ஆசிய-பசிபிக் வட்டாரம் முழுவதும் பனி பெய்யத் தொடங்கியுள்ளதால், பயணிகள் குளிர்கால மாயாஜாலத்தை ரசிக்க மலைகளின் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பியுள்ளனர்.
“விடுமுறையைக் கழிக்க உங்கள் தேர்வு கடற்கரையா, மலைப்பகுதியா?” என்பது பெரும்பாலும் நட்பு வட்ட அறிமுகச் சந்திப்பில் எழும் வழக்கமான கேள்வியாக உள்ளது.
ஆண்டிறுதியில் மலைப்பகுதிப் பிரியர்களுக்கான பனிச்சறுக்குப் பருவமும் தொடங்கியுள்ளது. ஆசிய பசிபிக் வட்டாரத்தில் பனிச்சறுக்கு மேற்கொள்ள விரும்புவோர்க்கான சில சிறந்த தேர்வுகளைப் பார்ப்போம்.
யமாகதா, ஜப்பான்
கைதேர்ந்த பனிச்சறுக்கு வீரர் தொடங்கி, துணிச்சல்மிக்க புதியவர்கள் வரை அனைவருக்குமான தேர்வாக இருப்பது ஜப்பானின் யமாகதா நகரம். ஏறத்தாழ 10 முதல் 12 மீட்டர் ஆழத்திற்குப் பனிப்படர்வுடன் இருபுறமும் பனியால் மூடிய தேவதாரு மரங்களைப் பார்த்தபடி, எதிர்வரும் குளிர்காற்று முகத்தில் வீசுவதை ரசித்தவாறே பனிச்சறுக்கு மேற்கொள்ள இது சிறந்த தேர்வு.
டிசம்பரில் தொடங்கும் பனிக்காலத்தின் முத்தாய்ப்பாக நடைபெறும் சாவ் ஜூயோ பனி ஒளியூட்டு நிகழ்ச்சியும் காணவேண்டிய ஒன்றாகும். பனியைத் தாண்டி, ரிஷாக்கு-ஜி கோவில், இடிந்துபோன காஜோ பூங்கா கோட்டையின் சில பகுதிகள் எனக் காண்பதற்குப் பல இடங்கள் யமாகதாவில் உள்ளன.
பியோங்சாங், தென்கொரியா
2018ஆம் ஆண்டில் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, ஆசியாவின் புகழ்பெற்ற பனிக்காலச் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது தென்கொரியாவின் பியோங்சாங் நகரம்.
அழகிய மலைத்தொடர், அளவான பனிப்பொழிவு, மேம்பட்ட உள்கட்டமைப்புகளுடன் பனிச்சறுக்கு வீரர்களின் சொர்க்கமாக இது மாறிவருகிறது.
ஒடேசன் தேசியப் பூங்கா, மிகப் பழமையான வோல்ஜியோங்சா கோவில், ‘ஓஷன் 700’ எனும் நீர் விளையாட்டுப் பூங்கா எனச் சுற்றுலாத் தலங்களுடன் இதுவும் இவ்வாண்டிறுதிப் பயணத்திற்கேற்ற தேர்வாக அமையும்.
தொடர்புடைய செய்திகள்
மணாலி, இந்தியா
இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பனிக்காலம் தொடங்கும்போது, மணாலியின் மலைப்பகுதிகளைப் பனிப்பொழிவு சூழத் தொடங்கும். இந்நகரிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள சோலாங் பள்ளத்தாக்கு டிசம்பர் முதல் பிப்ரவரி வரை சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இங்குள்ள பனிப்பொழிவு, சீராகவும் ஆழமாகவும் இருப்பதால் பனிச்சறுக்கிற்கும் இது ஏற்ற இடமாக உள்ளது.
மலையைத் தாண்டி, ஜோகினி அருவி, பழமையான ஹடிம்பா தேவி கோவில், அழகிய காப்பிக்கடைகள் எனப் பனிக்காலத்திற்கு ஏற்ற சுற்றுலாத் தேர்வாக இது அமைந்துள்ளது.

