தேனீக்களில்லா உலகம் எப்படி இருக்கும்?

2 mins read
4d82dd88-91f2-4a03-b09b-b926dbafa986
மகரந்தச் சேர்க்கையிலும் உணவு உற்பத்தியிலும் முக்கிய பணியை ஆற்றி வரும் தேனீக்கள், சுற்றுச்சூழல் அமைப்பின் இன்றியமையாத பகுதியாக இருந்து வருகின்றன. - படம்: இணையம்

கடந்த சில ஆண்டுகளாகத் தேனீ இனத்தின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

இந்நிலை தொடர்ந்தால், 2119ஆம் ஆண்டுக்குள் உலகில் இருக்கும் அனைத்து பூச்சிகளும் அழிந்துவிடும் என்று 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது.

உலக மக்களின் வாழ்க்கைகளில் இது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மகரந்தச் சேர்க்கையில் தேனீக்களின் முக்கியத்துவம்

ஏறத்தாழ 85 விழுக்காடு மலரும் தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு இச்சிறு உயிரினங்களே காரணம்.

ஆரோக்கியமான உணவு வகைகளை நம் தட்டுகளுக்குக் கொண்டு சேர்க்கும் இத்தேனீக்கள் இல்லையெனில், நம் உணவுத் தேர்வுகள் மிகவும் குறுகியதாகவும் வரையறுக்கப்பட்டதாகவும் மாறிவிடும்.

ஆப்பிள், பாதாம், செர்ரி, வெள்ளரிக்காய் என நாம் உட்கொள்ளும் உணவில் மூன்றில் ஒரு பங்கு தோன்றுவதற்குத் தேனீக்களே பொறுப்பு.

தேனீக்களின்றி, இந்த உணவுகளின் விலை அதிகரிக்கலாம் அல்லது அவற்றின் விளைச்சலே இல்லாமல் போகலாம்.

காப்பி தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்குத் தேனீக்கள் அவசியம் அன்று எனினும், வலுவான உற்பத்திக்குத் தேனீக்களின் உதவி தேவை.

தேனீக்களின் மகரந்தச் சேர்க்கை உயர்தரம் வாய்ந்த பயிர்களுக்கும் வழிவகுக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

தேனீக்களின் மகரந்தச் சேர்க்கையால், பருத்தி மற்றும் எள் செடிகளில் 62 விழுக்காடு அதிக தரம்வாய்ந்த விளைச்சல் ஏற்படுகிறது.

எனவே, தேனீக்களில்லா உலகில், உணவு மட்டுமின்றி பஞ்சால் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கும் பஞ்சம் ஏற்படலாம்.

தேனீக்களும் பொருளாதாரமும்

மகரந்தச் சேர்க்கை செயல்பாட்டில் தேனீக்கள் ஆற்றும் பங்கு அதிக பயிர் விளைச்சலுக்கும் வழிவகுக்கிறது.

அமெரிக்காவில் மட்டும், தேனீக்களுடைய மகரந்தச் சேர்க்கை செயல்பாட்டின் மதிப்பு ஆண்டுதோறும் ஏறத்தாழ $15 பில்லியனை எட்டுகிறது.

தேனீக்களின் சரிவு பயிர் விளைச்சல் மட்டுமின்றி, இப்பயிர்களைச் சார்ந்திருக்கும் மற்ற பல துறைகளையும் பாதிப்பதால், உணவு விலை அதிகரிப்பு, விவசாயிகளுக்குக் குறைவான லாபம் ஆகிய விளைவுகளும் ஏற்படலாம்.

சரிவை இயக்கும் பருவநிலை மாற்றம்

இக்காலகட்டத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பூக்கள் பூப்பதற்கும் தேனீக்கள் தோன்றுவதற்கும் இடையிலான ஒத்திசைவில் இடையூறுகள் ஏற்படுகின்றன.

இதனால், தேனீக்களுக்குப் போதுமான உணவு ஆதாரங்கள் கிட்டுவதில்லை.

அவை தங்களுக்குத் தகுந்த வாழிடத்தையும் உணவையும் கண்டுபிடிப்பதில், வறட்சி, புயல் போன்ற கணிக்கமுடியாத இயற்கை பேரிடர்கள் இடையூறுகளாக விளங்குகின்றன.

குறிப்புச் சொற்கள்
தேனீஉணவுபயிர்சுற்றுச்சூழல்