மறைந்த இந்திய அதிபரும் புகழ்பெற்ற அறிவியல் வல்லுநருமான டாக்டர் அப்துல் கலாமின் நினைவாக அப்துல் கலாம் இலட்சியக் கழகம் சார்பில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி சனிக்கிழமை மரம் நடுவிழா நடைபெற்றது.
பாசிர் ரிஸ் ஸ்திரீட் 52ல் உள்ள குடியிருப்புப் பகுதியில், புளோக் 573க்கு எதிரே 23 மரங்கள் நடப்பட்டன.
சிங்கப்பூரில் கடந்த பல ஆண்டுகளாக டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் பல நிகழ்வுகளை அப்துல் கலாம் இலட்சியக் கழகம் நடத்திவருகிறது. குருதிக்கொடை, தூய்மைப்படை, மாணவர் கல்வி உதவி, பிறந்தநாள் விழா என்று பல நிகழ்வுகளோடு, மரம் நடுவிழாவையும் ஒவ்வோர் ஆண்டும் நடத்திவருகிறது.
அவ்வகையில், இவ்வாண்டு நடைபெற்ற இந்த மரம் நடுவிழாவில் அப்துல் கலாம் இலட்சியக் கழகத்தின் முன்னாள் தலைவர் அமீரலி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
கழகத்தின் செயலவை உறுப்பினர்கள், ஆயுள் உறுப்பினர்கள், ஆர்வலர்கள் என, கிட்டத்தட்ட 50 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்வு சரியாக மணி 9.30க்குத் தொடங்கியது.
சிங்கப்பூர் தேசிய பூங்காக் கழகத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நடப்பட்ட மரங்கள் நூறு ஆண்டுகளுக்குமேல் நீண்டு வளரும் இனத்தைச் சார்ந்தவை. இந்த மரங்கள் தொடர்ந்து சிங்கப்பூரின் பசுமையையும் அப்துல் கலாமின் புகழையும் போற்றி நிற்கும் என்று கழகத்தினர் தெரிவித்தனர்.

