இணையத்தில் பாதுகாப்பாக பொருள்கள் வாங்குவதற்கான வழிமுறைகள்

4 mins read
மின்வணிக மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இணையத்தில் பாதுகாப்பாக பொருள்கள் வாங்குவதற்கான வழிமுறைகள் இதோ.
9eda683f-dc3c-4332-8244-34d15d1f6a9c
மின்வணிக தளங்களில் புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு மதிப்பீடுகளைக் கொண்டு வாங்கும் முன் சரிபார்க்கவும். - படம்: ஜெட்டி இமேஜஸ்

தமது உறவினரின் 16ஆவது பிறந்தநாளுக்காக கடந்தாண்டு புது மடிக்கணினி வாங்க எண்ணினார் 37 வயது சமூக பணியாளர் மார்க் ஃபெர்னாண்டெஸ். சில்லறை வணிகக் கடையில் அதன் விலை $1,400 என அறிந்த அவர் தயங்கினார்.

உடனே இணைய வாடிக்கையாளர் தளமான கரோசலில் விலை மலிவான மடிக்கணினிகளைத் தேடினார் திரு ஃபெர்னாண்டெஸ். மின்வணிக மோசடிகள் அதிகரிப்பதை அறிந்திருந்த அவர், “நான் செய்தது ஆபத்தானதே,” என ஒப்புக்கொண்டார்.

கடந்தாண்டு பதிவான அனைத்து மோசடி வகைகளிலும் மின்வணிக மோசடிகள் இரண்டாவது ஆக அதிக எண்ணிக்கையில் இருந்ததாக சிங்கப்பூர் காவல்துறை குறிப்பிட்டது. பதிவான புகார்களின் எண்ணிக்கை 2022ல் 4,762இலிருந்து 9,783ஆக 2023ல் உயர்ந்தன. ஃபேஸ்புக், கரோசல், டெலிகிராம் ஆகிய மூன்று தளங்களில் மின்வணிக மோசடிகள் மிக வழக்கமாக நடந்தேறின.

பாதுகாப்பாக இயங்கிய திரு ஃபெர்னாண்டெஸ் மோசடியிலிருந்து தப்பினார். கடையில் இருந்ததைவிட $400 குறைவான விலையில், பிரிக்காத புது மடிக்கணினி ஒன்றை கரோசலில் கண்ட அவர் மகிழ்ச்சியடைந்தார். பாதுகாப்பாக இருக்கவேண்டி, விற்பவரின் சுயவிவரத்தை அவர் சரிபார்த்தார். ‘சரிபார்க்கப்பட்டது’ என குறிக்கும் சின்னம் அதில் இருப்பதை கண்டார். மேலும், விற்பவரின் கடந்த பரிவர்த்தனைகளுக்கான மதிப்பீடுகளையும் விமர்சனங்களையும் திரு ஃபெர்னாண்டெஸ் கூர்ந்து ஆராய்ந்தார்.

கரோசலில் மூன்று சரிபார்ப்பு படிகளை (சிங்பாஸ், தொலைபேசி எண், மின்னஞ்சல் வாயிலாக) முடிக்கும் பயனர்களின் சுயவிவரங்களில், பயனர்பெயரின் அருகில் ஒரு நீலநிற சரிபார்ப்பு சின்னம் காணப்படும்.

திரு ஃபெர்னாண்டெஸ் அவர் தேர்ந்தெடுத்த மடிக்கணினியை வாங்குவதற்கு, ஒப்படைத்தப்பின் பணம் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடுத்தார். அடுத்த நாள், விற்பவரை நேரில் சந்தித்து மடிக்கணினியைப் பெற்றுக்கொண்டார். அது நல்ல நிலையில் இருப்பதை சரிபார்த்ததன் பின்னர், பேநவ் வழியாக அவர் பணம் செலுத்தினார்.

நல்ல விலையில் பயனுள்ள ஓர் அன்பளிப்பை வாங்கிய திரு ஃபெர்னாண்டெஸ், அவரின் உறவினர் அம்மடிக்கணினியைப் பெற்றதில் மகிழ்ச்சியடைந்ததோடு, ஓராண்டுக்குப் பிறகும் சிக்கலில்லாமல் அதனைப் பயன்படுத்துவதாக பகிர்ந்துகொண்டார்.

பலமுறை சரிபார்க்கவும்

திரு ஃபெர்னாண்டெஸ் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்துறை அமைச்சு இணைய பரிவர்த்தனைகளுக்காகப் பரிந்துரைக்கும் “சிறந்த பழக்கங்களை” சேரும். நேரில் பணம் செலுத்துவது, விற்பவரின் சுயவிவரங்களைச் சரிபார்ப்பது ஆகியவை இவற்றில் அடங்கும்.

அமைச்சுகளுக்கு இடையிலான மோசடி குழுவில் பங்கு வகிக்கிறது உள்துறை அமைச்சு. கடந்த மாதம் 2024ஆம் ஆண்டுக்கான மின்வணிக தள பரிவர்த்தனை பாதுகாப்பு மதிப்பீடுகளை (டி.எஸ்.ஆர்) அது வெளியிட்டது.

“மின்வணிக தளங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல்களுக்கும், இணைய பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும்போது கருத்தில் கொள்ளவேண்டியவற்றுக்கும் டி.எஸ்.ஆரை நாட மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்,” என்றார் காவல்துறை மேற்பார்வையாளரும், சிங்கப்பூர் காவல்துறை மோசடி பொது கல்வி அலுவலகத்தின் துணை இயக்குநருமான மேத்தியூ சூ.

பரிந்துரைக்கப்பட்ட அம்சங்கள் இல்லாத மின்வணிக தளங்களைப் பயன்படுத்தும்போது அதிக கவனம் தேவை என்றும், அடையாள அட்டை எண் அல்லது நிறுவன அடையாள எண் ஆகிய அரசாங்க ஆவணங்களைக் கொண்டு சரிபார்க்கப்பட்ட விற்பனையாளர்களையே நாடவேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், இணைய பரிவர்த்தனைகள் புரிய பாதுகாப்பான பணம் செலுத்தும் முறைகளைப் பயன்படுத்துமாறும் அவர் தெரிவித்தார்.

உதாரணத்துக்கு, ஷோப்பி, லசாடா முதலிய மின்வணிக தளங்கள் எஸ்க்ரோ எனப்படும் மூன்றாம் தரப்பு பணம் செலுத்தும் முறையைப் பயன்படுத்துகின்றன. குறிப்பிட்ட கால அவகாசத்துக்குப் பின், அல்லது வாடிக்கையாளர்கள் அவர்களின் பொருள்களைப் பெற்றதாக உறுதிபடுத்திய பின்னரே விற்பனையாளர்களுக்குப் பணம் அனுப்பப்படுகின்றது.

ஃபிஷிங் மோசடி அதிகரிப்பு

சமூக ஊடக விளம்பரங்களைக் கொண்டு அமையும் ஃபிஷிங் மோசடிகள் அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது. 

ஜனவரி முதல் இத்தகைய மோசடிகளுக்கு ஆளான 104 நபர்கள் குறைந்தபட்சம் $63,000 இழந்துள்ளனர். 

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டிக்டாக் முதலிய சமூக ஊடக தளங்களில் உள்ள விளம்பரங்களால் இந்நபர்கள் ஈர்க்கப்படுவர். அவற்றை சொடுக்கும்போது, மோசடி இணையத்தளங்களுக்கு இட்டுச்செல்லப்படுவர். குறிப்பிடப்பட்ட பொருள்களை வாங்குவதற்கு அத்தளத்தில் தங்களின் கடன் அல்லது பண அட்டை விவரங்களையோ ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்களையோ உள்ளிடுவர். 

அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் தங்களின் அட்டைகளில் ஏற்படும்போதே பாதிக்கப்பட்டோர் தாங்கள் மோசடிக்குள்ளாகி இருப்பதை உணர்வர்.

மின்வணிக தளங்களின் மோசடி எதிர்ப்புத் திட்டங்கள்

அமைச்சுகளுக்கு இடையிலான மோசடி குழுவினால் ஏப்ரலில் வெளியிடப்பட்ட மின்வணிக தள டி.எஸ்.ஆர், மின்வணிக தளங்களுக்கு ஒட்டுமொத்த பாதுகாப்பு மதிப்பீடுகளை வழங்குகின்றது. இம்மதிப்பீடுகள் தளங்கள் எந்த அளவிற்கு முக்கிய மோசடி எதிர்ப்பு பாதுகாப்பு அம்சங்களைச் செயல்படுத்தி உள்ளன என்பதை குறிப்பவை.

இவற்றில் அடங்குபவை:

  1. விற்பனையாளர்களின் அடையாளத்தை சரிபார்ப்பதற்கான அம்சங்கள்
  2. விற்பனையாளர்களின் மோசடி நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கான அம்சங்கள்
  3. பாதுகாப்பான பணம் செலுத்தும் முறைகள்
  4. பரிவர்த்தனை பதிவுகளையும் பயனர் தரவுகளையும் பேணுதல்
  5. முறையிடுவதற்கும் வழக்கு தீர்ப்பதற்குமான வழிமுறைகள்

இணையத்தில் வாங்கும்போது பாதுகாப்பாக இருங்கள்

ஸ்கேம்ஷீல்டு செயலி, பாதுகாப்பு அம்சங்களை சேர்க்கவும்

ஸ்கேம்ஷீல்ட் செயலியை தரவிறக்கம் செய்துகொண்டு, வங்கி செயலிகள், சமூக ஊடக தளங்கள், சிங்பாஸ் கணக்குகள் ஆகியவற்றில் இருபடி சரிபார்ப்பு முதலிய பாதுகாப்பு அம்சங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். பேநவ், பேலா உள்ளிட்ட மின்னிலக்க வங்கி பரிவர்த்தனைகளுக்கு பரிவர்த்தனை வரம்புகளை ஏற்படுத்துங்கள். உங்களின் தொலைதொடர்பு நிறுவனங்களின்மூலம் பன்னாட்டு அழைப்புகளைத் தடுக்கலாம். முக்கிய வங்கிகள் வழங்கும் ‘பணப்பூட்டு’ அம்சத்தை செயல்படுத்தி அன்றாட செலவுகளுக்குத் தேவைப்படாத நிதியை ஒதுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

அதிகாரப்பூர்வ தளங்களை நாடி மோசடி அறிகுறிகளை சரிபார்த்துக்கொள்ளவும்

ஸ்கேம்ஷீல்டின் வாட்சாப் வசதியைப் பயன்படுத்தியோ, மோசடி ஒழிப்பு உதவித் தொடர்பான 1800-722-6688 எண்ணை அலுவலக நேரங்களில் அழைத்தோ, scamalert.sg இணையத்தளத்தை நாடியோ, மோசடி அறிகுறிகளை சரிபார்த்துக்கொள்ளுங்கள். அலுவலக நேரங்களுக்குப் பின் 1800-255-0000 எனும் காவல்துறை உதவி தொடர்பை அழைத்து கூடுதல் சரிபார்ப்புகளையும் அறிவுரைகளையும் நாடலாம். சந்தேகப்படும்படியாக உள்ள இணைப்புகளைத் தட்டவேண்டாம். தெரியாதோரிடமிருந்து கைதொலைபேசி செயலிகளை தரவிறக்கம் செய்யவேண்டாம்.

அதிகாரிகள், குடும்பத்தார், நண்பர்களிடம் தெரிவிக்கவும்

வங்கியிடமும் காவல்துறையிடமும் உடனே மோசடி குற்றம் குறித்து பதிவு செய்யுங்கள். சந்தேகப்படும்படியான கணக்குகளை சமூக ஊடக தளங்களில் தடுக்கவும். ஆக அண்மைய மோசடி போக்குகளை குடும்பத்தார், நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அண்மைய மோசடி ஒழிப்பு ஆலோசனைகளைப் பெற தேசிய குற்றத் தடுப்பு மன்றத்தின் ஸ்கேம்அலர்ட் வாட்சாப் சேனலைப் பின்தொடருங்கள்.

சிங்கப்பூர் காவல்துறையுடன் இணைந்து வழங்கப்படுகிறது

குறிப்புச் சொற்கள்