கன்னடத்துப் பைங்கிளியைக் கொண்டாடிய கலைஞர்கள்

4 mins read
d4801371-d823-4290-95b1-039a6e1a870e
நடிகை சரோஜா தேவியைக் கொண்டாட மேடையில் கூடிய கலைஞர்கள். - படம்: முத்து குமார்

‘கன்னடத்துப் பைங்கிளி’, ‘அபிநய சரஸ்வதி’ போன்ற பெயர்களால் மக்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் அமரர் சரோஜா தேவி.

ஏறக்குறைய எழுபது ஆண்டுகளாகத் திரையுலகை ஆண்டுவந்த பெருமை இவரைச் சேரும். 

நடிகை சரோஜா தேவியின் ரசிகர்கள்.
நடிகை சரோஜா தேவியின் ரசிகர்கள். - படம்: முத்து குமார்

பத்மஸ்ரீ, பத்மபூஷண், கலைமாமணி விருதுகளைப் பெற்ற நடிகை சரோஜா தேவி சென்ற ஆண்டு ஜூலை 14ஆம் தேதி இயற்கை எய்தினார்.

அவரின் நடிப்பாற்றலையும் திரைப்படப் பாடல்களையும் அங்கீகரிக்கும் வகையில் ‘காலத்தை வென்ற சரோஜா தேவியின் தமிழ்த் திரைப்படப் பாடல்கள்’ நிகழ்ச்சி சனிக்கிழமை(ஜனவரி 3) மாலை 6.30 மணியளவில் ஆர்இஎல்சி அரங்கில் நடைபெற்றது.


சிறப்பு விருந்தினரான துணை அமைச்சர் தினேஷ் வாசு தாசுடன் நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்த பார்வையாளர்கள்.
சிறப்பு விருந்தினரான துணை அமைச்சர் தினேஷ் வாசு தாசுடன் நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்த பார்வையாளர்கள். - படம்: முத்து குமார்

ஏறக்குறைய 500 பார்வையாளர்கள் கண்டு மகிழ்ந்த இந்த நிகழ்ச்சி, சிங்கப்பூரில் உள்ள கலைஞர்கள், ரசிகர்கள், தமிழ் சினிமா ஆர்வலர்களை ஒன்றிணைத்து, நடிகை சரோஜா தேவியின் திரைப்படங்களில் இடம்பெற்ற காலத்தால் அழியாத பாடல்களை நினைவுகூர்ந்தது.

திரு வீ புனிதன், 64, அவரது மனைவி திருமதி ராஜலட்சுமி புனிதன், 53, திருவாட்டி பிரபா சந்திரன் செத் ஆகியோர் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் திரு வீ  புனிதன் (இடது), திரு மனோகரன் மாணிக்கம் 
நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் திரு வீ  புனிதன் (இடது), திரு மனோகரன் மாணிக்கம்  - படம்: முத்து குமார்

திரு வீ புனிதன், 64, திரு மனோகரன் மாணிக்கம், 52, இருவரும் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் பல ஆண்டுகளாக மேடையிலும் தொலைக்காட்சியிலும் பாடல்கள் பாடிய  அனுபவம் கொண்ட பண்பட்ட மூத்த பாடகர்களுடன் ‘மணிமாறன் கிரியேஷன்ஸ்’ நடனக்குழுவினரும் தங்கள் துடிப்பான ஆடலுடன் நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

‘புனிதன் அண்ட் ஃபிரெண்ட்ஸ்’ எனும் இசை ஆர்வம் கொண்ட குழு  ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினே‌ஷ் வாசு தாஸ் கலந்துகொண்டார்.

அவர் நிகழ்ச்சியின் இறுதியில் தமது பாராட்டுகளைத் தெரிவித்தார். 

“நான் மீண்டும் என் சிறுவயதிற்கே சென்றதுபோல் உணர்கிறேன்.

“திரு வீ புனிதனின் ஒவ்வொரு பாடல் அறிமுகமும் அவர் எந்த அளவிற்கு ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

“நடனக் கலைஞர்களின் உடைகள் முதல் பாடகர்களின் உற்சாகம் வரை, கலைஞர்களின் உழைப்பு, அவர்கள் தங்கள் கலைமீது வைத்திருக்கும் அளவற்ற பற்றைப் பறைசாற்றுகிறது. மிகச்சிறப்பான ஒருங்கிணைப்பு!” என்றார் திரு தினேஷ்.

சிறுவயதிலிருந்தே தமிழ்மொழிமீதும் தமிழ்ப் பாடல்களின் வரிகள்மீதும் மிகுந்த ஆர்வம் கொண்ட திரு வீ புனிதன், தமிழ்ப் பாடல்களைக் கேட்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். 

“ஒருவரின் சொல்வளத்திற்குத் தமிழ் மொழி உதவுவதுபோலத் தமிழ்ப் பாடல்களும் அதிகம் உதவுகின்றன. மக்களுக்குப் பழைய பாடல்களின் அருமை பெருமைகளை எடுத்துரைப்பதும்  இந்த நிகழ்ச்சியின் ஒரு முக்கிய நோக்கமாக அமைந்தது,” என்று  திரு வீ புனிதன் கூறினார்.

இந்த நிகழ்ச்சி நடிகை சரோஜா தேவியின் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட வசனங்களின் அழகான தொகுப்புகளுடன் கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற பெருங்கவிஞர்களின் கவிநயத்தையும் எடுத்துரைத்தது.

நடிகை சரோஜா தேவியின் தீவிர ரசிகர்களின் நெஞ்சார்ந்த காணொளிச் செய்திகளும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.

இந்த நிகழ்ச்சி உள்ளூர் பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களுடன் ஒரு சிறப்பான கொண்டாட்டமாக அமைந்தது. 

புனிதன் & ஃபிரண்ட்ஸ் குழுவினர், உள்ளூர் இந்திய கலாசாரம் மற்றும் திறமைகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். 


பழைய திரைப்பட பாடல்களைப் பாடிய மூத்த பாடகர்கள்.
பழைய திரைப்பட பாடல்களைப் பாடிய மூத்த பாடகர்கள். - படம்: முத்து குமார்

இந்த நிகழ்ச்சியில் பாடிய ஆக மூத்த கலைஞரான திரு கிருஷ்ணசாமி மாருதையா, 72, “இது போன்ற கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் எனக்கு மிகுந்த விருப்பம் உள்ளது. பாடல்களுக்காகப் பயற்சி மேற்கொள்வதிலிருந்து மேடையில் நான் அணியப்போகும் உடைவரை அனைத்திலும் நான் அதிக கவனம் செலுத்துவேன். பாடல்களுக்கு ஏற்றவாறு வெவ்வேறு விதமான உடைகளை நானே தேர்ந்தெடுத்து நிகழ்ச்சிக்காகத் தயார் செய்வேன்,” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பாடிய திரு சூரியமூர்த்தி வெங்கடாசலம், 65, “பெரும்பாலும் இது போன்ற கலைநிகழ்ச்சிகளில் நாங்கள் கதாநாயகர்களைப் போற்றுவோம். ஆனால், இந்த முறை கதாநாயகியான சரோஜா தேவிக்காக நிகழ்ச்சியை வழங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று கூறினார்.


மேடையில் துடிப்புடன் நடனமாடிய மணிமாறன் கிரியேஷன்ஸ் நடனக் கலைஞர்கள்.
மேடையில் துடிப்புடன் நடனமாடிய மணிமாறன் கிரியேஷன்ஸ் நடனக் கலைஞர்கள். - படம்: முத்து குமார்

  மணிமாறன் கிரியேஷன்ஸ் நடனக்குழுவைச் சேர்ந்த பிரியா தவமணி, 29, “நடிகை சரோஜா தேவியின் முகபாவங்களையும் மென்மையான தோற்றத்தையும் மேடைக்குக் கொண்டுவர நானும் எனது குழுவினரும் அயராது பயிற்சி செய்தோம்,” என்றார். இந்த நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் தங்கள் கருத்துகளைத் தமிழ் முரசிடம் பகிர்ந்தனர்.

திருவாட்டி மலர்விழி தைமனசாமி, 61, “முதல்முறையாக இதுபோன்ற நிகழ்ச்சிக்கு நான் வருகிறேன். சிறுவயதிலிருந்தே நடிகை சரோஜா தேவியின் திரைப்படங்களை நான் விரும்பிப் பார்ப்பேன். பழைய படங்களைக் கண்டு மகிழ்ந்த நினைவுகளை இந்த நிகழ்ச்சி தூண்டியது,” என்று கூறினார். 

‘சங்கே முழங்கு’ பாடலுக்கு நடனமாடிய மணிமாறன் கிரேஷன்ஸ் நடனமணிகள்.
‘சங்கே முழங்கு’ பாடலுக்கு நடனமாடிய மணிமாறன் கிரேஷன்ஸ் நடனமணிகள். - படம்: முத்து குமார்

திருவாட்டி முத்தம்மாள் கே, 57, “நடனமணிகளின் பாவனைகள், உடைகள், ஒப்பனை என்னைக் கவர்ந்தன. இந்த நிகழ்ச்சிக்காகத் தேர்வு செய்யப்பட்ட பாடல்களும் அற்புதமாக இருந்தன. இது போன்ற நிகழ்ச்சிகளுக்காக நான் தொடர்ந்து எனது ஆதரவை வழங்குவேன்,” என்று தெரிவித்தார்.

“இனிமையான பழைய பாடல்களை அனுபவம் நிறைந்த பாடகர்கள் பாடுவதை நான் வெகுவாக ரசித்தேன். மூத்தோர்களுக்கு ஏற்றச் சிறப்பான நிகழ்ச்சியாக இது அமைந்தது,” எனக் குறிப்பிட்டார் திருவாட்டி வேணி, 69.

மூத்த குடிமக்களில் பலரும் எஸ்ஜி கலாசார சிறப்புத் தொகையைப் (SG Culture Pass) பயன்படுத்தி, இந்நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்