காமினி சுப்ரமணியம்
அமெரிக்க அரசியல் விமர்சகர் சார்லி கிர்க் அண்மையில் திடீரென சுடப்பட்ட காட்சியைக் கண்ட இணையவாசிகள் பலருக்கு அது மனத்தளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம்.
அத்தகைய வன்முறைக் காணொளிகள் இணையத்தில் தீயாகப் பரவும்போது நீங்கள் விரும்பாத சிலவற்றைப் பார்க்க நேரிடலாம்.
அத்தகைய காட்சிகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள சில வழிமுறைகள் உள்ளன.
ஒன்றை நினைவில் கொள்வது நல்லது. சமூக ஊடகங்கள் ஒருவரின் நிம்மதியைப் பாதுகாக்க உருவாக்கப்படவில்லை. ஒருவரைச் சுண்டியிழுத்து, தொடர்ச்சியாக ஈடுபாடுகொள்ளச் செய்யும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஓராண்டாக, பெரும்பாலான சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் படைப்புகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைக் குறைத்துள்ளன.
அதனால், முன்பைவிட விரும்பத்தகாத கருத்துகளும் படைப்புகளும் பொதுமக்களின் பார்வைக்கு மேலும் எளிதாகத் தென்படுகின்றன.
எல்லாவற்றையும் கண்டுகொள்ளவேண்டும் என்ற அவசியம் யாருக்கும் இல்லை.
தொடர்புடைய செய்திகள்
உண்மைச் சம்பவங்களாக இருந்தாலும் கோரமான காட்சிகளையோ வாசகங்களையோ பார்க்காமல் இருப்பது ஒருவித பாதுகாப்பு நடவடிக்கையாகும்.
ஒருவரின் மனநிலையைப் பாதுகாப்பது என்பது, உண்மையை மறுப்பதோ புறக்கணிப்பதோ அன்று.
மனநலம் பேணுவதின் அவசியம்
மீண்டும் பார்ப்பது, மன அழுத்தம், பதற்றம் போன்ற தேவையற்ற உணர்வுகளை வன்முறை சார்ந்த ஊடகங்கள் ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
குறுகிய காலத்திற்கு மட்டுமன்று, நீண்ட காலத்திற்கு ஒருவரது மீள்திறன், நீடித்த வன்முறையைக் காண்பதால் தேயக்கூடும்.
அதனால், ஒருவர் தம்மையும் பிறரையும் பராமரிப்பதற்குத் தேவையான உள்வளங்களை இழக்கலாம்.
கவனிக்கும் ஆற்றல் மதிப்புமிக்கது என்பதால் அந்த ஆற்றலைப் பாதுகாப்பது தற்பேணுகையின் முக்கிய அங்கமாகும்.
உணவைப் போலவே, எல்லா கருத்துகளையும் ஒருவர் உள்வாங்க வேண்டியதில்லை.
கெட்டுப்போன பண்டங்கள் பரிமாறப்பட்டுள்ளன என்பதற்காக அவற்றைச் சாப்பிட முடியுமா? அதுபோலத்தான் சமூக ஊடகமும்.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் எல்லாக் கருத்துகளையும் கவனிக்கவேண்டிய அவசியம் இல்லை. நாம் என்ன உள்வாங்குகிறோம் என்பது நம் நலம் சார்ந்ததாகும்.

