கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையத்தில் 2025க்கு அமோக வரவேற்பு

3 mins read
e180e901-485b-4727-90b8-de1826ac9b0f
புத்தாண்டுக் குதூகலத்தில் வெளிநாட்டு ஊழியர்கள். - படம்: ரவி சிங்காரம்

முன்பெல்லாம் புத்தாண்டு என்றாலே வெளிநாட்டு ஊழியர் வையாபுரி கிருஷ்ணன், 37, லிட்டில் இந்தியாவிற்குச் சென்று நண்பர்களுடன் மதுபானம் அருந்துவார்.

ஆனால் தம் 14 வயது மகளுக்கும் மூன்று வயது மகனுக்கும் முன்னுதாரணமாக இருக்கவும் அவர்களது கல்விச் செலவுகளுக்காகப் பணம் சேமிக்கவும் மதுப் பழக்கத்தைக் கைவிட்டார் கிருஷ்ணன்.

வெளிநாட்டு ஊழியர் வையாபுரி கிருஷ்ணன், 37 (வலம்), நண்பர் ராஜாமணி சந்தோ‌ஷ்குமாருடன் (அவருக்குப் பின்னால்) வரிசையில் நிற்கிறார்.
வெளிநாட்டு ஊழியர் வையாபுரி கிருஷ்ணன், 37 (வலம்), நண்பர் ராஜாமணி சந்தோ‌ஷ்குமாருடன் (அவருக்குப் பின்னால்) வரிசையில் நிற்கிறார். - படம்: ரவி சிங்காரம்

“சென்ற ஆண்டு நான் என் குடும்பத்துடன் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றேன். ஊரில் பட்டாசு வெடித்தோம். இவ்வாண்டு நான் இங்கு வந்துவிட்டதால் யாரும் எதுவும் கொண்டாடவில்லை,” என சற்று வருத்தத்துடன் கூறினார் கிருஷ்ணன்.

கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையத்தில் இதுவரை காணாத அளவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் அவரது மனவருத்தத்தைச் சற்று போக்கின. மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ குழு, வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளிலும் ஆறு பொழுதுபோக்கு நிலையங்களிலும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

சிவப்பு வண்ணத்தில் வாணவேடிக்கைகளால் மிளிரும் வானம்.
சிவப்பு வண்ணத்தில் வாணவேடிக்கைகளால் மிளிரும் வானம். - படம்: ரவி சிங்காரம்

“இங்கு சுவையான உணவு, கூடுதலான குளிர்பானங்கள்கூட தருகிறார்கள். சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு சிறப்பாக நடைபெற்றதாகவும் நண்பர்கள் கூறினர்,” என்றார் கிருஷ்ணன்.

முதன்முறையாக, கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையத்தின் அருகிலிருந்த திறந்தவெளியில் வாணவேடிக்கைகள் வெடித்து புத்தாண்டு வரவேற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்காலிப் பாடகர் மோனீர் கான் பாட, வெளிநாட்டு ஊழியர்கள் பேரின்பத்தில் ஆடி கூக்குரலிட, பின்னிரவு 1 மணி வரை அவ்விடமே திருவிழாக்கோலம் பூண்டது.

கிட்டத்தட்ட பின்னிரவு 1 மணி வரை கொண்டாட்டம் தொடர்ந்தது.
கிட்டத்தட்ட பின்னிரவு 1 மணி வரை கொண்டாட்டம் தொடர்ந்தது. - படம்: ரவி சிங்காரம்

கொட்டும் மழையால் சந்தேகமான தொடக்கம்

மாலை 6 மணியளவில் கனமழை பெய்ததால், வாணவேடிக்கைகள் இடம்பெறுமா என்பது சற்று சந்தேகமாக இருந்தது.

ஆனால், மழையால் கொண்டாட்ட உணர்வை நனைக்கமுடியாது என்ற தீர்மானத்தோடு, வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடங்கள், வேலையிடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகளில் வந்திறங்கினர்.

இரவு 7 மணியளவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான விளையாட்டுகள் தொடங்கிவிட்டன. பெரிய திரையில் ‘அமரன்’ படம் திரையிடப்பட்டது, ஊழியர்களின் இன்பத்தை அதிகரித்தது.

சுவாரசிய விளையாட்டுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
சுவாரசிய விளையாட்டுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. - படம்: ரவி சிங்காரம்

இசை, நடனத்துடன் சூடுபிடித்த கொண்டாட்டம்

கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமான இசை, நடன நிகழ்ச்சி சற்று தாமதமாக இரவு 7.30 மணியளவில் தொடங்கியது. தமிழ்நாட்டுப் பாடகர்கள் அருள் பிரகாசம், செளந்தரியா, மக்களுக்குப் புத்துணர்ச்சியூட்டினர்.

தமிழ்நாட்டுப் பாடகர்கள் அருள் பிரகாசம், செளந்தரியா, மக்களுக்குப் புத்துணர்ச்சியூட்டும் வகையில் இனிமையான, உற்சாகமான பாடல்களை மாறி மாறிப் பாடினர். 
தமிழ்நாட்டுப் பாடகர்கள் அருள் பிரகாசம், செளந்தரியா, மக்களுக்குப் புத்துணர்ச்சியூட்டும் வகையில் இனிமையான, உற்சாகமான பாடல்களை மாறி மாறிப் பாடினர்.  - படம்: ரவி சிங்காரம்
வெளிநாட்டு ஊழியர்கள் பரவசமடைந்தனர்.
வெளிநாட்டு ஊழியர்கள் பரவசமடைந்தனர். - படம்: ரவி சிங்காரம்

நேப்பாளத்தைச் சேர்ந்த நிகழ்ச்சி நெறியாளர், மலேசிய நடனக் குழுவின் ஆடல்கள் மேடையை அதிரவைத்தன. வெளிநாட்டு ஊழியர்களுக்கு இடையே நடனப் போட்டிகளும் நடைபெற்றன.

மோனீர் கானுக்கு அமோக வரவேற்பு

மோனீர் கானைக் காண ஓடிய வெளிநாட்டு ஊழியர்கள்.
மோனீர் கானைக் காண ஓடிய வெளிநாட்டு ஊழியர்கள். - படம்: ரவி சிங்காரம்

இரவு 10.30 மணி வரை தமிழ்ப் பாடல்களையே கேட்டுவந்த பங்ளாதேஷி ஊழியர்கள், பிரபல பெங்காலிப் பாடகர் மோனீர் கானை ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

அவர் செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் பாடிமுடித்துவர தாமதமாகிவிட்டது. மோனீர் கான் வருவதைக் கேட்டதும் ஊழியர்கள் திறந்தவெளித் திடலுக்கு ஓடினர். இரவு 11.20 மணிக்கு அவரும் பங்ளாதேஷி நகைச்சவை நடிகர் ஹருன் கிசிங்கரும் வந்தனர். நள்ளிரவு 12.20 மணி வரை அவர்கள் ஊழியர்களை மகிழ்வித்தனர்.

வெளிநாட்டு ஊழியர்களுடன் படம் எடுத்துக்கொண்ட மோனீர் கான் (இடது).
வெளிநாட்டு ஊழியர்களுடன் படம் எடுத்துக்கொண்ட மோனீர் கான் (இடது). - படம்: ரவி சிங்காரம்

நெடுநேரமாகத் தமிழ்ப் பாடல்கள் கேட்காததால் தமிழ் ஊழியர்கள் சிலர் ஆவேசமடைந்தனர். அதனால், மோனீர் கான் விடைபெற்றதும் தமிழ்ப் பாடல்கள் மீண்டும் ஒலித்தன.

2025ல் ஆசை, லட்சியம்

‘ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் ஏஸ்’ தொண்டூழியர் அலி முகமது அய்யுப், மோசடித் தடுப்பு, தவறான பழக்கங்களிலிருந்து மீள்தல் போன்றவற்றில் தாம் பெற்ற பயிற்சி மூலம் சக ஊழியர்களுக்கு உதவி வருகிறார்.

2019 முதல் வெளிநாட்டு ஊழியர் நிலையத்தில் தொண்டாற்றிவரும் ‘ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் ஏஸ்’ தொண்டூழியர் அலி முகமது அய்யுப்.
2019 முதல் வெளிநாட்டு ஊழியர் நிலையத்தில் தொண்டாற்றிவரும் ‘ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் ஏஸ்’ தொண்டூழியர் அலி முகமது அய்யுப். - படம்: ரவி சிங்காரம்

“நான் சிங்கப்பூரில் பணியாற்றத் தொடங்கியபோது பல விஷயங்களில் சிரமப்பட்டேன். சம்பாதித்த பணம் குடும்பச் செலவுகளுக்கே போய்விட்டது. 2025க்கான என் லட்சியம், கூடுதலாக சேமிப்பதே,” என்றார் அவர்.

“பாதுகாப்பாக பணியாற்றி வீடு திரும்பவேண்டும். 2025ல் அதுவே என் ஆசை,” என்றார் ராஜாமணி சந்தோ‌ஷ்குமார்.

அதிர்‌ஷ்டக் குலுக்கலில் சாம்சங் எஸ்24 பெற்று புத்தாண்டை சிறப்பாகத் தொடங்கிய சிவலிங்கம் சிலம்பரசன்.
அதிர்‌ஷ்டக் குலுக்கலில் சாம்சங் எஸ்24 பெற்று புத்தாண்டை சிறப்பாகத் தொடங்கிய சிவலிங்கம் சிலம்பரசன். - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்