தலைமுறைகள் தாண்டி அனைவர்க்கும் ஊக்கத்தையும் மீள்திறனையும் அளிக்கும் பாடல்களை எழுதிய மகாகவி பாரதியாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘அச்சமில்லை’ எனும் தனிப்பாடலை வெளியிட்டுள்ளார் பிரபல உள்ளூர் இசையமைப்பாளர் ஷபீர்.
நவீன, சமகால இசையுடன் பாரம்பரியக் கூறுகளை இணைத்து புதுவடிவம் அளித்துவரும் ஷபீரின் அந்த இசையின் ஒலி வடிவம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) வெளியீடு கண்டது.
ஸ்பாட்டிஃபை, ஆப்பிள், அமேசான் மியூசிக் உள்ளிட்ட அனைத்து ‘ஸ்ட்ரீமிங்’ தளங்களிலும் இப்பாடலைக் கேட்கலாம்.
வளர்ந்துவரும் உள்ளூர் இயக்குநர் சுந்தர் நாகைய்யா இயக்கியுள்ள இந்தப் பாடலின் இசைக் காணொளி, ஷபீரின் அதிகாரபூர்வ யூடியூப் தளத்தில், பாரதியாரின் பிறந்த நாளான டிசம்பர் 11ஆம் தேதி (புதன்கிழமை) இரவு 8 மணிக்கு வெளியிடப்படும்.
துணிந்து முன்னேறுவதற்கான தன்னம்பிக்கையைத் தனக்குத் தானே ஏற்படுத்தும் விதமாக கடந்த 2016ல் ஷபீர் எழுதிய பாடல் ‘அச்சமில்லை’. பயத்தைப் போக்கி, ஒவ்வொருவரும் தனக்குள் இருக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு உண்மையான எதிரி எது என்பதை உணர்த்தும் நோக்கிலும் இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
பாரதியார், தாகூர், ரூமி ஆகியோர் தமக்குப் புனித மும்மூர்த்திகள் என்று சொல்லும் ஷபீர், அவர்களின் கவிதைகள் தமது கலைப் பயணத்தை வடிவமைத்து தமக்கு வலிமை அளித்ததாக ஆழமாக நம்புகிறார்.
தமது வாழ்வில் இருண்ட பக்கங்களைக் கடந்துவர பாரதியார் கவிதைகள் தம்மை வழிநடத்தின என்றும் இந்தப் பாடல் அவருக்குத் திருப்பிச் செலுத்தும் முயற்சி என்றும் கூறினார் ஷபீர்.

