முழுநேர ஆசிரியராகப் பணிபுரியும் பிரவின் தேவேந்திரன், 29, சமூக ஊடகங்களில் ரகசிய விடுமுறை பற்றிய ஒரு காணொளியைக் கண்டதும் இரு நாள்கள் யாருக்கும் தெரியாமல் விடுமுறை எடுக்க முற்பட்டார்.
இதனால் அவர் வேலைப்பளுவைச் சரிவர நிர்வகிக்க முடிந்தது. மேலும், வேலையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள அவருக்குப் புத்துணர்ச்சியும் பிறந்தது.
வெளியிடத்திலிருந்து வேலைசெய்யும் சூழல்களைப் பல பணியிடங்கள் ஏற்றுவருவதால் ஊழியர்கள் பலரும் தங்கள் பயணத்திட்டங்களை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். மேலும், முதலாளிகளுடன் தங்கள் வேலை-வாழ்க்கைச் சமநிலை பற்றிப் பேசுவதால் ஊழியர்கள் சிலருக்கு சிரமம் ஏற்படலாம். ‘ரகசிய விடுமுறைக்கான’ காரணங்களில் இதுவும் ஒன்று.
“ஓர் ஆசிரியராகப் பணிபுரிவது எளிதானதன்று. ரகசிய விடுமுறையால் வேலைச்சூழல் மாறுவதால் மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்புகள் சற்றுக் குறைவு,” என்கிறார் பிரவின்.
சந்தை ஆய்வு நிறுவனமான ‘தி ஹாரிஸ்’ கருத்துக் கணிப்பு நிறுவனம் ஏப்ரல் மாதம் நடத்திய ஆய்வில், அமெரிக்காவில் கணக்கெடுக்கப்பட்ட 1,170 ஊழியர்களில் 28 விழுக்காட்டினர் தங்கள் முதலாளிகளுக்குத் தெரிவிக்காமல் விடுமுறை எடுத்தது தெரியவந்துள்ளது.
“அதிக வேலைப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் ஊழியர்கள் ரகசியமாக விடுமுறை எடுக்கின்றனர். அதேநேரத்தில் அவர்கள் தங்கள் நேரத்தின் மீது அதிகக் கட்டுப்பாட்டை விரும்புவதும் ஒரு காரணமாகும்,” என்று கருத்துரைத்தார் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் துணை விரிவுரையாளர் ஸ்ரீராம் ஐயர்.
போட்டி நிறைந்த பணியிடங்களில் ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்கிறார்கள். அதேநேரத்தில் கொவிட்-19 பெருந்தொற்றுக்குப்பின் ஏற்படும் பயண ஆசைகளை நிறைவேற்றுவதற்கான ஆர்வமும் அவர்களுக்கு இருக்கிறது என்றார் ஸ்ரீராம்.
“இதனால் வேலை நேரத்தையும் ஓய்வு நேரத்தையும் ஒருங்கிணைக்கும் போக்கு உருவாகிறது,” என்கிறார் இவர்.
தொடர்புடைய செய்திகள்
நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளுக்கான முத்தரப்பு வழிகாட்டிகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த முதல் படி, ரகசிய விடுமுறைப் போக்கைத் தூண்டும் பலரின், வெளியிடத்திலிருந்து வேலைசெய்யும் பணிக்கான விருப்பத்தைக் குறிக்கிறது.
நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளுக்கு முறையான கோரிக்கைகளை ஊழியர்கள் எடுத்துரைக்க அனைத்து முதலாளிகளும் ஒரு செயல்முறையைக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த வழிகாட்டிகள் வரும் டிசம்பர் மாதம்தான் நடைமுறைக்கு வரும் என்றாலும், சில நிறுவனங்கள் ஏற்கெனவே நீக்குப்போக்கான வேலைக்கு அனுமதியளிக்கும் அணுகுமுறைகளை ஏற்றுள்ளன.
2021 முதல், கூகல் நிறுவனப் பணியாளர்கள் தங்கள் முக்கிய அலுவலகத்தைத் தவிர வேறு இடத்திலிருந்து ஆண்டுக்கு நான்கு வாரங்கள் வரை வேலை செய்யலாம். ‘ஏர்பிஎன்பி’, ‘டிராப்பாக்ஸ்’ போன்ற நிறுவனங்கள் முழுமையாக வெளியிடத்திலிருந்து வேலைசெய்யும் கலாசாரங்களை ஏற்றுக்கொண்டன. இது வருங்காலத்தில் பணியில் சேர்பவர்களுக்கு அனுகூலங்களில் ஒன்றாக விளம்பரப்படுத்தப்படுகிறது.
நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளுக்கு முத்தரப்பு வழிகாட்டிகளின் சவால்கள் பற்றிய கவலைகளை நிவர்த்தி செய்ய சில முக்கிய உத்திகளைச் செயல்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, நிறுவனத்தின் தரவைப் பாதுகாக்க மெய்நிகர் தனியார் கணினிக் கட்டமைப்பைச் (VPN) செயல்படுத்தலாம்.
தொலைப்பணி சூழல்கள் பொதுவானதாகி வருவதால், ஊழியர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்துவதை விட்டு, அவர்களின் வேலை தரத்தை மதிப்பீடு செய்வது சிறந்தது.
“ஆரோக்கியமான பணிச்சூழலில், நீக்குப்போக்கான வேலை முறை பற்றி கருத்துகளை வெளிப்படையாக பரிமாறிக்கொள்ள முடியும்,” என்றார் Herbert Smith Freehills வேலைவாய்ப்பு சட்ட நிறுவனத் தலைவர் ஃபாத்திம் ஜுமாபோய்.
எவ்வாறாயினும், தங்கள் முதலாளிகள் அத்தகைய உரையாடல்களுக்குத் தயாராக இல்லை என்று ஊழியர்கள் உணர்ந்தால் அவர்கள் முதலாளிகளுக்குத் தெரியாமல் சில சூழ்நிலைகளைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு அதே முடிவை அடைகிறார்கள் என்கிறார் திருமதி ஃபாத்திம்.

