மனத்தை ஈர்க்கும் பல பாடல்களை நாம் கேட்டிருந்தாலும், ஒருசில பாடல்கள் மட்டுமே தொடர்ந்து நம் மனத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
இதற்கு என்ன காரணம் என்ற கேள்வியை மையப்படுத்தி அமெரிக்காவின் டார்ட்மவுத் கல்லூரி ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
வழக்கமாக ஒரே பாடலைக் கேட்டல்
செவிப்புலன் புறணி (Auditory Cortex) என்றழைக்கப்படும் மூளையின் ஒரு பகுதி இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று இவ்வாய்வில் தெரியவந்துள்ளது.
பாடல்கள் அல்லது ஓசைகள் நம் காதுகளில் விழும்போது அவை தொடர்பான தகவல்களைப் பெற்று, அவற்றை மூளைக்கு அது அனுப்புகிறது.
இசை சார்ந்த நினைவுகளைச் சேமிக்கவும் அது உதவுகிறது.
அப்பாடலைக் கேட்பதுபோல் கற்பனை செய்யும்போதும் மீண்டும் மூளையின் இப்பகுதி செயல்படுத்தப்படுவதால், தானாக அப்பாடல் மனத்தில் ஒலிக்கத் தொடங்குகிறது.
அதோடு, தொடர்ந்து ஒரே பாடலைக் கேட்கும்போது, அத்தகவலைச் செவிப்புலன் புறணிக்குப்பின் அமைந்திருக்கும் ஒலிப்பு வளையத்திற்கு நம் மூளை அனுப்பி வைக்கிறது.
இதனால், அதே பாடலின் இசை தொடர்ந்து உள் உரையாடலாக மூளையில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
உணர்வுகளின் நிலை
நேர்மறையான மனநிலையோடு ஒரு பாடலைக் கேட்கும்போது, நம் மனம் இனிமையான நினைவுகளோடு அதைத் தொடர்புபடுத்திப் பார்ப்பதால், அப்பாடல் நம் மனத்தில் நிலைத்திருக்க அதிக வாய்ப்புகள் உண்டு.
மாறாக, எதிர்மறையான எண்ணங்களோடும் கசப்பான மனநிலையோடும் ஒரு பாடலைக் கேட்கும்போது, அப்பாடல் தொடர்ந்து மனத்தில் ஒலித்துக்கொண்டே இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
பெரும்பாலும் விரும்பத்தகாத நினைவுகளை நம் மனம் மறக்க முற்படும் என்பதால், மகிழ்ச்சியான தருணங்களோடு தொடர்புள்ள பாடல்களே மனத்தில் தொடர்ந்து ஒலிக்கும்.
ஆனால், ஒரு சிக்கல் நிறைந்த, கடினமான காலகட்டத்தில் தொடர்ந்து பல மாதங்களுக்கு ஒரே பாடலைக் கேட்கும்போது, அதைக் கசப்பான அக்காலகட்டத்தோடு தொடர்புப்படுத்தி நம் மூளை நினைவில் வைத்திருக்கும்.
பாடலின் அமைப்புமுறை
வழக்கமாக ‘கோரஸ்’ (chorus) என்றழைக்கப்படும் சேர்ந்திசை, தொடர்ந்து நம் மனத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கக்கூடும்.
வேகமான தாளம், கவர்ச்சிகரமான மெல்லிசை என மனத்தை ஈர்க்கும் பாடல்களின் கூறுகளே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.