ஒப்பனை விரும்பும் பெண்கள் பலரும் கன்னங்களைச் சிவப்பாக்கும் ‘பிளஷ்’ எனும் ஒப்பனை பொருளை அதிகம் வாங்குவார்கள். பிளஷ் பல நிறங்களில் வரும். அதை அணிந்து சிரிக்கும்போது ஒரு பெண்ணின் ஒப்பனை முழுமை பெறும். பல வண்ணங்களில் பிளஷ் இருந்தாலும் ஒருவர் தமது சரும நிறத்திற்கேற்ப பிளஷ் நிறத்தை வாங்க வேண்டும்.
ஒருவரின் சரும நிறம் மூன்று வகைப்படும். அவை ‘லைட்’, ‘மீடியம்’, ‘டீப்’ ஆகும். சரும நிறத்திற்கு அப்பாற்பட்டு ஒருவரின் சருமத்தின் மேல்பரப்பிற்கு கீழ் ‘அண்டர்டோன்’ எனப்படும் இயற்கை வண்ணம் உள்ளது.
‘அண்டர்டோன்’களும் மூன்று வகைகளில் உள்ளன. அவை ‘கூல்’, ‘வோர்ம்’, ‘நியூட்ரல்’ ஆகும். ஒருவருடைய ‘அண்டர்டோன்’ எந்த வண்ணம் என்று தெரிந்துகொள்ள மணிக்கட்டு சருமத்திற்குக்கீழ் இருக்கும் நரம்புகளின் வண்ணத்தைக் கவனிக்க வேண்டும்.
நரம்பு நீலம் அல்லது ஊதா வண்ணத்தில் இருந்தால் ஒருவரின் ‘அண்டர்டோன்’, ‘கூல்’ என்பதாகும். நரம்பு பச்சை வண்ணத்தில் இருந்தால் அது ‘வோர்ம் அண்டர்டோன்’. இரு வண்ணங்களும் கலந்திருந்தால் அது ‘நியூட்ரல்’ ஆகும். இவற்றை அறிந்து பிளஷ் நிறங்களை வாங்குவது சிறந்தது.
‘கூல் அண்டர்டோன்’
பெரும்பாலும் வெளிர் தோற்றத்தில் இருப்பவர்கள் அவர்களின் சரும நிறத்தை இன்னும் அழகாக எடுத்துக்காட்டும் பிளஷ் ஒப்பனையைப் பயன்படுத்துவது சிறப்பு. ‘பேபி பிங்க்’, ‘பீச்’, ‘ப்ளம்’ ஆகிய வண்ணங்கள் சரும அழகை மெருகூட்டும்.
வெளிர் நிற சருமம் இருந்தால் ‘பேபி பிங்க்’ வண்ண பிளஷ் அணிவது இயற்கையான தோற்றத்தை அளிக்கும். தோலின் நிறம் பளிச்சென்று இருந்தாலும் சற்று மாநிறம் கலந்த சருமம் இருப்பவர்கள் ‘பீச்’ நிற பிளஷ் அணிவது சிறப்பாக இருக்கும். அதுபோலத்தான் ‘பிளம்’ நிற பிளஷும். ஒப்பனை அணியும்போது ‘ப்ளம்’ நிற பிளஷ் குறைவான அளவில்தான் அணியப்பட வேண்டும். அந்நிறத்தில் அதிக அளவில் நிறமி இருப்பதால் அது இதர ஒப்பனையுடன் கலக்கப்படும்போது அதன் நிறம் வெளிப்படையாகத் தெரியாமல் போய்விடும்.
‘வோர்ம் அண்டர்டோன்’
‘வோர்ம் அண்டர்டோன்’ உள்ளவர்கள் பிரகாசமான நிறங்கள் கொண்ட பிளஷ் அணிவது சிறப்பாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ‘அப்ரிகாட்’, ‘பெர்ரி’ நிறங்கள் அவற்றில் அடங்கும். ‘அப்ரிகாட்’ வண்ணம் ‘வோர்ம்’ நிற சருமத்துடன் கலக்கப்படும்போது அது ஒருவரின் முக ஒப்பனையை அழகாக எடுத்துக்காட்டும். ‘வோர்ம்’ நிற சருமம் இருப்பவர்கள் பளிச்சென்று காணும் பிளஷ் வண்ணத்தை அணிய விரும்பினால், அதற்கு ‘பெர்ரி’தான் உகந்த வண்ணம்.
‘நியூட்ரல் அண்டர்டோன்’
‘நியூட்ரல்’ நிற சருமம் இருப்பவர்கள் சற்று மாறுபட்ட பிளஷ் வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கலாம். ‘வோர்ம்’, ‘பீச்’, ‘ரோஸ்’, ‘பிரோன்ஸ்’, ‘காப்பர்’ எனப் பல நிறங்களில் பிளஷ் வண்ணங்களைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம். சாதாரண ‘பீச்’ நிறத்தைவிட ‘வோர்ம் பீச்’ நிறம் சற்று வேறுபடும். அது ஒப்பனை செய்பவர்களுக்கு இயற்கையான தோற்றத்தை அளிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
‘ரோஸ்’ இளஞ்சிவப்பு வண்ணமாக இருந்தாலும் அது அன்றாடப் பயன்பாட்டுக்குச் சிறந்த பிளஷ் நிறம். அதை அணியும்போது முகத்தில் அதிக அளவில் பிளஷ் பூசியது போன்ற உணர்வு இருக்காது.
‘பிரோன்ஸ்’ வண்ணம் பிரகாசமான தோற்றத்தை அளிக்கும். வெயிற்பட்ட மேனிறம் உள்ளவர்களுக்கு ‘ப்ரோன்ஸ்’ நிற பிளஷ் சிறந்த தேர்வாக இருக்கும். அதேபோலதான், ‘காப்பர்’ நிற பிளஷ் வண்ணமும். இதைச் சிறிதளவில் மட்டும் பூசினால் போதும். சருமம் மெருகாகும்.

