடிவுகள் எடுப்பதில் சோர்வு ஏற்படாது. 

மேலும், நல்ல உறக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம். உடலுக்கும் மனத்துக்கும் ஓய்வு அளிப்பதால் முக்கியமான முடிவுகளைச் சோர்வில்லாமல் எடுக்க இயலும். 

ஏறக்குறைய 30 நிமிடங்களுக்கு மிதமான உடற்பயிற்சி செய்வதால் சுறுசுறுப்பு கூடும் என்று ‘பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின்’ நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. போதுமான உடற்பயிற்சி மேற்கொள்வதால் முடிவெடுக்கும் செயல்திறன் அதிகரிக்கும். அதேநேரம், வாசித்தல், நண்பர்களைச் சந்தித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு நேரத்தை ஒதுக்குவது மன ஆரோக்கியத்துக்கு நன்று. இதனால், நல்ல முடிவுகளை எடுக்க உற்சாகம் பிறக்கும். 

அத்துடன், மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான நடவடிக்கைகள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தால் கடினமான முடிவுகளை எதிர்கொள்ளும்போது மன அழுத்தம் குறைவாக ஏற்படும். 

குறிப்புச் சொற்கள்