புற்றுநோய் பற்றிப் பலமுறை பல இடங்களில் கேட்டு அறிந்தபோதும் ஒருநாள்கூட அது தன்னைப் பாதிக்கும் என்று நினைத்ததில்லை என்று கூறுகிறார் 62 வயது திருவாட்டி விஜய் பாலா ராய்.
அதிலும் இரண்டு வகைப் புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட அவர் வாழ்க்கை வெறுமையால் சூழப்பட்டதாக உணர்ந்தார்.
கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2022ல் மார்பகப் பரிசோதனைக்குச் சென்ற திருவாட்டி விஜய்க்குக் காத்திருந்தது ஓர் அதிர்ச்சி.
பிள்ளைகளின் வற்புறுத்தலால் சோதனைக்குச் சென்ற அவருக்கு முதற்கட்ட மார்பகப் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.
“நான் மிகவும் அதிர்ந்துபோனேன்,” என்ற திருவாட்டி விஜய்க்குச் சிறிது காலத்துக்குப்பின் கர்ப்பப்பையிலும் புற்றுநோய்ப் பாதிப்பு தெரியவந்தது.
“நடந்ததை மாற்ற முடியாது. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்,” என்று தம்மைப் பக்குவப்படுத்திக்கொண்ட அவர், மார்பகத்தையும் கர்ப்பப்பையையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற ஒப்புக்கொண்டார்.
அதன்பின் ஒன்றரை ஆண்டுகள் ‘கீமோதெரப்பி’ சிகிச்சையை மேற்கொண்டு புற்றுநோயிலிருந்து அவர் முழுமையாக மீண்டுவந்தார்.
புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பிறகு
“என்னைவிடக் குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தேன். புற்றுநோய்க்குப்பின் என் நலனிலும் கவனம் செலுத்த முடிவெடுத்தேன்,” என்றார் திருவாட்டி விஜய்.
நண்பர்களின் மூலம் ‘365 புற்றுநோய்த் தடுப்புச் சமூகம்’ அமைப்பு குறித்துத் திருவாட்டி விஜய்க்குத் தெரியவந்தது.
2023ஆம் ஆண்டு முதல் அதன் கிளமெண்டி சமூக சேவை நிலையத்திற்கு வாரத்தில் மூன்று நாள்கள் சென்று ஓவியம், உடற்பயிற்சி ஆகியவற்றில் அவர் ஈடுபடுகிறார். ஓய்வு நேரத்தில் தியானம் செய்வதையும் அவர் பழக்கமாக்கிக்கொண்டார்.
மார்ச் மாதத் தொடக்கத்தில் ‘365 புற்றுநோய்த் தடுப்புச் சமூகம்’ ஏற்பாடு செய்த மூன்றாவது ‘நம்பிக்கையுடன் மலருங்கள்’ நிகழ்ச்சியில் மூன்று கிலோமீட்டர் நடைப்பயிற்சியிலும் திருவாட்டி விஜய் பங்கேற்றார்.
365 புற்றுநோய்த் தடுப்புச் சமூகம் இலவசமாக ஆண்டுக்கு ஏழு புற்றுநோய்ச் சோதனைகளை நீல நிற, ஆரஞ்சு நிற சாஸ் அட்டைகள் வைத்திருப்போருக்கு வழங்குகிறது.
அதோடு அந்த சமூகம் இலவச ஆலோசனைகளையும் புற்றுநோய் தொடர்பான தகவல்களுக்கான அமர்வுகளையும் நடத்துகிறது. சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் அதில் கலந்துகொள்ளலாம்.
புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த திருவாட்டி விஜய் போன்றோருக்கு வாழ்வில் புது நம்பிக்கையைத் தந்துள்ளது புற்றுநோய்த் தடுப்புச் சமூகம்.
“எனக்கு நடந்ததை மறந்து மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன். இது எனக்குக் கிடைத்த மறுவாழ்வு. இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்,” என்று தன்னம்பிக்கையுடன் சொன்னார் திருவாட்டி விஜய்.

