சீனப் புத்தாண்டுக்‌குச் சீரிய பரிசுகள்

2 mins read
6dfe448d-1445-4445-b53c-0fdf4e34c101
சீனப் புத்தாண்டுடன் தொடர்புடைய வழக்கங்களைப் புரிந்துகொள்வது முக்‌கியம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சீனர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான சீனப் புத்தாண்டு, இன்னும் சில தினங்களில் தொடங்கிவிடும். சிங்கப்பூரின் பன்முக கலாசார சூழலில் நம்மில் பலர் நம்முடைய சீன நண்பர்கள், அன்புக்குரியவர்கள் அல்லது சக ஊழியர்களுடன் விழாவைக்‌ கொண்டாட அவர்களது வீடுகளுக்‌கு அழைக்கப்பட்டிருக்கலாம்.

சீனப் புத்தாண்டுடன் தொடர்புடைய பழக்கங்களையும் பரிசு வழங்கும் வழக்கங்களையும் புரிந்துகொள்வது உங்களுக்‌கு அழைப்பு விடுத்த சீனர்களுக்‌கு மரியாதை காட்டுவதற்கான சிறந்த ஒரு வழியாகும்.

பண்டிகைக் காலத்தில் மிகவும் பிரபலமான பரிசுப்பொருள்களில் ஒன்று செழிப்பையும் அதிர்ஷ்டத்தையும் குறிக்கும் மாண்டரின் ஆரஞ்சுப்பழங்கள். ஒற்றை இலக்கமுடைய எண்கள் இறுதிச் சடங்குகளுடன் தொடர்புடையவை என்பது சீனர்களின் நம்பிக்கை என்பதால் பரிசாக வழங்கும்போது எப்போதும் இரண்டு பழங்களாக அல்லது இரட்டை இலக்கத்தில் கொடுப்பது அவசியம். ஆரஞ்சுப் பழங்களை அழகாக ஒரு பெட்டி அல்லது கூடையில் அடுக்‌கி வைத்து பரிசாக வழங்குவது மேலும் நேர்த்தியான தோற்றத்தைத் தரும்.

வரவிருக்கும் ஆண்டின் இனிமையையும் வளத்தையும் பிரதிபலிக்‌கும் அன்னாசிப்பழ டார்ட், பாக் குவா, உலர்ந்த காளான்கள், தேநீர் போன்ற சீனப் பண்டிகை தொடர்புடைய பொருள்களால் நிரப்பப்பட்ட பரிசுப்பைகளும் சிறந்த பரிசாகும்.

மேலும், தனிப்பட்ட பரிசை வழங்க விரும்பினால் சிவப்புப் பணப்பைகளை (அங் பாவ்) தரலாம். சீனர்களின் கலாசாரத்தில் எண் ‘8’ செல்வத்தைக் குறிப்பதால், 8 அல்லது 88 மதிப்புடைய தொகையைப் பணப்பைகளில் வைத்து அவர்களுக்‌குக் கொடுக்‌கலாம்.

சீனப் பண்டிகைக்காக உங்கள் சீன அன்புக்குரியவர்கள் தங்களது வீடுகளை அலங்கரிக்க உதவும் வாழ்த்துகள், காகிதச் சுவரொட்டிகள், சிவப்பு அலங்கார விளக்குகள் போன்ற பொருள்களை வழங்கலாம். அதிக விலைமதிப்புள்ள மதுபான வகைகள், பரிசு பற்றுச்சீட்டுகள், சீனப் புத்தாண்டு தின்பண்டங்கள் போன்றவற்றையும் பரிசாக தரலாம்.

இருப்பினும், பரிசைத் தேர்ந்தெடுக்‌கும்போது கலாசாரத் தடைகளைக் கவனத்தில் கொள்வது முக்கியம். சீன மொழியில் ‘கடிகாரம்’ என்ற சொல் ‘முடிவு’ அல்லது ‘பிரியாவிடை’ என்பதைக் குறிக்கும் சொல் போன்ற உச்சரிப்பைக் கொண்டுள்ளதால் கடிகாரங்களைப் பரிசளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. கத்திகள் அல்லது கத்தரிக்கோல் போன்ற பொருள்களையும் பரிசாக வழங்குவது பொருத்தமற்றதாகக் கருதப்படுகிறது. இதற்கு முக்‌கியக் காரணம், இவை போன்ற கூர்மையான பொருள்கள், உறவைத் துண்டிப்பதைக் குறிப்பதாக சீனர்கள் நம்புவதே ஆகும்.

கருப்பு, வெள்ளை என்ற இரண்டு வண்ணங்கள் துக்கத்துடன் தொடர்புடையவை என்று அவர்கள் நம்புவதால் அவற்றைக் கொண்ட பொருள்களைப் பரிசாகத் தருவதைத் தவிர்ப்பதும் நன்று. மங்களகரம் எனக் கருதப்படும் சிவப்பு அல்லது தங்க நிறப் பொருள்களுக்கு முன்னுரிமை கொடுப்பதே சிறந்தது.

குறிப்புச் சொற்கள்