தமிழ் இலக்கியங்களை அறிவியல், வாழ்வியல், சமூகவியல் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து கொணரப்பட்ட தகவல் துளிகள், தேசிய நூலகத்திற்கு வந்திருந்த தமிழ் ஆர்வலர்கள் மீது தெளிக்கப்பட்டன.
அண்ணாமலைப் பல்லைக்கழகம் (சிதம்பரம்), சென்னையின் கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம் (சிங்கப்பூர்) ஆகியவற்றுடன் சேர்ந்து பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றை கவிமாலை அமைப்பு தேசிய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன், தொடக்கவுரையாற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பின்னர், அதன் நோக்கவுரையை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பேராளர் முதுமுனைவர் அரங்கபாரி பகிர்ந்துகொண்டார்.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி, இலக்கியப் பாடத்திட்டத் தலைவரான முனைவர் மணிவண்ணன் முருகேசன் வாழ்த்துரை வழங்கி, சிங்கப்பூர் மக்களின் சார்பில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேராளர்களுக்கு நன்றி கூறினார். தொழில்நுட்பம் வழி இளையர்களுக்குத் தமிழ் கற்பிப்பதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உரையாற்றியோருடன் தமிழ்ப் பேராசிரியர் சுப. திண்ணப்பன் மேடையில் அமர்ந்தவண்ணம் கெளரவிக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட 50 பேராளர்கள் தமிழகத்திலிருந்து வந்து தங்கள் கட்டுரைகளைப் படைத்தனர்.
இந்நிகழ்ச்சியின்போது வாசிக்கப்பட்ட கட்டுரைகளை நூலாகத் தொகுத்து ‘பன்முகம் நோக்கி தமிழ் இலக்கியம்’ என்ற தலைப்பில் தமிழறிஞர் சுப திண்ணப்பன் வெளியிட, திரு தினகரன் அதைப் பெற்றுக்கொண்டார். முனைவர் மணிவண்ணனும் தமிழர் பேரவைத் தலைவர் தா.பாண்டியனும் தொடர்ந்து அதைப் பெற்றுக்கொண்டனர். அந்த நூல் அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழர் அறம், அறிவியல், வாழ்வியல், பாலினம், பொருளியல், வணிகவியல், தொல்லியல் எனப் பல தலைப்புகள் குறித்து கருத்தரங்கத்தில் பேசப்பட்டது.
மொத்தம் எட்டு அமர்வுகளாக 50 பேர் கட்டுரை படைத்தனர். அறம் என்ற கருப்பொருளில் இளையர்கள் பங்கேற்று, எழுத்தாளர் ஜெயமோகனின் ‘அறம்’ தொகுப்பிலிருந்து ‘யானை டாக்டர்’, வ.வு.சிதம்பரம் பிள்ளையின் ‘மெய்யறம்’, ‘தமிழ் ஹைக்கூ’ கவிதைகளில் ‘ஜெய்ன் தத்துவம்’, ‘திணைக் கோட்பாடுகளில் அறம்’ எனக் கிட்டத்தட்ட 50 வெவ்வேறு தலைப்புகளில் தமிழக, சிங்கப்பூர் படைப்பாளர்கள் ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்தனர்.
குறுகிய நேரத்திற்குள் ஆய்வாளர்கள் அனைவரும் பேச வேண்டிய சூழலில் நிகழ்ச்சி விறுவிறுப்பாகச் சென்றது. நேர வரம்பை மீறியோரையும் நிகழ்ச்சி நெறியாளர்கள் நயமாக சமாளித்தனர்.
நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினரும் ‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ சமய நல்லிணக்கத் தலைவருமான அ.முகம்மது இர்ஷாத் ஆற்றிய நிறைவுரையில், சிங்கப்பூரில் சிறுபான்மைச் சமூகமான தமிழ்ச் சமூகம், இந்நாட்டுக்கு ஆற்றியுள்ள பெரும்பங்குகளை நினைவூட்டினார்.
கவிமாலை அமைப்பின் நிகழ்ச்சிகளுக்கென உரித்தான மாறுபட்ட அம்சம் இந்நிகழ்ச்சியிலும் இருந்தது. நிறைவு நிகழ்வில் ஒயிலாட்டம், பரதநாட்டியம் எனக் களைகட்டியது. அதில், திருக்குறள் பாடல்களுக்கு முதிர்ந்த சீனப் பெண்கள் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.
பங்கேற்பாளர்கள், ஆதரவாளர்கள், ஆய்வுக் கட்டுரை படைத்தவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

