2012ல் எஃப்1 சிங்கப்பூர் கிராண்ட் பிரியில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துநராகத் தொடங்கினார் டிரிப்திபால் கில், 32.
இன்றோ, அவர் ரெட் புல், ஏல்ஃபாடெளரி, ஏஸ்டன் மார்டின், மெர்சிடிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு லிமோசின் கார்களை வழங்கி ஒருங்கிணைத்துவருகிறார்.
இவ்வாண்டின் வெற்றியாளர் லேண்டோ நோரிஸ், இரண்டாம் நிலையைப் பிடித்த மேக்ஸ் வெர்ஸ்டேப்பன், 2022 சிங்கப்பூர் வெற்றியாளர் செர்ஜியோ பெரேஸ் எனப் பல எஃப்1 ஓட்டுநர்களும் இவர் ஒருங்கிணைத்த லிமோசின்களில் பயணிக்கின்றனர்.
2012லிருந்து சிங்கப்பூரில் நடக்கும் ஒவ்வொரு எஃப்1 போட்டிக்கும் தவறாமல் சென்றுவரும் இவர், அவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, கூடுதலான எஃப்1 நிறுவனங்களுடன் தொடர்புகளையும் ஏற்படுத்திவருகிறார்.
“முந்தைய ஆண்டுகளைவிட எஃப்1 இவ்வாண்டு வேறுபட்ட அனுபவமாக இருந்தது. நான் எஃப்1 பேடோக்கைக் கண்டேன். ரெட் புல் பிரத்தியேக சொகுசு அறையில் இருந்தபடி போட்டியைக் கண்டேன்.
“மற்ற எஃப்1 நிறுவனங்களை எனக்கு அறிமுகப்படுத்திய ரெட் புல்லுக்கு எனது மிகப் பெரிய நன்றி,” என்றார் டிரிப்திபால்.
‘15 ஆண்டுகளில் முதன்முறையாகப் பாதுகாப்புக் கார்கள் தேவைப்படவில்லை’
கார் பந்தயத்தட ஒழுங்குபடுத்துநர்களாகப் பணியாற்றிய சபரிஷ், 25, சிபி, 25, தடத்தில் ஏதேனும் கூர்மையான பொருள்கள் இருந்தால் அவற்றைக் கண்டு அகற்றும் பொறுப்பை வகித்தனர். அதனால் முதன்முறையாக அவர்களால் எஃப்1 சிங்கப்பூர் கிராண்ட் பிரியைக் காணமுடிந்தது.
“முதன்முறையாக எந்தப் பெரிய விபத்தும் நேராததால் பாதுகாப்புக் கார்கள் தேவைப்படவில்லை. அதனால் பந்தயத்தில் சுவாரசியம் சற்று குறைந்தது. ஆனால் நல்ல அனுபவம்,” என அவர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
“எங்கள் பள்ளி மூலம் இவ்வாண்டின் எஃப்1ல் எங்களுக்குப் பகுதிநேரம் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது. அதனால் போட்டியை நேரில் கண்டுகளித்தோம்,” என்றனர் சிங்கப்பூரைச் சேர்ந்த இல்மி, ஷூஹர்.
‘கூடுதல் வசதிகளை எதிர்பார்த்தேன்’
எஃப்1 சிங்கப்பூர்க் கார் பந்தயத்தை முதன்முறை காண்பதற்காக சென்னையிலிருந்து வந்திருந்த மிதுன், ஒரு சிறு விபத்தால் ஊன்றுகோலைப் பயன்படுத்துபவர்.
எஃப்1 வளாகத்தில் நெடுந்தூரம் நடக்க சிரமப்பட்ட அவர், அதிகாரிகளிடம் சக்கர நாற்காலியைக் கேட்டபோது அவர்கள் மருத்துவ அவசரம் இருந்தால்தான் சக்கர நாற்காலி கொடுக்கமுடியும் எனக் கூறியதாகச் சொன்னார்.
இதனால், அவரது நண்பர் வெளியே சென்று ஒரு சக்கர நாற்காலியை வாங்கவேண்டியிருந்தது. “கூடுதல் உதவி வழங்கப்படும் என நம்பியிருந்தோம்,” என்றார் அவர்.
எஃப்1 வளாகத்தில் நுழைவதற்குப் புரொமனாட் வெளிவழி ‘சி’யையும் வெளியேறுவதற்கு வெளிவழி ‘ஏ’யையும் பயன்படுத்தவேண்டியிருந்தது சற்று குழப்பமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
நான்கு முறை சிங்கப்பூரில் வென்றுள்ள லூவிஸ் ஹேமில்டன் அல்லது 2024 எஃப்1 ஓட்டுநர்ப் பட்டியலில் முதலிடத்தை வகிக்கும் மேக்ஸ் வர்ஸ்டாப்பன் இம்முறை வெல்வார்கள் என கனவுகோட்டைக் கட்டியிருந்த ரசிகர்களுக்கு நோரிசின் வெற்றி ஏமாற்றமளித்தது.
“நான் ஹேமில்டன் ரசிகை என்பதால் சற்று கவலை. ஆனால், ஏற்பாடுகள் நன்றாக இருந்தன. சிங்கப்பூரர்கள் எங்களை அன்போடு வரவேற்றனர்,” எனப் புகழ்ந்தார் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த லெராய்ட்டோ.
“போட்டி முடிவைத் தவிர மற்ற அனைத்தும் அருமையாக இருந்தன,” என்றார் பந்தயத்தைக் காணச் சென்றிருந்த டேவிட்.

