ஓடிடி தளங்கள் பிரபலமடைந்து வருவதையடுத்து திரைப்படங்களுக்கு இணையாக பிரம்மாண்ட தயாரிப்பில் பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலரும் ‘வெப் சீரிஸ்’ எனும் குறுந்தொடர்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
இவ்வாண்டு ‘நெட்ஃபிளிக்ஸ்’ தளம் மட்டுமே 14 குறுந்தொடர்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. ஹாட்ஸ்டார், ஜீ-5, அமேசான் பிரைம், சோனி லிவ் ஆகிய தளங்களிலும் குறுந்தொடர்கள் வெளிவருகின்றன.
இன்ஸ்பெக்டர் ரிஷி
மாண்டேலா, லவ்வர் உள்ளிட்ட பல படங்களில் நடித்த கண்ணா ரவி, நடிகை சுனைனா, இளங்கோ குமரவேல், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் நடித்த நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘சீரியல் கில்லர்’ பாணியில் அமானுஷ்யம் கலந்து வெளிவந்துள்ளது இந்தக் குறுந்தொடர்.
காட்டுப்பகுதியில் அமைந்த கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளும் அதையொட்டிய மர்மங்களையும் அவிழ்க்கும் ரீதியில் இத்தொடர் அமைகிறது. கொலைகளுக்குக் காரணமாக நம்பப்படும் ‘வனரட்சி’, பல கதாபாத்திரங்கள், அவர்களின் உளவியல் சிக்கல்கள், மலைக் கிராமம், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, ஊர் மக்களின் மர்ம நம்பிக்கைகள் என பல சுவாரசியமான அம்சங்களோடு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது இத்தொடர்.
அமேசான் பிரைமில் 10 பாகங்களாக வெளியாகியுள்ள இத்தொடர் மர்மம், அமானுஷ்யம் நிறைந்த கதைகளை விரும்புவோர்க்கு சிறந்த தேர்வு.
தலைமைச் செயலகம்
முன்னணி இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராதிகா சரத்குமார் தயாரிப்பில், நடிகர் கிஷோர், ஷ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது ‘தலைமைச் செயலகம்’ தொடர்.
தமிழ்நாட்டில் ஓர் ஊழல் வழக்கில் சிக்கி தீர்ப்புக்காக காத்திருக்கும் முதல்வர் ஒருபுறம், தொடர் குற்றங்கள் செய்த பெண்ணை வடமாநிலத்தில் தேடும் புலனாய்வுத் துறை அதிகாரி மறுபுறம் என இரு கதைக்களத்துடன் நகரும் விறுவிறுப்பான அரசியல் குறுந்தொடர் இது.
இவ்விரண்டு கதைகளும் எங்கு சந்திக்கின்றன என்பதே இந்த எட்டுப் பாகத் தொடரின் சுவாரசியம்.
தொடர்புடைய செய்திகள்
கதாபாத்திரங்களின் தேர்ந்த நடிப்பு, இசையமைப்பாளர் ஜிப்ரானின் நேர்த்தியான பின்னணி இசை உள்ளிட்ட அம்சங்களுடன் ‘ஜீ ஃபைவ்வில்’ வெளிவந்துள்ள இத்தொடர், அரசியல் பாணி கதை விரும்பிகளுக்கு நல்ல தேர்வு.
உப்பு, புளி, காரம்
நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், ஃபரினா, தீபக் பரமேஷ் என பல நடிகர்கள் நடிப்பில் வெளியாகியுள்ளது நகைச்சுவைக் குறுந்தொடர் உப்பு, புளி, காரம்.
நடுத்தர வயதுடைய தம்பதி, நான்கு குழந்தைகள் என அவர்களின் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களைச் சுற்றிய கதையாகும். நவீன தலைமுறையின் காதல், உறவுகள், உளவியல் என பலவற்றைப் பேசுகிறது இக்கதைக் களம்.
தற்போது எட்டுப் பாகங்களாக வெளிவந்துள்ள நிலையில், வியாழக்கிழமைகளில் ஒவ்வொரு பாகமாக வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
குடும்ப உணர்வுகள் நிறைந்த பொழுதுபோக்குக் கதை விரும்பிகளுக்கு ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள இந்தத் தொடர் நல்ல தேர்வு.
இது தவிர, இந்தியில் வெளியாகி பிரபலமடைந்த ‘ஹிராமண்டி’ தொடரின் தமிழாக்கம், சன் நெக்ஸ்ட்டில் வெளியாகியுள்ள காதல் நகைச்சுவை கற்பனை கலந்த ‘ஃபியூச்சர் பொண்டாட்டி’, ஹாட்ஸ்டாரில் வெளியாகி 56 பாகங்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘ஹார்ட் பீட்’ ஆகியவையும் ரசிகர்களின் வாரயிறுதிப் பொழுதுபோக்குப் பட்டியலில் இணைந்துள்ளன.

