வயது என்பது நம் மனதைப் பொறுத்ததே என்பதற்குச் சான்றாக, மக்களைப் பரவசப்படுத்தினார் சிங்கப்பூரில் நேரடி இசைநிகழ்ச்சி படைத்த உதித் நாராயண்.
சுமார் 2,500 பேர் நிறைந்திருந்த ‘ஸ்டார்’ அரங்கில், ‘ஃபிலோஸ் இன்டர்னேஷனல்’ ஏற்பாட்டில் அக்டோபர் 23ஆம் தேதி இரவு, காலத்தைப் பின்னோக்கிச் செல்லவைத்தார் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகளைப் பெற்றுள்ள உதித்.
அவருடன் இணைந்து அவரின் மனைவி தீபா, மகன் ஆதித்யா நாராயண், சரிகமப முன்னாள் போட்டியாளர் சனா அரோரா முதலானோர் மேடையை அதிரவைத்தனர்.
‘பாலிவுட்’டின் உலகளாவிய தாக்கத்தின் வெளிப்பாடாக, இந்தியர்களைத் தவிர்த்து மலேசிய, இந்தோனீசிய, சீன ரசிகர்களும் வந்திருந்தனர்.
“நாங்கள் பாலிவுட், குறிப்பாக ஷாருக்கான் ரசிகர்கள்,” என்றார் நண்பர்களுடன் வந்திருந்த ஹர்யாட்டி அலி.
நுழைவுச்சீட்டுகள் $88 முதல் $688 வரை விற்பனையாகின.
பெரும்பாலும் இந்திப் பாடல்களைப் பாடினாலும், தமிழ் ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க உதித், ‘சஹானா சாரல் தூவுதோ’ பாடல் வரிகளைப் பாடினார். எனினும், கூடுதலாகத் தமிழில் பாடியிருக்கலாம் என்றார் பார்வையாளர் ரிவேஷா கலைச்செல்வன்.
உதித், ஆதித்யா மேடையேறுவதற்கு முன்னரே உள்ளூர்ப் பாடகர்கள் வலம்வந்து மக்களைக் கவர்ந்தனர். மீடியாகார்ப் ‘நெஞ்சுக்குள்ளே’ 2021 பாடல் போட்டி வெற்றியாளர் அப்துல் ஜலீல் ‘கொக்கரக்கொக்கரக்கோ’ பாடலோடு நிகழ்ச்சியைத் தொடங்கினார். ‘எங்கே என் புன்னகை’, ‘திவானி மஸ்தானி’ பாடல்கள் பாடி தமது இனிய குரலில் லயிக்க வைத்தார் சுதாஷினி ராஜேந்திரன்.
தொடர்புடைய செய்திகள்
மலேசியாவின் நடியா ஃபர்ஷா-ஏ ஆர் வான்ஸ் இணையரும் இனிதாகப் பாடினர். ராயலூஷன் நடனக்குழு கண்கவர் நடனங்களை வழங்கியது.
“ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இத்தனை பேர் மத்தியில் அவர் பாடியதைக் காணும்போது மகிழ்ச்சியாக இருந்தது,” என்றார் கார்த்திக் காந்தி.
இதையடுத்து, நவம்பர் 28ஆம் தேதி உதித் நாராயண் பினாங்கில் நிகழ்ச்சி வழங்க உள்ளார்.

