தோட்டக்கலையில் ஆர்வமுள்ளவர்கள் புதிய உத்திகளைப் பயன்படுத்தி அவர்களின் தோட்டத்தை மெருகூட்ட பல வழிகள் உள்ளன. தோட்டக் கலைஞர்கள் பலர் நீடித்த நிலைத்தன்மையில் கவனம் செலுத்துகின்றனர். அவ்வகையில், எந்தெந்த வழிகளில் ஒருவர் தம் தோட்டத்தின் எழிலைக் கூட்டலாம் என்பதைக் காணலாம்.
உணர்வியல் தோட்டக்கலை
பார்ப்பதற்கு எழில் மிக்கதாக இருப்பதுடன், ஒருவரின் ஐம்புலன்களையும் தூண்டும் உணர்வியல் தோட்டங்கள் அதிகம் வலம் வருகின்றன. இவ்வகை தோட்டக்கலை, மனவுளைச்சலைக் குறைப்பதற்கு அப்பாற்பட்டு ஒருவர் இயற்கையுடன் மேலும் தொடர்புகொள்ளவும் உதவுகிறது. குருவி கீச்சிடும் ஒலியைக் கேட்பதிலிருந்து, புற்களை தொட்டுப் பார்ப்பது வரை ஐம்புலன்களும் ஈடுபடுத்தப்படுகின்றன.
உணவு மிகுந்த வனம்
வீட்டில் உணவுக்காகச் செடிகளை வளர்ப்பது புதிதன்று. ஆனால், அது அண்மைக்காலமாக பிரபலமடைந்து வருகிறது. நீடித்த நிலைத்தன்மையைக் கருத்தில்கொண்டு தன்னிறைவு அளிக்கும் வகையில் ஒருவர் தமது தோட்டத்தில் பல செடி கொடிகளை நட்டு அதிலிருந்து உணவு வகைகளைத் தயாரிக்கலாம்.
‘கோதிக்’ தோட்ட வடிவம்
தோட்டம் என்றால் வண்ணமயமாக இருக்கவேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்ப்பதே. ‘கோதிக்’ தோட்ட வடிவமைப்பு தற்போது பிரபலமாகி வருகிறது. கறுமை நிறங்களில் பூக்கும் பூ, கோதிக் வடிவமைப்பு தழுவிய பொம்மைகள், மட்பாண்டங்கள் போன்றவற்றை தோட்டக்கலையில் சேர்த்தால் அழகாக இருக்கும்.
வெப்பமண்டலத் தாவரங்கள்
வெப்ப மண்டலங்களில் வாழாவிட்டாலும் பல வண்ணங்களால் கண்களுக்கு விருந்தளிக்கும் வெப்பமண்டலத் தாவரங்களைத் தோட்டத்தில் வளர்ப்பது எழிலைக் கூட்டும். எடுத்துக்காட்டாக, பொத்தோஸ், பாம்பு கற்றாழை போன்ற செடிகள் வெப்பமண்டலத் தாவர வகைகளில் அடங்கும்.
அலங்காரப் புற்கள்
தோட்டத்தில் சிறிய வெற்றிடம் இருக்கும்போது அதை நிரப்ப அலங்காரப் புற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இடத்தை நிரப்ப அவற்றை வளர்ப்பதற்குப் பதிலாக அழகுக்கு வளர்த்தால் சிறப்பு. அலங்காரப் புற்கள் கடுமையான வெப்பத்தை தாங்கக் கூடியவை, அவை எளிதில் வளரக்கூடியவை, கடினத்தன்மை உள்ளவை.
அதிகபட்ச அலங்கரிப்பு
எளிய பாணியில் தோட்டத்தை அலங்கரிக்க விரும்புவோர் ஒரு மாற்றத்திற்கு அதிக அலங்காரங்களைச் சேர்க்க முனையலாம். பலதரப்பட்ட பூக்கள், செடிகள், கண்களைக் கவரும் கவர்ச்சியான நிறங்கள் கொண்ட தாவரங்கள், எண்ணிக்கையில் அதிகமாக தாவரங்களை வளர்ப்பது போன்றவற்றைச் செய்யலாம்.
புல்வெளிக்கு மாற்றுத் தெரிவுகள்
தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்கவும் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பாக இருக்கவும் பல தோட்டக் கலைஞர்கள் புல்வெளிக்கு மாற்றுத் தெரிவுகளை நாடி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
மகரந்தகாவி தோட்டங்கள்
வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள், தேன் சிட்டு பறவைகள் போன்ற மகரந்த சேர்க்கையாளர்கள் இயற்கைக்கு மிக அவசியம். அவற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை பலரும் தற்போது அறியத் தொடங்கியுள்ளனர். அதனால் டெய்சி மலர்கள், லாவெண்டர், ஹனிசக்கள்ஸ் போன்ற தாவர வகைகளைத் தோட்டத்தில் வளர்க்கலாம். அவை மகரந்தச் சேர்க்கையாளர்களை ஈர்க்கக் கூடியவை.