தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
உலகிலுள்ள பவளப்பாறைகளில் 75 விழுக்காடு அழிவின் அபாயத்தில் உள்ளன. சிங்கப்பூர் ஏற்கெனவே தனது பவளப்பாறைகளில் 60 விழுக்காட்டிற்கும் மேலாக இழந்துவிட்டது.

கடலடி காக்கும் பெண்கள்

2 mins read
62d1bc8c-26d8-4162-8908-e799b166a7fb
அக்டோபர் 2ஆம் தேதியன்று ‘தி ஓ‌‌ஷன் கலெக்டிவ்’ உச்சநிலை மாநாட்டில் சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தின் கடலடி இயந்திர மனிதர்கள் பற்றி விவரிக்கும் உதவிப் பேராசிரியர் மல்லிகா மெக்ஜானி.  - படம்: அனைத்துலகக் கடல்காப்பாளர்கள் சமூகம், ஆசியா

பவளப்பாறைகளைக் கட்டிக்காக்க அறிவியல்மூலம் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார் சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தின் (எஸ்யுடிடி) உதவிப் பேராசிரியர் மல்லிகா மெக்ஜானி.

அவர், எஸ்யுடிடி மார்வல் (Multi-Agent Robot Vision and Learning/MARVL) பயிற்சிக்கூடத்தின் இயக்குநராகப் பணியாற்றுகிறார். உலகிலேயே ரோபாடிக்ஸ் துறையில் பெயர்பெற்ற 50 முன்னணிப் பெண்கள் பட்டியலில் அவர் இடம்பெற்றுள்ளார்.

“சிங்கப்பூரின் நீர்ப்பரப்புகள் பெரும்பாலும் அதிகம் ஒளி ஊடுருவாத, மங்கலான தன்மையுடையவை. அதனால், எங்கள் நீரடி இயந்திர மனிதர்கள் (underwater robots) காணொளிகளைப் பதிவிடும்போது தொழில்நுட்பம்மூலம் அவை தெளிவாகக் காட்டப்படும்.

கடலடிப் பவளப்பாறைகளை ஆராயும் இயந்திர மனிதன்.
கடலடிப் பவளப்பாறைகளை ஆராயும் இயந்திர மனிதன். - படம்: எஸ்யுடிடி

“விஞ்ஞானி பவளப்பாறைகளை மட்டும் ஆராய விரும்பினால் அதுகுறித்த புகைப்படங்களையே - ஏதேனும் அரிய விஷயத்தைக் கண்டால் மட்டுமே - அனுப்பும்,” என்றார் முனைவர் மல்லிகா.

பவளப்பாறைகளை முப்பரிமாண முறையில் வரைபடமாக்குதல், கப்பலின் கீழ்ப்பகுதியை ஆராய்தல், எண்ணெய்க் கசிவுகளைப் பின்தொடரும் தானியங்கி மிதவைகள், அறிவார்ந்த முறையில் கடலடியை வரைபடமாக்குதல் போன்ற திட்டங்களையும் அவர் வழிநடத்துகிறார்.

கடந்த 2024ல் தேசியப் பூங்காக் கழகம் தொடங்கிய ‘100K பவளப்பாறைகள்’ இயக்கத்திலும் அவர் தன் குடும்பத்தினருடன் பங்கேற்றுவருகிறார்.

எண்ணெய்க் கசிவுகளைப் பின்தொடரும் தானியங்கி மிதவைகள்.
எண்ணெய்க் கசிவுகளைப் பின்தொடரும் தானியங்கி மிதவைகள். - படம்: எஸ்யுடிடி
கப்பலின் கீழ்ப்பகுதியை ஆராயும் இயந்திர மனிதன்.
கப்பலின் கீழ்ப்பகுதியை ஆராயும் இயந்திர மனிதன். - படம்: எஸ்யுடிடி

மகளின் உந்துதலால் சுற்றுச்சூழல்மீது அக்கறை

மகளின் உந்துதலால் சுற்றுப்புறத்தைக் காக்கும் முயற்சிகளை முன்னெடுக்கத் தொடங்கினார் ‘மாடர்ன் மேனிஃபெஸ்டோ வென்சர்ஸ்’ நிறுவனர் மாயா ஹரி. அந்நிறுவனம் பருவநிலை, சுகாதாரம், வர்த்தகம் தொடர்பான தொழில்நுட்ப முயற்சிகளில் முதலீடு செய்கிறது.

“அப்போது என் மகளுக்கு வயது 12. கிரேட்டா தன்பர்க் இயக்கம் புகழ்பெறத் தொடங்கிய தருணத்தில், “மற்ற நாடுகளிலுள்ள சிறுவர்கள் சுற்றுச்சூழலைக் காக்க என்னென்னவோ செய்கின்றனர். நாம் என்ன செய்கிறோம்?” என்று என் மகள் என்னிடம் கேட்டார்.

“அதனால், சில ஆண்டுகள் நாங்கள் வீட்டிலேயே செடிகளை வளர்த்து சமூகத்தினருக்குக் கொடுத்துவந்தோம். ஆனால், அது ஆழ்கடலில் ஒரு சிறு துளிதான் என்று உணர்ந்தோம். அப்போதுதான் என் அன்றாட வேலையையும் முதலீடுகளையும் தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தினுள் எடுத்துச் சென்றேன்,” என்றார் திருவாட்டி மாயா.

25க்கும் மேலான ஆண்டுகளாகத் தொழில்நுட்பத் துறையில் கூகல், டுவிட்டர் போன்ற நிறுவனங்களில் அவர் பணியாற்றியுள்ளார். பருவநிலைத் தரவுத் தொழில்நுட்ப நிறுவனமான ‘டெராஸ்கோப்’புக்கு மூன்று ஆண்டுகளாகத் தலைமை நிர்வாகியாகவும் அவர் இருந்தார்.

அதனால், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், முதலீடு என முத்தரப்பிலும் கடலின் நீடித்த நிலைத்தன்மையைக் குறித்து அவரால் ஆராய முடிகிறது.

செயற்கை நுண்ணறிவால் நன்மையா? தீமையா?

கடலைக் காக்கும் முயற்சிகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டையும் நன்மை தீமைகளையும் விளக்கிய ‘மாடர்ன் மேனிஃபெஸ்டோ வென்சர்ஸ்’ நிறுவனர் மாயா ஹரி. 
கடலைக் காக்கும் முயற்சிகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டையும் நன்மை தீமைகளையும் விளக்கிய ‘மாடர்ன் மேனிஃபெஸ்டோ வென்சர்ஸ்’ நிறுவனர் மாயா ஹரி.  - படம்: அனைத்துலகக் கடல்காப்பாளர்கள் சமூகம், ஆசியா

“செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் தரவு தொடர்பான துறைகள் மிகுந்த மேம்பாடு கண்டுள்ளன.

“எனினும், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தும் அளவு எரிசக்தியை நம்மால் உற்பத்தி செய்ய முடிவதில்லை. அனைத்து எரிசக்தியையும் தரவு நிலையங்களுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் பயன்படுத்தினால் மற்ற துறைகளுக்குக் கிடைக்கும் எரிசக்தி குறைந்துவிடும்,” என்கிறார் திருவாட்டி மாயா.

“செயற்கை நுண்ணறிவுக்குப் பயன்படும் தரவுகள் இணையத்திலிருந்தே பெரும்பாலும் கிடைக்கின்றன. உலகின் வடபகுதி அளவுக்குத் தென்பகுதியிலிருந்து தரவுகள் இணையத்தில் பகிரப்படாததால் ‘ஏஐ’ கட்டமைப்புகள் ஒருசார்புடையனவாக அமைந்துவிடலாம்.

“இன்று யார், எதற்காக ‘ஏஐ’யைப் பயன்படுத்துகின்றனர், அதற்கு எத்தகைய பயிற்சி வழங்குகின்றனர் என்பனவும் கருத்தில்கொள்ளப்பட வேண்டும்,” என்றும் அவர் விளங்கலாம்.

குறிப்புச் சொற்கள்