இசை நிகழ்ச்சிகள், உணவுக் கூடங்கள் நிறைந்த சிங்கப்பூரின் ஆகப் பெரிய இரவு அனுபவமான சிங்கப்பூர் இரவுத் திருவிழா 16வது முறையாகத் திரும்புகிறது.
ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 6 வரை பிராஸ் பாசா, பூகிஸில் நடைபெறவிருக்கும் ஹெரிடேஜ் எஸ்ஜி ஏற்பாடு செய்துள்ள அவ்விழாவில், சிங்கை தீவின் வரலாற்றையும், அது எவ்வாறு மற்ற தீவுகளோடு நம்மை இணைக்கிறது என்பதையும் கண்டறியலாம்.
வண்ணமயமான ஒளி நிகழ்ச்சிகள், புதுமையான படைப்புகள், உணவு மற்றும் பொருள்களை விற்கும் துடிப்புமிக்க கூடங்கள் என இவ்விழாவில் பற்பல நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடலாம்.
தினமும் இரவு 7.30 மணியிலிருந்து இரவு 11 மணிவரை நடைபெறும் இவ்விழா, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் மட்டும் நள்ளிரவு 12 மணிவரை நீட்டிக்கப்படும்.
கெத்தே கிரீனில் (Cathay Green) அமைந்திருக்கும் ‘ஸ்கை காசல்’ என்ற கலைப் படைப்பில் நகரும்போது நம் அசைவுக்கு ஏற்றவாறு வண்ணம் மாறும் பெரிய பலூன்களை மக்கள் கண்டு ரசிக்கலாம்.
சவால்களைச் சந்தித்த பிறகு ஒளி பிறக்கும் என்ற நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் விதமாக அப்படைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் இரவுத் திருவிழாவின் மறுபக்கம், பரபரப்பான நகரத்திற்கு மத்தியில், கேப்பிட்டல் சிங்கப்பூருக்கு (Capitol Singapore) சென்று, ‘கம்போங் சில்’ (Kampong Chill) கூடாரத்தில் அமைதியை நாடலாம்.
சிங்கப்பூரின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் விதமாக, அமைதியான நடவடிக்கைகளையும் சிறப்புப் பொருள்களையும் அங்குப் பார்க்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
மேல்விவரங்களுக்கு https://www.heritage.sg/sgnightfest என்ற இணையத்தளத்தை நாடலாம்.

