உச்சந்தலையில் அரிப்பும் செதில்களும் ஏற்பட என்ன காரணம்?

உச்சந்தலையில் அரிப்பும் செதில்களும் ஏற்பட என்ன காரணம்?

படம்: பிக்சா பே

25 Nov 2026 - 5:30 am

2 mins read

உலக மக்கள்தொகையில் ஏறத்தாழப் பாதிப் பேர் தலையில் ஏற்படும் பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இவ்வாண்டு வெளிவந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது. தலையில் அரிப்பு ஏற்பட்டு, தோல் செதில்கள் முடி அல்லது தோள்களில் உதிர்ந்து ஆடைகளில் வெள்ளைப் புள்ளிகளாகப் படிவதைப் புறக்கணிப்பது கடினம்.

பொடுகு என்பது மிகவும் பொதுவானது என்றாலும், அது வந்து செல்லக்கூடிய, கட்டுப்படுத்தக்கூடிய ஒரு நீண்டகாலப் பிரச்சினை என்று ‘யுசிஎல்ஏ ஹெல்த்’ தோல் மருத்துவப் பேராசிரியர் டாக்டர் கரோலின் கோ தெரிவித்தார். எண்ணெய்ச் சுரப்பிகள் அதிகம் உள்ள தலையில் செதில் தடிப்புகளை ஏற்படுத்தும் ‘செபோரிக் டெர்மடைடிஸ்’ எனும் அழற்சியின் மிதமான வகையே பொடுகு என ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ஆடம் ஃபிரைட்மேன் கூறினார்.

தோலில் இயற்கையாக வாழும் ‘மலசீசியா’ ஈஸ்டின் அதிகப்படியான வளர்ச்சி, கூடுதல் எண்ணெய் உற்பத்தி, அழற்சி ஆகியவை சருமத் தடுப்பைப் பலவீனப்படுத்தி அரிப்பையும் செதில்களையும் ஏற்படுத்துவதாக டல்லாஸ் தோல் மருத்துவர் ஒயெடேவா அசெம்பா விளக்கினார். பொடுகு தலையில் மட்டுமே ஏற்படும். இப்பிரச்சினையின் பிற வகைகள் உடலின் பிற பகுதிகளிலும் வரலாம். தீவிர நிலையில் வலுவான ஷாம்பு, பூஞ்சை எதிர்ப்புக் களிம்பு அல்லது மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

பொதுவாக, செலினியம் சல்பைடு, கீட்டோகோனசோல் உள்ளிட்டவற்றைக் கொண்ட பொடுகு ஷாம்புக்கள் மூலம் இதைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், தடிப்புத்தோல் அழற்சி, ஒவ்வாமைத் தோலழற்சி, சிறார்களிடையே பரவும் ‘டீனியா கேபிடிஸ்’ எனும் பூஞ்சைத் தொற்று, நிரந்தர முடி உதிர்வை ஏற்படுத்தும் தழும்புப் பிரச்சினைகள் ஆகியவையும் தலையில் செதில்களை உருவாக்கலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இதைச் சமாளிக்க, வழக்கத்தைவிட அடிக்கடி தலைமுடியை அலசித் தலையைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குறைவாக அலசினால் எண்ணெய் படிந்து பிரச்சினை அதிகரிக்கும். பொடுகு ஷாம்பூவைத் தலையில் தேய்த்துச் சில நிமிடங்கள் ஊறவைத்து அலச வேண்டும்.

வாசனைத் திரவியங்களைக் கொண்ட பொருள்களைத் தவிர்க்க வேண்டும். ஒரு மாதத்திற்குப் பிறகும் அரிப்பு நீடித்தாலோ, முடி உதிர்வு, வலி, கொப்புளங்கள் ஏற்பட்டாலோ தோல் மருத்துவரை அணுகித் தொடர் பராமரிப்பு பெறுவதே சிறந்த தீர்வாகும்.

குறிப்புச் சொற்கள்