படிக்காத மின்னஞ்சல்கள், அதிக வேலைப்பளு, ஈடுகட்ட முடியாத கால வரையறைகள் என வேலை சார்ந்த கவலைகளை நாம் எதிர்கொள்வதுண்டு.
ஆனால், இந்த கவலைகளைச் சமாளிக்க இயலாத ஒரு சிலருக்குப் பசியின்மை, உறக்கமின்மை, குறைந்த செயல்திறன் போன்ற மனநலப் பாதிப்புகள் ஏற்படலாம். இது, மனப்பதற்றமாக உருவெடுத்து ஒருவரை ஆட்டிப்படைக்கலாம்.
வேலை தொடர்பான மனப்பதற்றத்தைக் கையாள்வது முதலில் கடினமாக இருப்பினும், அது சாத்தியமே.
உணர்வுகளைப் புறக்கணிக்காதீர்
பதற்ற உணர்வுகளைப் புறக்கணிக்காமல் அவற்றை ஏற்பது சிரமமாக இருப்பினும் அதுவே தீர்வுக்கான முதல் படி. அவை இயல்பான எண்ணங்கள் என்பதை உணர்ந்த பிறகு, அடுத்தகட்ட தீர்வைப் பற்றி யோசிப்பது எளிதாகும்.
நேர நிர்வாகம்
2022ல் நடத்தப்பட்ட ‘தி அனாடமி ஆஃப் வொர்க்’ எனும் ஆய்வு ஒன்றில் வேலையால் ஏற்படும் மனச்சோர்வு, ‘இம்போஸ்டர் சிண்ட்ரோம்’ எனும் உளவியல் பிரச்சினைக்கு 42 விழுக்காட்டினர் ஆளாவது தெரியவந்தது. மேலும், மூன்றில் ஒருவர் தொழில்நுட்பத்தின் எதிர்மறை விளைவுகளை எதிர்கொள்கின்றனர்.
வேலைப் பளுவால் சோர்வு, வேலை செயல்திறன் மீது ஐயம் போன்ற சவால்களிலிருந்து ஊழியர்கள் மீண்டுவர முடியும். நேரத்தை வகுத்து பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து அலுவலக மேலதிகாரியுடன் மனம்விட்டு பேசுவது சிறந்தது.
நேரத்தை திறம்பட வகுப்பதால் முக்கியப் பணிகள் மீது அதிக கவனம் செலுத்தலாம். வேலை நிறைவுற்றவுடன் மன நிம்மதி கிடைக்கும்.
நேரத்தைக் கண்காணிக்கவும் வேலை தொடர்பான மனப் பதற்றத்தைத் தணிக்கவும் உதவும் பல நேர மேலாண்மை உத்திகள் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
முதலில் செய்ய வேண்டிய பணிகளை பட்டியலிடுங்கள். சிறிய வேலைகளை முதலில் முடிக்க முயற்சி செய்யலாம். வேலை நாளைச் சிறு பகுதிகளாக பிரித்துக்கொள்ளலாம்.
வரம்பு வகுத்துக்கொள்ளுதல்
வீட்டிலிருந்தாலும் சிலர் வேலை அல்லது வேலை தொடர்பான எண்ணங்கள் மீது கவனம் செலுத்துகின்றனர். கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக பலரும் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், பலர் வேலை சார்ந்த வரம்புகளை அறிவதில்லை.
‘தி அனாடமி ஆஃப் வொர்க்’ ஆய்வில் 37% ஊழியர்கள் வேலை நாளைத் தொடங்கும், முடிக்கும் நேரத்தைத் தெளிவாக அறிந்திருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமான ஊழியர்கள், மின்னஞ்சல்களைச் சரிபார்க்க வேலை நேரத்திற்கு வெளியே வேலையைப் பற்றி சிந்திக்க அதிக நேரம் செலவிடுவதாகவும் கூறியுள்ளனர். இதனால் ஊழியர்கள் மோசமான வேலை-வாழ்க்கை சமநிலையைச் சந்திக்கின்றனர்.
வேலையிட வரம்புகளை வகுத்து அதை கடைப்பிடித்தால் மனப்பதற்றம் குறைய வாய்ப்புகள் உண்டு.
எடுத்துக்காட்டாக, ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குவது, வேலை நேரத்தில் மட்டும் பணியில் கவனம் செலுத்துவது, நேரம் தவறாமல் வேலையிடத்தை விட்டு வெளியேறுவது போன்ற வரம்புகளை வகுப்பதால் வேலை வாழ்க்கை தரம் மேம்பட்டு மனப்பதற்றம் குறையும்.
மனநலம் பேண ஓய்வு
நோய்வாய்ப்பட்டால் குணமடைய நம்மில் பலருக்கும் மருத்துவ விடுப்பு அளிக்கப்படும். அதேபோல, மனச்சோர்வு, மனப்பதற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு ஓரிரு நாள்கள் ஓய்வு பெறுவது சிறந்தது.
வேலைப்பளுவைப் பற்றி சிந்திக்காமல் ஓய்வு நாளில் புத்தகம் வாசித்தல், ஓவியம் வரைதல், உடற்பயிற்சி, யோகாசனம், நண்பர்களுடன் நேரம் செலவழித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
இதனால் மனப்பதற்றம் குறைந்து உற்சாகம் பிறக்கும்.
மனப்பதற்றத்தை எதிர்க்கும் நுட்பங்கள்
வேலை தொடர்பாக ஏற்படும் மனப்பதற்றத்தை எதிர்க்கும் நுட்பங்களைப் பயிற்சி செய்வதால் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இந்த நுட்பங்கள் மருத்துவ சிகிச்சை கிடையாது. ஆனால், அதிக அளவில் மனப்பதற்றத்தை உணரும்போது ஆழ்ந்த சுவாசப் பயிற்சி, நடைப்பயிற்சி, சிறிது நேரம் கணினி, கைப்பேசி பயன்பாட்டிலிருந்து விலகியிருப்பது நன்மை பயக்கும்.
வேலை தொடர்பான மனப்பதற்றத்தைக் கையாள்வது கடினமாக இருக்கலாம், ஆனால் அது கடக்க முடியாத ஒரு சவாலன்று. சரியான உத்திகள் மூலம் மனப்பதற்றத்தை நன்கு சமாளிக்கலாம்.

