ஆகாரத்தில் காரத்தின் அதிகாரம்

ஆகாரத்தில் காரத்தின் அதிகாரம்

2 mins read
34d6c8af-ee83-4e42-872d-c5b3d511df8b
காரத்திற்கு நம்மில் பலர் அடிமையாக இருக்கலாம். என்றாலும், அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை அறிந்துகொள்வது நல்லது. - படம்: பிக்சாபே

தமிழர்கள் விரும்பும் காரக்குழம்பு, கொரிய உணவில் பிரபலமான கிம்ச்சி, தாய்லாந்தின் தொம் யாம் சூப் என பல்வேறு பண்பாடுகளிலும் காரம் ஓர் இன்றியமையாத சுவையாக விளங்குகிறது.

அவ்வகையில், பல்வேறு கார உணவுகளை நாம் சிங்கப்பூரிலும் சுவைத்து வருகிறோம். காரத்தின் வகை மாறுபட்டாலும் அதன் தன்மை என்றும் நாவில் நடனமாடும் வரை திடமானதாக இருக்கும். 

நம்மில் பலர் காரமான உணவு வகைகளை சாப்பிட்டு வளர்ந்தாலும், காரம் நம் உடல்நலத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறியாமல் இருக்கலாம். 

காரம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் 

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் பொதுவாக காரமான உணவு உண்ணும் சீனப் பெண்களுக்கு, காரம் சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடும்போது, உயர் இரத்த அழுத்தம் 26% குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆய்வில் பங்கேற்றவர்கள் ‘காரம்’ என்று கருதிய உணவு இரத்த அழுத்தத்திற்கு ஏற்றதாகக் கண்டறியப்பட்டது.

மிளகாயில் இருக்கும் கேப்சைசின் (capsaicin) சாறு அதிக உப்பு நிறைந்த உணவால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தைச் சமாளிக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர்.

இதனால் கூடுதல் காரம் பாதகமில்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

இதயத்திற்கு நல்லதா?

காரமான உணவைத் தொடர்ந்து சாப்பிடுவதற்கும் இதய நோய் மற்றும் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு அபாயத்தைக் குறைப்பதற்கும் இடையே ஒரு தொடர்பை ‘மாலிக்குலர் நியூட்ரிஷன் அண்ட் ஃபுட் ரிசர்ச்’ (Molecular Nutrition & Food Research) ஆய்விதழில் இடம்பெற்ற மதிப்பாய்வு ஒன்று கண்டறிந்தது.

வியர்வை சிந்த வைக்கும் காரமான உணவு இதயத்திற்கு நல்லது என்பதை உறுதிப்படுத்த முடியாது. எனினும், தொடர்ந்து காரமான உணவுகளை உண்பவர்கள் இறப்பு விகிதத்தைக் குறைத்துள்ளனர் என்று கண்டறியப்பட்டது. 

காரத்திற்கு நம்மில் பலரும் அடிமை. இருப்பினும், அதிக காரம் உண்பதால் உடலுக்குச் சில தீங்குகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

குமட்டல், செரிமானப் பிரச்சினை

அதிக காரம் உள்ள உணவை சாப்பிடுவதால் சிலருக்கு அடிவயிற்றிலிருந்து குமட்டிக்கொண்டு வரலாம். காரம், நம் உடலில் எரிச்சலை உண்டாக்கும். இதனால், நெஞ்செரிச்சல் அல்லது இரைப்பை அழற்சி போன்ற நிலை உள்ளவர்கள் தாங்கள் எவ்வளவு காரமான உணவை உண்கிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

குடல் அழற்சி, மலக்குடல் அழற்சி போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர், காரமான உணவை உண்ணும்போது மீண்டும் அந்த நோயின் அறிகுறிகளை எதிர்கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

குடல் எரிச்சல் இருந்தாலும் காரமான உணவுகளை உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், காரம் அந்நோயை மோசமாக்கிவிடலாம்.

இதயநலம், குறைந்த இரத்த அழுத்தம், மனநிறைவு என கார உணவால் நன்மைகள் விளைந்தாலும், செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள், காரமான உணவை அளவோடு சாப்பிட வேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

‘அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு’ என்ற பழமொழிக்கேற்ப, காரத்தையும் அளவோடு சேர்ப்பது நல்லது.

குறிப்புச் சொற்கள்