ஆதி சங்கரரின் ‘சாதனா பஞ்சகம்’ ஐந்தே வரிகளைக் கொண்டது. அவற்றை நாற்பது மதியுரைகளாகத் தொகுத்துள்ளார் விழிப்புணர்வு வல்லுநர் கு.கதிரேசன்.
அவசர உலகில் வேதாந்தம் பற்றிய விவாதம் அவசியமா என்ற கேள்விக்குப் பதில் தரும் நோக்கில் இந்நூலை எழுதியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
‘விடுதலைக்கான 40 படிநிலைகள்’ எனப் பொருள்படும் ஆங்கிலத் தலைப்பில் உள்ளது அந்நூல். தொன்மையான ஆன்மிக வழிமுறைகளைத் தற்கால நடைமுறைக்குள் கொண்டுவந்து வாழ்வை எவ்வாறு வளப்படுத்துவது என்பதை அது விளக்க முற்படுகிறது.
தமது நூலைப் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியைத் திரு கதிரேசன், இந்து நிலையத்தில் செப்டம்பர் 6ஆம் தேதி வழிநடத்தினார்.
வர்த்தக நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்ற திரு கதிரேசன், இந்து அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இந்து சமயக் கல்வி பயின்றார்.
அன்றாடத் தேவைகளை நாடி ஓடும் எளிய மக்களின் வாழ்க்கைக்குப் பொருந்துமா எனும் ஐயத்திற்கு திரு கதிரேசனின் படைப்பு விடையளிக்கிறது.
இடம், பொருள், ஏவலை அறிந்தே மெய்யியல் பற்றிய ஆய்வு நடைபெறுவது சிறந்ததாகும் என்று அவர் விளக்கினார். மூதாதையரின் அறிவை மனத்துடன் மேலும் பிணைப்பதற்கு இந்தக் கொள்கை முக்கியமானதாகும்.
“தற்போதுள்ள மொழிநடையும் மக்களின் வாசிப்புப் பழக்கமும் வெகுவாக மாறியுள்ளதால் அவற்றுக்கேற்ற புதிய படைப்புகள் தேவை,” என்கிறார் திரு கதிரேசன்.
தொடர்புடைய செய்திகள்
வார்த்தை விளையாட்டால் வாசகர்களைக் குழப்புவதற்குப் பதிலாக, சுருங்கச் சொல்லித் தாக்கத்தை ஏற்படுத்த அவர் முனைந்திருக்கிறார்.
‘மைண்ட்ஃபுல்னஸ்’ (mindfulness) எனப்படும் விழிப்புணர்வுக் கலை வல்லுநராக உள்ள திரு கதிரேசன், ‘எட்டு நாள்களில் விழிப்புணர்வு’ என்ற நூலையும் எழுதியுள்ளார்.
திரு கதிரேசன் போல, சிங்கப்பூர் எழுத்தாளர்களின் தரமான படைப்புகளை ஒட்டிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வதாகத் தமிழ் முரசிடம் இந்து நிலையம் தெரிவித்தது.