சிங்கப்பூருக்குச் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்படும் செல்லப்பிராணிகள் மூலம் ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி நோய் பரவும் ஆபத்து உள்ளது.
வெறிநாய்க்கடி நோய், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய கொடிய தொற்றாகும். அறியப்படாத இடங்களிலிருந்து கடத்தி வரப்படும் தடுப்பூசி போடப்படாத செல்லப்பிராணியின் ஒரேயொரு கடிகூட மனித உயிரைப் பறிக்கக்கூடும்.
சிங்கப்பூர் 1953ஆம் ஆண்டு முதல் வெறிநாய்க்கடி நோயற்ற நாடாகத் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையைத் தக்கவைக்க அனைவரும் பொறுப்புடன் செயல்படுவது இன்றியமையாதது. வெறிநாய்க்கடி நோய், பாலூட்டிகளின் நரம்பு மண்டலத்தையும் மூளையையும் கடுமையாகத் தாக்குகிறது. நோய் அறிகுறிகள் தென்படத் தொடங்கியதும் உயிரிழப்பு ஏற்படுவது கிட்டத்தட்ட உறுதி.
பாதிக்கப்பட்ட விலங்கின் உமிழ்நீர், மனிதர்களின் உடலில் உள்ள காயங்கள் அல்லது கண், மூக்கு, வாய் போன்ற சளிச்சவ்வுகள் வழியாக மனித உடலில் பரவுகிறது. தென்கிழக்காசியாவில் இந்நோயைப் பரப்பும் முதன்மை விலங்குகளாக நாய்கள் திகழ்கின்றன.
சிங்கப்பூரில் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள், கண்காணிப்பு, பொதுமக்களின் விழிப்புணர்வு காரணமாகவே இந்நோய் பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது.
கடல்வழியாகக் கடத்தி வரப்படும் விலங்குகள் குறுகிய, காற்றோட்டமில்லாத இடங்களில் அடைக்கப்படுவதால் அவை சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகின்றன.
இதனால் நோய்த்தொற்று வேகமாகப் பரவும் அபாயமும் கணிசமாக அதிகரிக்கிறது. இதனைத் தடுக்க தேசிய பூங்காக் கழகத்தின்கீழ் இயங்கும் விலங்கு, கால்நடை மருத்துவச் சேவை அமைப்பு, தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதிக ஆபத்துள்ள வட்டாரங்களிலிருந்து கொண்டுவரப்படும் விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.
மேலும், கரையோர மீன் பண்ணைகள், உபின் தீவு போன்ற பகுதிகளில் வாழும் நாய்களுக்கு முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போடப்படுகிறது.
உரிமம்பெற்ற வளர்ப்பாளர்கள், செல்லப்பிராணி கடைகள் அல்லது விலங்குநல அமைப்புகளிடம் மட்டுமே மக்கள் செல்லப்பிராணிகளை வாங்க வேண்டும். சமூக ஊடகங்கள், இணையத்தில் சட்டவிரோதமாக விலங்குகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு உரிய உரிமம் பெறுவது கட்டாயம். கடத்தல் நடவடிக்கைகள் குறித்து தெரியவந்தால் 1800-476-1600 என்ற எண்ணில் நடவடிக்கை நிலையத்தைத் தொடர்புகொள்ளலாம். அல்லது www.avs.gov.sg/feedback இணையப்பக்கத்தில் தெரிவிக்கலாம்.
