பழங்களில் சத்துகள் பல நிறைந்துள்ளன. அவை சாப்பிடுவதற்கும் மிகவும் எளிது. ஆனால், பழங்களை எப்போது சாப்பிட வேண்டும் என்பது பற்றிப் பலரும் பல்வேறுபட்ட கருத்துகளைக் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், அவற்றில் எது சரி, எது தவறு என்பதை உணவு வல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
நமது உடலுக்குச் சத்துகள் கிடைக்க பழங்களை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
வெறும் வயிற்றில் பழங்களை உண்டால்தான் அவற்றிலுள்ள சத்துகள் முழுவதுமாய் உடலில் சேரும் என்பது பலரின் கருத்து.
ஆனால், மனிதனின் செரிமான மண்டலம் உணவிலிருந்து சத்துகளைப் பிரித்தெடுப்பதில் மிகவும் சிறப்பாகச் செயல்பட கூடியது.
உணவு உண்ணும்போது குடல்கள் முடிந்தவரை அதிக ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், வயிறு ஒரே நேரத்தில் மிகக் குறைவான அளவு உணவை மட்டுமே வெளியிடும்.
சிறுகுடல் கிட்டத்தட்ட ஆறு மீட்டர் நீளமுடையது என்பதால் செரிமானத்தின்போது ஊட்டச்சத்துகளை உறிஞ்ச நீண்ட நேரம் ஆகலாம்.
இதனால், பழங்களை உணவுடன் சேர்த்து சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் உடலில் அந்தச் சத்துகள் நன்றாகவே போய்ச் சேரும்.
தொடர்புடைய செய்திகள்
பழங்களில் உள்ள நார்ச்சத்து வயிறு உணவை வெளியிடும் வேகத்தைக் குறைத்தாலும் அவை செரிமானத்தின் வேகத்தைக் குறைப்பதில்லை.
மனித உடலின் செரிமான அமைப்பு எந்த நேரத்திலும் உணவை செரிமானம் செய்யும் தன்மை உடையது.
உணவை அதிக அளவில் உண்டால் அது தற்காலிகமாக உடலின் அதிக ரத்த ஓட்டத்தைச் செரிமான உறுப்புகளுக்குத் திசைதிருப்பச் செய்யும்.
இதற்கும் பழங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரவில் தூங்குவதற்கு முன்னர் பழங்களை சாப்பிட்டால் அது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்று பலர் கூறுவதுண்டு.
இதற்கு எந்த விதமான சான்றும் இல்லை. மேலும், உணவில் அதிகளவு காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்து கொள்வதால் உடலின் கொழுப்பளவு குறைந்து எடையும் குறையும்.
நீரிழிவு நோய் இருக்கும் பலர் பழங்களைத் தங்கள் உணவுகளில் தவிர்த்துப் பார்த்திருப்போம். பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை இருந்தாலும் பெரும்பாலான பழங்கள் குறைவான அல்லது மிதமான கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன.
இதனால் வெள்ளை அல்லது பதப்படுத்தப்பட்ட ரொட்டி போன்ற இதர மாவுச்சத்து உணவுகளுடன் ஒப்பிடும்போது அவை ரத்த சர்க்கரை அளவுகளில் கடுமையான உயர்வை ஏற்படுத்தாது.
உலர்ந்த பழங்களுக்கும் அன்றலர்ந்த (fresh) பழங்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று பலர் கருதலாம்.
இருவகை பழங்களுக்கும் உடல்நலத்தை மேம்படுத்தும் தன்மை உண்டு.
அன்றலர்ந்த பழங்கள் கனிமங்கள், வைட்டமின் சி சத்து நிறைந்தவை. அவற்றில் நீர்ச்சத்தும் அதிகமாக உள்ளது. உலர்ந்த பழங்கள் வைட்டமின்கள், கனிமங்கள், நார்ச்சத்துகான சிறந்த மூலங்களாகும்.
அவற்றிலுள்ள நீர்ச்சத்து அகற்றப்படுவதால் சர்க்கரை, கலோரிகள் அனைத்தும் மிகவும் சிறிய தொகுப்பிற்குள் குவிக்கப்பட்டு அதில் இயற்கை சர்க்கரையின் அளவும் கலோரியும் அதிகமாக இருக்கின்றன.
உடல் எடை குறைக்க நினைப்போர் உலர்ந்த பழங்களைக் கவனத்துடன் உட்கொள்ள வேண்டும்.
பழங்களைச் சாறு வடிவத்தில் குடிப்பதைவிட அவற்றை முழுவதுமாகக் கடித்து மென்று தின்பது கூடுதல் நன்மைதரும்.
பழச்சாற்றில் பெரும்பாலான வைட்டமின்கள், கனிமங்கள், தாவர வேதிப்பொருள்கள் இருந்தாலும் முழுப் பழங்களில் நன்மை பயக்கும் நார்ச்சத்து உள்ளது. இது பெரும்பாலான பழச்சாறு தயாரிப்பின்போது இழக்கப்படுகிறது.

