தக்காளி இனி ஊதா நிறத்திலும் விளையும்!

தக்காளி இனி ஊதா நிறத்திலும் விளையும்!

2 mins read
e1c3cd4b-b9c4-49e8-8728-6197814dfe59
‘பர்ப்பள் பிளிஸ்’ என அழைக்கப்படும் ஊதா நிறத் தக்காளி. - படம்: நோர்ஃபோல்க் ஹெல்தி புரொடியூஸ்

சிவப்பு, அவ்வப்போது ஆரஞ்சு, சில நேரங்களில் மஞ்சள் - இந்த வண்ணங்களில்தான் தக்காளியை நாம் பார்த்திருக்கிறோம்.

இந்தப் பட்டியலில் ஊதா ஒருபோதும் இருந்ததில்லை.

ஆனால், இனி அந்த நிறப்பட்டியல் மாறப்போகிறது. ஊதா நிறத் தக்காளியை விளைவிக்கவும் அதனைப் பயன்படுத்தவும் ஆஸ்திரேலிய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதே அதற்குக் காரணம்.

‘பர்ப்பள் பிளிஸ்’ எனும் இந்தப் புதிய வகைத் தக்காளியின் ஊதா வண்ணத்திற்கு அதிலுள்ள ‘ஆந்தோசயனின்’ எனும் நிறமியே காரணம். அவுரிநெல்லி (blueberry), ஊதா நிற முட்டைக்கோசு போன்றவற்றிற்கு நிறமளிக்கும் அதே நிறமிதான் இது.

‘ஸ்னாப்டிராகன்’ செடியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மரபணுக்களைத் தக்காளியில் புகுத்தி, ஊதா நிறத் தக்காளி பெறப்பட்டது.

‘நோர்ஃபோல்க் ஹெல்தி புரொடியூஸ்’ எனும் அமெரிக்க விதை நிறுவனம் இதனைச் சாதித்திருக்கிறது.

வழக்கமான தக்காளியைவிட, ஊதா தக்காளி கூடுதல் இனிப்புடனும் சுவையுடனும் இருக்கும் என்கிறது அந்நிறுவனம்.

ஒழுங்குமுறை அனுமதிக்காகக் காத்திருக்கும் நிலையில், ஊதா தக்காளி விரைவில் ஆஸ்திரேலியப் பண்ணைகளையும் உணவுச் சந்தைகளையும் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருகாலத்தில் ஐரோப்பியர்கள் தக்காளியைக் கண்டு அஞ்சினர். அது நச்சுத்தன்மை வாய்ந்தது என்று அவர்கள் கருதினர். ரத்தத்தை அமிலத்தன்மை உடையதாக மாற்றிவிடும் என்று நம்பினர். அங்குப் பலகாலமாக தக்காளி அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இன்று எல்லா வீடுகளின் சமையலறையிலும் தவறாது இடம்பெறும் தக்காளியின் பிறப்பிடம் தென்னமெரிக்கா. பின்னர் அது மெல்ல மெல்ல பல கண்டங்களுக்குள்ளும் புகுந்து, பல்வேறு உணவு வகைகளிலும் இடம்பெற்று, சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் விளைபொருள்களில் ஒன்றாக விளங்குகிறது.

தக்காளிப் புரட்சியில் புதுவரவுதான் ஊதா தக்காளி!

குறிப்புச் சொற்கள்