இந்த ஆண்டு எந்தெந்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளலாம் என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்கலாம். வழக்கமாகச் செல்லும் நாடுகளுக்கு அப்பாற்பட்டு, பலர் புதிதாக வேறொரு நாட்டிற்குச் செல்ல வேண்டுமென்று விருப்பம் கொண்டிருக்கலாம்.
அபுதாபி
உலகின் மிகப்பெரிய மின்னிலக்கக் கலை அருங்காட்சியகமான ‘டீம்லேப் பினோமினா’ அண்மையில் அபுதாபியில் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அடையாளமான ‘சையது தேசிய அருங்காட்சியகம்’ திறக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் வளம் கிடைத்து நாடு செழிப்படைவதற்கு முன்னர் அதன் ஒருங்கிணைந்த கனவுகள் எப்படி இருந்தன என்பதை அங்கு பார்வையாளர்கள் காணலாம்.
கலாசாரத்தைத் தாண்டி அபுதாபி தனது ‘தீம் பார்க்’ சுற்றுலாத் துறையிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. யாஸ் தீவின் பரந்த பொழுதுபோக்கு மண்டலம் விரிவாக்கப்பட்டு வருகிறது.
இதில் வார்னர் ‘பிரதர்ஸ் வேர்ல்ட்’ அபுதாபி, ‘ஹேரி பாட்டர்’ உலகத்திற்கான ஒரு புதிய பகுதியும் யாஸ் வாட்டர்வேர்ல்ட் சறுக்கு விளையாட்டுகள், சவாரிகள் நிறைந்த ஒரு மிகப்பெரிய பகுதியும் அமைக்கப்படுகின்றன.
அல்ஜீரியா
பிரம்மாண்டமான ரோமானிய இடிபாடுகள், வியக்கத்தக்க பாலைவன நிலப்பரப்புகள், பல்வேறு கட்டடக்கலை பாணிகளின் மயக்கும் கலவையைக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்கள் என அல்ஜீரியாவின் செழுமையான சுற்றுலாத் தளங்கள், அந்நாட்டின் மிகவும் சிக்கலான விசா நடைமுறையால் நீண்டகாலமாகப் பயணிகளுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளன.
2030ஆம் ஆண்டிற்குள் அனைத்துலகப் பயணிகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 12 மில்லியனாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ள அல்ஜீரியா, அதை எட்டுவதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா நிறுவனங்கள் மூலம் வரும் பயணிகளுக்கு ‘விசா ஆன் அரைவல்’ வசதியை அந்நாடு அறிமுகப்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கோஸ்டா ரிக்கா
இந்தச் சிறிய மத்திய அமெரிக்க நாட்டிற்குப் பயணம் மேற்கொள்வோர், வனவிலங்கு நிறைந்த இயற்கை எழிலும் மன அமைதி தரும் நல்வாழ்வும் ஓரிடத்தில் சங்கமிப்பதைக் காணலாம்.
குரங்குகளின் சத்தத்தைக் கேட்டு அதிகாலையில் கண்விழிப்பது, உயிரியல் ஒளி உமிழும் உயிரினங்கள் நிறைந்த அலையாத்திக் காடுகளின் நீரோடைகளில் துடுப்புப் படகு ஓட்டுவது அல்லது உலகத்தரம் வாய்ந்த அலைச்சறுக்கு விளையாட்டுகளில் ஈடுபடுவது என பல அனுபவங்களைப் பெறலாம்.
மேலும், கோர்கோவாடோ தேசிய பூங்காவின் ஆழமான பகுதிகளுக்கு நடைப்பயணம் செல்வதற்கு முன்பாக முறையான வழிகாட்டுதலுடன் கூடிய மூச்சுப்பயிற்சி, தியானம் அல்லது யோகா பயிற்சிகளையும் அங்கு மேற்கொள்ளலாம்.
கொமோடோ தீவுகள்
நீல வண்ண ஃபுளோரஸ் கடலிலிருந்து எழும் கொமோடோ தீவுகள், பூமியின் மிகச்சிறந்த வனவிலங்கு அரங்குகளில் ஒன்றாகத் திகழ்கின்றன.
யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தத் தேசியப் பூங்காவில் இளஞ்சிவப்பு மணல் கடற்கரைகள், சவன்னா குன்றுகளைச் சந்திக்கின்றன. பவளத் தோட்டங்கள் மந்தா திருக்கை மீன்களால் நிறைந்துள்ளன.
மொண்டினீக்ரோ
இறையாண்மை கொண்ட உலகின் மிக இளமையான நாடுகளில் ஒன்றான மொண்டினீக்ரோ, இந்த ஆண்டு தனது 20வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.
650,000க்கும் குறைவான மக்கள்தொகையையும் இல்லிரியன், ரோமன், ஒட்டோமான், யூகோஸ்லாவிய தாக்கங்களின் கலவையையும் கொண்ட இந்த இளம் பால்கன் நாடு, அரிதான அதன் கடற்கரைக்காகவே அறியப்படுகிறது.

